நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

Vinkmag ad

  ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.

  ‘வித்திய விசாரிணி’க்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது.

  ’வித்தியா விசாரிணி’ பின்னர் நாகூரிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் கவிதை, உரைநடை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறை அனைத்திலும் 19 ஆம் நூற்றாண்டில் முன்னணி வகித்தவர். பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். ‘நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்’ எனச் சிறப்பிக்கப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலரே அந்த இலக்கிய இதழியல் முன்னோடி.

  மொழிபெயர்ப்பு பணியில் 19 ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்தவர் நாவலர். தமிழக முஸ்லிம் அறிஞர்கள் அரபு, பார்சி, உருது நூல்களை மொழியாக்கம் செய்து வந்த காலகட்டம் அது. நெடிய ஆங்கில நாவலை – புதினத்தை தமிழில் மொழி பெயர்த்து அந்நாளில் தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தினார் குலாம் காதிறு நாவலர்.

  ஆங்கில நாவலின் பெயர் ‘omar’ ஒமர். அதை எழுதியவர் ரைனால்ட்ஸ் (G.W.M.Reynolds ) அந்த வரலாற்றுப் புதினம் நாகூர் நாவலரை வெகுவாக ஈர்த்ததால் அதை மொழிபெயர்க்கத் தொடங்கினார். பக்கங்கள் பெருகிக் கொண்டிருந்தன. மொத்தம் 900 பக்கங்கள். அதனால் ஒரே தொகுப்பாக வெளியிட முடியவில்லை.  ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ எனும் தலைப்புடன் 4 பாகங்களாக 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார் நாவலர்.

  கடல் கடந்து பல நாடுகளில் கலை இலக்கிய உலா வந்த நாவலரின் வாழ்க்கை வரலாறு நாடறிந்தது.

  1883 ஆம் ஆண்டில் குலாம் காதிறு நாவலர் நாகூரில் பிறந்தார். இவர் தந்தை பெயர் வாப்பு ராவுத்தர். அரபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார் நாவலர். தமது பெரிய தந்தை புலவர் பக்கீர் தம்பி சாகிபின் வேண்டுகோள்படி நாராயண் சுவாமி உபாத்தியாயிடம் பாடம் கேட்டு வந்தார். பின்பு வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமும் பாடம் கேட்டு வந்தார்.

  1901 ஆம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து மதுரையில் நான்காவது சங்கம் அமைத்தார். அச்சங்கத்தில் அரங்கேற்றிய ‘மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை’ இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அன்று ‘நக்கீரர் என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார்.

  பிரபு மதுரைப் பிள்ளையின் தர்பாரில் புலவரின் நூலொன்று அரங்கேற்றப்பட்டது. அதில் புலவருக்கு ‘நாவலர்’ என்று புகழ் நாமம் சூட்டப்பட்டது. நாவலரின் நூலொன்று யாழ்ப்பாணத்திலும் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது சுலைமான் லெப்பை ஆலிம், வித்துவான் பொன்னம்பலம்பிள்ளை மற்றும் பலரும் அதில் பங்கு கொண்டனர்.

  ஆரிபு நாயகம் 1896 இல் இலங்கையில் அரங்கேற்றம் கண்டது. முகவுரைக் குறிப்பில் இடம்பெற்றுள்ள சில வரிகள்: “ஆயுள்வேத பாஸ்கர வாப்பு குமாரர் வித்வ ஜன சேகரரும், நாகூர் தர்கா வித்வானும் ஆகிய குலாம் காதிறு நாவலர் இயற்றியது.

  “இது யாழ்ப்பாணம் மகா றா றா ஸ்ரீ அபூபக்கர் நயினார் பிள்ளை மரைக்காயர் குமாரர் பாக்கியப்பா என வழங்கும் மகா முகம்மது லெப்பை மரைக்காயர் முயற்சியைக் கொண்டு திருசிரபுரம் இலக்கண உபாத்தியாயர் கா.பிச்சை இப்றாகீம் புலவரால் பதிப்பிக்கப்பட்டது”.

  திருச்சியில் இயங்கிய சவுத் இந்தியா ஸ்டார் பிரஸ் எனும் அச்சகம் ஆரிபு நாயக காவியத்தை அச்சிட்ட குறிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது.

  நற்பெயர்

  ‘ஆரிபு நாயகம்’ நூலுக்கு இலங்கை பொன்னம்பலம் பிள்ளை பாயிரம் வழங்கிச் சிறப்பித்தார்.

நாகூ ரென்னும் நகர வாசன்

பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்

பற்பல விதமாப் பகர்பிர பந்தம்

பற்பல புராணம் பழுதறச் செய்தோன்

ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்

மாசு மதுரமாய் அமைத்திட வல்லோன்

தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்

தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்

பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு

நாவல னென்னு நற்பெயர் கொண்டோன்

  குலாம் காதிறு 9 வயதில் திருக்குர்ஆனையும் அரபுத் தமிழ் நூல்களையும் ஓதி முடித்தார். 12 வயதில் தமிழ்ப் பள்ளியில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

  மருத்துவத்துடன் தமிழ்ப் புலமையும் பெற்று விளங்கிய ராவுத்தர் 90 வயதில் காலமானதால் இளைஞர் குலாம் காதிறை பெரிய தந்தையார் பக்கீர் தம்பி சாகிப் பேணி வளர்த்தார். அவர் ரங்கூன் நகர சோலியா தெருவில் வர்த்தகம் நடத்தி செல்வாக்கு பெற்றவர். இளைஞர் குலாம் காதிறு 28 வயதில் பெரிய தந்தையையும் இழந்தார்.

  குலாம் காதிறு அக்கால வழக்கறிஞர் சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார். அவர், தமது தந்தை வாப்பு ராவுத்தரின் நண்பர். ‘ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து நூலாக்கும் திறனைக் கற்பித்த சரவணப் பெருமாளைப் போன்றே நாவலரின் அரபு மொழிப் புலமைக்கு ஆசானாக விளங்கியவர்கள் நாகூர் நூருத்தீன் சாகிபு காமில், முகியித்தின் பக்கீர் சாகிப் காமில் ஆகியோர் ஆவர்.

  குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை பேராசிரியர் ம.மு. உவைஸ், அறிஞர் எம்.ஆர். எம். அப்துற் றஹீம், ஆர்.பி.எம். கனி பேராசிரியர்  சி. நயினார் முஹம்மது, நாகூர் மு. ஜாபர் முகைதீன் முதலானோர் ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளனர்.

படைப்புகள்

  குலாம் காதிறு முதலில் தனிப் பாடல்களை எழுதத் தொடங்கினார். பதிகம், அந்தாதி, மாலை, கோவை, கலம்பகம், புராணம், காவியம், ஆற்றுப்படை, உள்ளிட்ட அனைத்து இலக்கியங்களையும் படைத்தார். வசன நூல்களை இயற்றினார். உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டார், அவருடைய படைப்புகளின் பட்டியல்கள் விரிவானது . அவை:

  ‘பிரபந்தத் திரட்டு சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை, முனாஜாத்து திருநகை யமக பதிற்றந்தாதி நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. ‘நாகூர்க் கலம்பகம்’ நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாகிப் அவர்கள் சிறப்பு விவரிப்பது கி.பி. 1878 இல் வெளிவந்தது.

  “முகாஷபா மாலை’ நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம் 13 படலங்கள், 300 பாடல்கள் கொண்டது. முதற் பதிப்பு 1899 ஆண்டு காரைக்கால் முகமது ஸமதானி அச்சகத்தில்  அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1983 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம். செய்யது முஹம்மது ‘ஹஸன்’ சென்னை மில்லத் பிரிண்டர்ஸ் ‘குவாலீர்க் கலம்பகம்’ ஹலறத் முகம்மது கெளது குலாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்கள் 1882 இல் அச்சில் வந்தது.

  ‘திருமக்காத் திரிபந்தாதி’ மக்கா நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் 1895 ஆம் ஆண்டு யாழ்ப்பானம் வச்சிர யந்திர சாலையில் அச்சிடப்பட்டது. “நாகூர் புராணம்” ஹஜ்ரத் சாஹூல் ஹமீது நாயகம் அவர்களின் வாழ்வு சிறப்பு கூறுவது. மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித்திரட்டு உள்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள். 1893 ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு, ஹலறத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள். 2373 விருத்தங்கள். 1896 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

  ‘ஆரிபு நாயகம், ‘பகுதாதுக் கலம்பகம்’ ஹலறத் கெளது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாத் நகர் சிறப்பு கூறும் 101 பாடல்கள். 1894 ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. ‘பதாயிகுக் கலம்பகம்’ ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900 இல் அச்சில் வந்தது.

  1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968 இல் வெளிவந்தது. பதிப்பித்தவர், டாக்டர்     ம.மு. உவைஸ் (இலங்கை)

  நாகூர் தர்கா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது “தர்கா மாலை” நாவலர் குலாம் காதிறு மகன் வா.கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928 ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள்  குறிப்பிடப்படவில்லை.

உரை நடை

  ‘மும்மணிக் கோவை’, ‘மக்கா கோவை’, ‘மதினாக் கலம்பகம்’, ‘பகுதாதுய மக அந்தாதி’, ‘சச்சிதானந்த மாலை’, ‘சமுத்திர மாலை’, ‘மதுரைக் கோவை’, ‘குரு ஸ்தோத்திர மாலை’, ‘பத்துஹுல் மிஸிர் பஹனாஷாப் புராணம்’.

  நாகூர் நாயகம் அவர்களின் அற்புத வரலாற்றை அழகிய தமிழ் உரைநடை நூலாக தந்தார். அந்நூல் ‘கன்ஸுல் கறாமாத்து’ என்னும் பெயரில் அச்சில் வந்தது. காலம் 1902.

   சீறாப்புராண வசனம், திருமணிமாலை வசனம், ஆரிப் நாயகம் வசனம், சீறா நபியவதாரப் படல உரை, சீறா நபியவதாப் படல உரை கடிலக நிராகரணம், நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம், இசை நுணுக்க இன்பம், அறபுத் தமிழ் அகராதி, மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம்.

  அதிரை நவரத்தின கவி காதிறு முஹ்யுத்தீன் அண்ணாவியாரின் பிக்ஹு மாலை’ உரை முதற்பதிப்பு 1890 ஆண்டில் வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பதிப்பு 1990 ஆம் ஆண்டு புலவர் அ. அஹ்மது பஷீர், வெளிக் கொணர்ந்தார். நாகூர் பெரியார் முஹ்யுத்தீன் பக்கீர் சாஹிப், காமில் என்கிற செய்யத் அப்துல் வஹ்ஹாப் ஆலிம் சாயிபு அவர்களின் ‘தறீக்குல் ஜன்னா’ உரை (ஹி 1335) இலக்கணக் கோடரி பேராசிரியர் திருச்சி கா.பிச்சை இபுறாஹீம் புலவரின் ‘திரு மதினத்தந்தாதி உரை’ (1893).

நாகூர்ப் புராணம்

  மகா வித்வான் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நூல்கள் அவரது வாழ்நாளிலேயே அச்சிடப்பட்டது. அவர் பெற்ற சிறப்பு. நாகூர்ப் புராணம் 1883 இல் படைக்கப்பட்டு 1893 ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது

  அவ்வாறே மற்ற காப்பியங்களும், நூல்களும் அவர் காலத்திலேயே அச்சிடப்பட்டதால் அவர் மாபெரும் பாக்கியசாலி என நாகூர்ப் புராணம் பற்றிய தமது ஆய்வில் எழுதியுள்ளார். ஓய்வுபெற்ற அதிகாரி ச.கா. அமீர் பாட்சா.

  தொட்டாலும் கை மணக்கும், சொன்னாலும் வாய் மணக்கும் எனப் போற்றப்படும் நாகூர்ப் புராணப் பாடல்கள் படிப்போர் நெஞ்சில் பதியக் கூடியவை. 1350 விருத்தப் பாடல்களில் ஒன்று:

மாணிக்க நகரமெனும் வடகடலின் உதித்தாங்கு

சேணிக்கை நாகூராம் தென்கடலின் மறையவெழுஉப்

பாணிக்க எவர் அகனும்ம அற்புதமாம் கதிர்பரப்பி

யாணிக்கை பெறும் ஷாகுல் கமீதென்னும் ஆதித்தன்

  “சாகுல் ஹமீது எனும் கதிரவன் – ஆதித்தன் மாணிக்கப்பூர் நகரமான வட கடலில் உதயமாகி நாகூர் எனும் தென்கடலில் மறைந்தது. அந்தச் சூரியன் வலம் வந்த எல்லா இடங்களிலும் அற்புதங்கள் எனும் கதிரைப் பாய்ச்சியது என்பது கருத்து.

  நாவலர் 19 ஆம் நூற்றாண்டில் அரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றுவதற்கு பிறர் வேண்டுகோளும் ஆதரவும் ஒரு காரணம். நாகூர் செல்வந்தர் சிக்கந்தர் ராவுத்தரின் விருப்பத்தை ஏற்று நாகூர்ப் புராணத்தைப் புலவர் இயற்றினார். திருநெல்வேலி – பேட்டை, திட்டச்சேரி, இராமநாதபுரம் என பல ஊர் அன்பர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று பல நூல்களை எழுதினார். அது தனி ஆய்வுக்குரியது.

  குலாம் காதிறு நாவலர் இயற்றிய ‘மதுரைக் கோவை’ அவரை இரங்கூன் நகருக்கு ஈர்த்துச் சென்றது. அந்நகரில் வாழ்ந்த மதுரைப் பிள்ளை ‘ராய் பஹதூர்’ பட்டம் பெற்றவர். இரங்கூனில் அந்தக் கோவையை அரங்கேற்றுவதற்காக நாவலரை அழைத்து உரிய சிறப்புகளைச் செய்தார் மதுரைப் பிள்ளை.

  நாவலரின் படைப்புகள் அனைத்தும் விரிவாக ஆராயத் தக்கவை.

புலவராற்றுப்படை

  குலாம் காதிறு நாவலரின் புலவராற்றுப்படை 220 அடிகளைக் கொண்ட இனிய படைப்பு.

  தமிழ் இலக்கியத்தில் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுண்டு. அவற்றுள் ஆற்றுப்படையும் ஒன்று. ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்துதல்’ அல்லது ‘வழிப்படுத்துதல்’ என்ற பொருளையுடையது.

  புலவராற்றுப்படையை டாக்டர் உவைஸ் 1968 நவம்பரில் மறுபதிப்பாக இலங்கையில் வெளியிட்டார்.

  “இவ்வாற்றுப்படை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதாயினும், பழங்கால ஆற்றுப்படைகளைப் போல் சொல்நயம், பொருள்நயம், அமைந்துள்ளது. இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக் குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப்படையில் அமைக்காமல் பாடியிருப்பாரேயானால் இவ்வாற்றுப் படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே படிப்போர் எண்ணுவர். நடையும் பெரும்பாலும் சங்க கால ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சுவை, பொருட் செறிவு பொதிந்த இப்புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது” என்று முன்னுரையில் எழுதியுள்ளார் ம. மு. உவைஸ்

  புலவராற்றுப்படை குறித்த அவருடைய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி ‘எந்திர ஊர்தியில் மதுரையை விரைவில் சென்றடையலாம் என்ற குலாம் காதிறு நாவலர் தாம் சந்தித்த புலவருக்குக் கூறி உள்ளார்.

  இடியின் முழக்கத்தோடு மாறுபடுகின்ற சத்தத்தை உடைய இரும்பினாலான நான்கு உருளைகள் இரண்டு பக்கத்திலும் உருளும். காட்டிலே கூடி இருக்கின்ற கொள்ளிவாய்ப் பேயின் மூச்சைப் போன்று ஒலியை எழுப்புகின்றது. அங்ஙனம் ஒலிக்கும் எந்திரம் கக்குகின்ற மிக்க புகை குழலின் வாயில் சுழலுவதைக் கொள்ளுகின்றது. எந்திர ஊர்தியின் தொடுக்கப்பட்ட வண்டில்கள் மரவட்டையினது நடையைப் போன்று செல்கின்றன. அத்தகைய வண்டில்கள் பல எந்திர ஊர்தியில் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வண்டில்கள் பல நிரையாய் அமைந்துள்ளன. நீண்டு உள்ளன. அத்தகைய எந்திர ஊர்தியிலே ஏறிச் செல்க என தோழமை பூண்ட புலவருக்குக் கூறப்படுகிறது. இங்கே எந்திர ஊர்தி என்றது புகைவண்டியை. ஓர் ஆற்றுப்படையில் புகைவண்டி வருணிக்கப்பட்டுள்ளமை முதல் தடவையேயாகும். அந்தப் புகை வண்டியை நாகூர் குலாம் காதிறு நாவலர் பின்வருமாறு அற்புதமாகப் பாடி உள்ளார்.

உருமுறுமோ டுறலொழியின்

இருபுறனும் இருப்புருளை

நான்குருளைக் கான்குழுமும்

வா அய்கொள்ளிப் பேஎயுயிர்ப்பின்

ஒலித்துமிழுங் கலித்தூமங்

குழல்வாயிற் சுழல்கொள்ள

மரவட்டைச் செலவொப்பச்

செல்பாண்டில் பல்கொத்த

நெடுந்தொடரி னிரைநீண்டு

கடுங்காலிற் கழிவிசையின்

எந்திர வூர்தி…

  புகைவண்டியை வருணித்த ஆசிரியர் அந்தப் புகைவண்டியில் ஏறிச் சென்றால் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வது மட்டுமன்றி காட்சிகள் பலவற்றையும் காணக் கூடியதாக இருக்கும் என்கிறார். அங்ஙனம் புகைவண்டியில் சென்றால் அலங்காரமான பல காட்சிகளைக் காணலாம் என்று கூறுகிறார். அங்கே மக்கள் ஏறி இறங்கும் இடங்கள் பல உள்ளன. அத்தகைய இடங்களிலெல்லாம் அமுதம் போன்ற சுவைமிக்க உணவு வகைகளைப் பெறுவீர். இந்த நீண்ட பயணத்தை ஒரே நாளில் முடிக்கலாம் என ஆலோசனை வழங்கி உள்ளார்.

அந்தமில் காட்சி அணிபல காண்பிர்

வீறிய மாக்கள் ஏறிறங் கிடன்றொறும்

ஊறிய அமிழ்தின் உண்டிபல் பெறுகுவிர்

பன்னாள் நடந்தினர் மன்னா தெய்க்குங்

காலுழப் பறியா மாலுற செலவின்

மலைப் புறு நெடுவழி ஒருநாள் தொலைச்சிச்

சூடிய நறுமலர் வாடிய லுறாமுன்

நிதிமலி கூடலம் பதிவயிற் புகுவிர்”

முரண்பாடுகள்?

  “அறபில் கடுமையான அச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ்மொழி கண்டு ’அற்புத தமிழ் அகராதி’ ஒன்றை நாவலர் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளார். என்று டாக்டர் உவைஸ் தமது ஆய்வுக் குறிப்பில் கூறியுள்ளார்.

  “அப்துற் றஹீமும ஆர்.பி. எம். கனியும் நாவலர் அறபு – தமிழ் அகராதியை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில்  அறபு – தமிழ் அகராதி எழுதியவர். ஹக்கீம் பா. முஹம்மது அப்துல்லா சாகிபு. நாவலரும், மவுலவி ஹாஜி குலாம் றசூல் சாஹிபும் இந்நூலைப் பார்வையிட்டுள்ளனர்”. என்று தமிழ்ப் பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர் தமது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

  பிறரால் இயற்றப்பட்ட சில நூல்கள் நாவலர் எழுதியதாகத் தவறுதலாகச் சொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் “குலாம் காதிறு நாவலர் வரலாற்றில் சில முரண்பாடுகள்” என்ற கட்டுரையில்

கூறுகிறார். பகுதாத்க் கலம்பகம், மதீனா கலம்பகம், பத்ஹுல் மிஸ்ர் பஹன்ஷா, வசன காவியம், மக்கா கோவை, தறீக்குல் ஜன்னா உரை ஆகியவற்றை அகமது மரைக்காயர் பட்டியலிடுகிறார்.

  இவை முரண்பாடுகள் தாமா என்பதை ஆய்வாளர்களும் வாரிசுகளும் முடிவு செய்வது அவசியம்.

தமிழுக்குத் தாய்

  பத்திரிகையாளர், இலக்கியப் படைப்பாளர், பாவலர், உரையாசிரியர், நாவலர் என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வர் குலாம் காதிறு நாவலர் சந்தித்த எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் அதிகம். ‘வித்தியா விசாரிணி’ இதழை எதிர்த்த பத்திரிகையாளர்கள் அவருடைய திறனைப் பாராட்டத் தவறவில்லை. சுதேச மித்திரன் போன்ற நாளிதழ்கள் நாவலரின் நூல்களைப் பாராட்டி விமர்சனம் எழுதின.

  நாவலர் இயற்றிய பிரபந்த திரட்டு நூலை குறை கூறியவர்கள், அதனைப் ‘பிரபந்தத் திருட்டு’, ‘பிரபந்த இருட்டு’, ‘பிரபந்த குருட்டு’, ‘மருட்டு’ என்றெல்லாம் இழித்தும் பழித்தும் கூறியதுண்டு. அதனால் அவருடைய பணி தொய்வுறவில்லை.

  அவருடைய ‘திருமணி மாலை வசனம் பார்க்க விசனம்’ என்று செவத்த மரைக்காயர் எழுதினார். ‘பெரியார் கருத்தறியா பேதை குலாம் காதிறு’ என சாற்றுகவி வரைந்தார், சின்ன வாப்பு மரைக்காயர்.

  பேதையல்ல, தாம் ஒரு மேதை என்பதை மெய்ப்பித்தார் நாவலர். அவருக்குரிய அங்கீகாரத்தை தமிழுலகம் வழங்கிச் சிறப்பித்தது. திருச்சி தமிழ் ஆசிரியர், இலக்கணக் கோடரி, அ.கா. பிச்சை இப்றாஹீம், புலவர் நாவலரின் நண்பரானார். ஆசானாகவும், ஏற்றுக் கொண்டார். பதிப்புத் துறையில் ஒத்துழைப்பு நல்கினார்.

தண்டமிழுக்குத் தாயாகி பல புராணம்

  தகைய பலபிரபந்தம் வசன நூல்கள்

எண்டரவே இயற்றி உலகுவப்பத் தந்திட்டு

  எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்

பண்டனைய தமிழ்ச் சங்ப் புலவராற்றுப்

  படையோதிப் பெரிய விரல் படைத்து நாளும்

வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை

  மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை

  தமிழுக்குத் தாய் என போற்றப்பட்ட நாவலர் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

  அவர் அளவுக்கு மற்ற படைப்பாளர்களின் நூல்களுக்கு அணிந்துரையான ‘சாத்துகவி’ (சாற்றுகவி) வழங்கிய புலவர்கள் அந்நாளில் இல்லை. நாவலரிடம் சாத்துகவி பெற்ற புலவர் அணி ஒரு பெரும் பட்டியல்.

  திருச்சி பிச்சை இபுறாஹீம் புலவர், நாகூர் நூலாசிரியர்களான      மு. செவத்த மரைக்காயர், இ. பஷீர் முகியித்தீன், முகம்மது நயினா மரைக்காயர், செ. குலாம் முகமது மரைக்காயர், மீ. அல்லி மரைக்காயர், நாகபட்டினம், வெ.நாராயண சுவாமிப் பிள்ளை ஆகியோர் மட்டுமல்லர். வேளாங்கன்னி, அதிராம்பட்டணம், ஆவுடையார் பட்டணம், மகுமூது பந்தரான பரங்கிப்பேட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரப் புலவர்களும் நாவலரை நாடி வந்து சாத்துகவி பெற்றுச் சென்றுள்ளனர்.

  நாகூர் தர்கா ஆஸ்தான வித்துவான், வித்வசிரோன் மணி கல்வி கேள்விகளில் தனக்கு நிகரில்லாதவர், வலது கையில் இலக்கணம் எனும் ‘வாளும்’ இடது கையில் செய்யுள் எனும் கொடியும் பிடித்து தமிழ்க் குதிரையில் வலம் வருபவர் என சிலாகிக்கப்பட்டவர் என்று எழுதுகிறார் ச.கா. அமீர் பாட்சா.

அஞ்சலி

  திருக்குர்ஆனின் முப்பது அத்தியாயங்களுக்கும் உரை எழுத வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் நாவலர். அந்த நாட்டம்  நிறைவேறுமுன் 1908 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று இறையழைப்பை ஏற்று உலகைத் துறந்தார். (ஜனவரி 28 என்றும் சில நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்).

  குலாம் காதிறு நாவலர் – மகுதூம் கனி அம்மாள் தம்பதியருக்கு மக்கள் பேறு இல்லாததால் துணைவியின் வேண்டுகோளின்படி ஆமினா அம்மையாரை மணந்து கொண்டார். நாவலரின் 74 ஆம் வயதில் ஆரிபு பிறந்தார். பிள்ளையைப் பெற்றெடுத்த பத்தாம் நாள் அந்த அன்னை உயிர் துறந்தார். மறு ஆண்டில் நாவலர் காலமானார்.

  அவருடைய மறைவு தமிழுலகை உலுக்கியது. இதழியல் முன்னோடியான நாவலரின் மறைவுக்கு சுதேச மித்திரன், மறைமலை அடிகளின் ஞான சாகரம், காரை முகம்மது சமதானி, இலங்கை முஸ்லிம் நேசன் உள்ளிட்ட இதழ்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தின.

சந்ததி

  புதல்வர் வா.கு. ஆரிபு நாவலர் தந்தை வழியில் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். தந்தையார் மீது கையறுநிலைக் கவிதைகள் பாடினார். அதுவே அவருடைய முதல் நூல். நாவலரைப் போன்றே அவரும் நாகூர் தர்கா மகாவித்துவானாக விளங்கினார்.

  நாகூர் நாயகம் மீது 1946 ஆம் பிள்ளை தமிழ் இயற்றி வெளியிட்டார். பதிகம், கீர்த்தனை, முதலான பல்துறைக் கவிதைகளைப் படைத்தார். ஆரிபு நாவலரின் மீரான் சாகிப் முனாஜாத்து ரத்தின மாலை 1971 இல் வெளியிடப்பட்டது. உரைநடை நூல்களையும் அவர் எழுதி வந்தார். காட்டுவா சாகிப் வலி (என்கிற ஷாஹா பாவா பதுறுத்தீன் சாகிப் வலியுல்லாஹ்) அவர்களின் காரண சரித்திரம் 1960 ஜனவரி முதல் தேதி வெளியிடப்பட்டது. 9 அத்தியாயங்களைக் கொண்ட சுவையான நூல் அது.

  சென்னை, புதுக் கல்லூரி வளாகத்தில் 1974 இல் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் ஆரிபு நாவலர் சிறப்பிக்கப்பட்டார். ஆரவாரமின்றி அடக்கமாக இலக்கியப் பணியாற்றி வந்த அவர், 1976 ஆம் ஆண்டில் நாகூரில் உயிர் துறந்தார்.

  ஆரிபு நாவலரின் புதல்வர், குலாம் ஹுசைன் நாவலர் இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இயற்றிய சின்ன எஜமான் முனாஜாத்து, இரத்தின மாலை 2003 ஆம் ஆண்டு நாகூரில் வெளியிடப்பட்டது.

நாட்டுடமை

  குலாம் காதிறு நாவலரின் படைப்புகள் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம். அவர் மொழிபெயர்த்த உமறு பாஷா யுத்த சரித்திரம் 2001 இல் மறுபதிப்பாக வெளிவந்தது. (கல்தச்சன் பதிப்பம் அதனை வெளியிட்டது).

  இஸ்லாமியத் தமிழ் இலக்கிய, இதழியல் முன்னோடிகளின் அணியில் முன்னணி இடம் வகிப்பவர் நாகூர் நாவலரே ஆவார். அவர் ‘வித்தியா விசாரிணி’ இதழைத் தொடங்கிய 1888 ஆம் ஆண்டில் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், இலங்கையிலும் சில இதழ்கள் இயங்கி வந்தன.

  நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரரான நாவலர், செம்மொழி வள்ளல், பன்மொழிச் செல்வர், படைப்பிலக்கிய இமயம், தமிழக அரசு, குலாம் காதிறு நாவலரின் சந்ததியினருக்கு ஆறு லட்ச ரூபாய் அன்பளிப்பு வழங்கி அவருடைய ஒட்டுமொத்த இலக்கியப் படைப்புகளையும் நாட்டுடமையாக்கியுள்ளது. நாட்டுக்கும் நமது மொழிக்கும் கிடைத்த நற்பேறு.

நன்றி : சமநிலைச் சமுதாயம் – நவம்பர் 2007

News

Read Previous

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

Read Next

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!

Leave a Reply

Your email address will not be published.