1. Home
  2. வீட்டுக்குள்ளே

Tag: வீட்டுக்குள்ளே

வீட்டுக்குள்ளே நூலகம்

வீட்டுக்குள்ளே நூலகம்   தொழில்நுட்பத்தின் பெயரால் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்ட செல்போனும் கணினியும் நம் குழந்தைகளின் மழலைத்தன்மையைப் பறித்துவிடுகின்றனவோ என்று தோன்றுகிறது. சுற்றியிருக்கிறவர்களுடன் பழகாமல் சிறியவர்களும் பெரியவர்களும் மெய்நிகர் உலகத்துக்குள் மூழ்கிக் கிடப்பது உறவுப் பிணைப்பை வலுவிழக்கச் செய்கிறது. இன்று குழந்தைகளிடம் காணப்படும் பொறுமையற்ற தன்மைக்கும் இதுவே காரணம்.   யாரோ உருவாக்கிய மெய்நிகர் உலகிலிருந்து குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கான கனவுலகை அவர்களே அமைக்கும்படி செய்ய வேண்டுமல்லவா? அதற்குத்தான் கதைகளைக் கையிலெடுத்தேன். புதுச்சேரியில் செயல்பட்டுவரும் அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து குழந்தைகளுக்குக் கதைசொல்லியாக மாறியிருக்கிறேன். கதை கேட்டு வளரும் குழந்தைகள், பிறர் போட்டுவைத்திருக்கும் பாதையில் கடிவாளமிட்டபடி நடப்பதில்லை. அவர்களின் சிந்தனை விரிகிறது, கற்பனைக்குச் சிறகு முளைக்கிறது. தன்னை உணர்வதுடன் சுற்றி நடப்பவற்றையும் புரிந்துகொள்கிறார்கள்.   கதைகளைக் கேட்பதைப் போலவே புத்தக வாசிப்பும் குழந்தைகளை மேம்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கான புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு என் வீட்டிலேயே சிறு நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறேன். இரண்டு முதல் எட்டு வயதுவரையுள்ள குழந்தைகளுக் கான நூலகம் இது. இதில் நானூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு வரலாம்.   எளிமையான நடையில் இருக்கும் ஆங்கிலச் சிறார் புத்தகங்கள், குழந்தைகளின் மொழியறிவையும் சேர்த்தே வளர்க்கும். தமிழில் வெளிவரும் சிறுவர் இதழ்களும் இங்கே உண்டு. எதிர்காலச் சமூகம் அறிவில் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்றால் இளைய சமூகத்துக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்தானே. அதனால்தான் குழந்தைகளின் வாசிப்புக்காக என்னால் முடிந்த அளவுக்குப் புத்தகங்களைச் சேர்த்துவருகிறேன். நன்றி : ஆகஸ்ட் 9 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் பானுபிரியா ஜெகதீசன் எழுதிய கட்டுரை.