1. Home
  2. மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

Tag: மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்

மருத்துவர் எஸ்.எம்.சந்திரமோகன்   தன்னுடைய பணியை முழுக்கவும் மக்களை மையப்படுத்தி ஆக்கிக்கொள்ளும் எவரும் வரலாற்றில் இடம்பெற்றுவிடுகிறார்கள். மரணங்கள் வெறும் எண்ணிக்கை யாகிவிட்ட கொரோனா காலத்திலும், மருத்துவரான எஸ்.எம்.சந்திரமோகனின் மறைவு மருத்துவத் துறையைத் தாண்டி பலராலும் பேசப்படவும் தமிழ்நாடு அளவில் ஒரு பெரிய இழப்பாகவும் கருதப்படவும் காரணம் அதுதான். எப்போதும் அடித்தட்டு மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டார் சந்திரமோகன். ராயப்பேட்டை பொது மருத்துவமனையின் தொற்றாநோய்களின் மையத்தில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையை அவர் நிறுவினார்.  அமிலத்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பலரையும் சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இது எளிதான விஷயம் அல்ல. அமிலம் உணவுக் குழாயையும் இரைப்பையையும் அரித்துவிடும். அதன் பிறகு தண்ணீர்கூடக் குடிக்க முடியாது. அவர்களை மீட்டெடுக்க பல்வேறு ஆபத்தான அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும். இப்படி நூற்றுக்கணக் கானோரை சந்திரமோகன் காப்பாற்றியிருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். ‘தனியார் மருத்துவமனைக்குப் போய் பல லட்சங்கள் செலவழித்திருந் தாலும்கூட இப்படி ஒரு சிகிச்சை கிடைக்காது’ என்று சொல்லும் நிலையை அரசு மருத்துவமனையில் தன்னுடைய துறையில் அவர் உருவாக்கினார். அவரால் குணமடைந்தவர்களில் சிலர் பின்னாட்களில் அவரிடம் தன்னார்வலர்களாகப் பணியாற்றியது அவர்களுக்கு அவர் மீது இருந்த பிடிப்பை நமக்கு உணர்த்துகிறது.   நோயாளிகளை அவர் ஒருபோதும் வெறும் நோயாளிகளாக அணுகியதில்லை. எவ்வளவு வேலை இருந்தபோதும் தனது நோயாளிகள் ஒவ்வொருவரையும் பார்த்து அனுசரணையாக நான்கு வார்த்தைகள் பேசாமல் போக மாட்டார். ‘நம்பிக்கையைவிட ஒரு நோயாளிக்கு மருத்துவர் அளிக்கும் பெரிய சிகிச்சை வேறு எதுவும் இல்லை’ என்பார். இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் டாக்டர் சந்திரமோகன் பின்பற்றிய உத்திகளும் கண்டுபிடிப்புகளும் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, நோயாளிகள் தாங்களாகவே செய்துகொள்ளக்கூடிய வகையிலான ’செல்ஃப் டிலட்டேஷன்’ முறையும் அவற்றில் ஒன்று. குரல்வளை, உணவுக்குழாய், இரைப்பை ஆகியவற்றின் பாதைகள் குறுகலாவதைத் தடுக்க அவர் முன்வைத்த உத்திகள் இன்று உலக அளவில் பின்பற்றப்படுகின்றன.   தனது துறையில் சர்வதேச அளவில் முன்னணி நிபுணர்களில் ஒருவராக இருந்தாலும் சந்திரமோகன் பலரையும்போல, தனது நிபுணத்துவத்தை செல்வம் குவிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. 1990-களின் இடைப்பகுதியில் மூன்று மாதப் பயிற்சிக்காக நியூசிலாந்து சென்றபோது, அங்கே அவரது திறமையைப் பார்த்து அங்கேயே வேலைக்கு வந்துவிடும்படி கேட்டிருக்கிறார்கள். தான் பெற்ற கல்வியும் பயிற்சியும் தன்னுடைய தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்று கூறியவர், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இத்தனைக்கும் அப்போது இங்கே அரசு மருத்துவராக அவர் வாங்கிய சம்பளம் ரூ.20 ஆயிரம். அதுபோல 15 மடங்கு சம்பளம் தருவதாக அங்கே கூறப்பட்டதைத்தான் அவர் புறந்தள்ளினார்.   அரசு மருத்துவராக 31 ஆண்டு காலம் பணியாற்றிய சந்திரமோகன், ‘ஒரு அரசு மருத்துவராக இருப்பதில் உள்ள பெரிய சுகம் ஏழை மக்களோடு அன்றாடம் புழங்க முடிவதுதான்; உண்மையான சேவைக்கான அர்த்தத்தை அவர்கள்தான் உணர்த்துகிறவர்கள்’ என்று அடிக்கடி சொல்வார். மக்களின் சேவகரைக் காலமும் தமிழ் நிலமும் நினைவில் கொள்ளும்! – (ஜூலை 8 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து)