1. Home
  2. சுமக்கும்

Tag: சுமக்கும்

துயரத்தைச் சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்

துயரத்தைச் சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்   கரோனா காலத்தில் நாம் நலமாக இருப்பதற்காக நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்துவரும் தூய்மைப் பணியாளர்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு எதிர்மறைப் பதிலைத்தான் பெரும்பாலும் பெற முடிகிறது. சென்னை போன்ற பெருநகரில் சுகாதாரக் களப்பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுப்பு எடுக்க முடியாத நிலையில் பலர் பணிக்குத் தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.   “தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். சென்னையில் உள்ள 22,430 துப்புரவுத் தொழிலாளர்களில் 6,401 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மற்றவர்கள் தற்காலிக, மதிப்பூதிய, ஒப்பந்த ஊழியர்கள். தற்போது வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் களப்பணியாளர்களாக 13,000 பேரைத் தமிழக அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை, களப்பணியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு ஒரு முகக்கவசமும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கையுறையும் வழங்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், பெரும்பாலான ஆண் தூய்மைப் பணியாளர்கள் கைக்குட்டையையும் பெண் பணியாளர்கள் துப்பட்டாவையுமே முகக்கவசமாக அணிகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல்தான் பெரும்பாலானோர் பணியாற்றுகின்றனர். சென்னையில் மட்டும் முப்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்பது தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தனை உயிரிழப்புகளுக்குப் பிறகும் மாநகராட்சியோ அரசோ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இதுவரை எத்தனை பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலைக்கூடச் சேகரிக்காமல் அலட்சியத்துடன் உள்ளன. கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவியை வழங்க வேண்டும். கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தூய்மைப் பணியாளர்களுக்குக் கட்டாய பரிசோதனை மேற்கொண்டு, அவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் சென்னை மாநகராட்சியின் ‘செங்கொடி சங்க’ப் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு (ஜூலை 12 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் எல்.ரேணுகாதேவி எழுதிய கட்டுரையிலிருந்து)