1. Home
  2. கலீலியோ

Tag: கலீலியோ

மாபெரும் விஞ்ஞானி கலீலியோ

மாபெரும் விஞ்ஞானி கலீலியோ இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. அரசு மரியாதை செய்கிறது. அறிவியல் உலகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல்பரிசு கூடக் கிடைக்கிறது. 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனிமையாக இல்லை. அவர்களது கண்டுபிடிப்புகள்மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டுபிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்துகாத்திருந்தது. கோபர்நிக்கஸின் கண்டுபிடிப்புகளைப் பிரச்சாரம் செய்த ஜார்டானோ புரூனோ என்ற விஞ்ஞானி 1600-ம் ஆண்டில் மதவெறியர்களால் எரித்துக்கொல்லப்பட்டார். கலீலியோவும் மதவாதிகளின் தண்டனையை எதிர்கொள்ளவேண்டி வந்தது. 17 வயதிலேயே… கலீலியோ 1564-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பைசா நகரத்தில் பிறந்தார். 17 வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் சர்ச்சில் தொங்கவிடப்பட்டிந்த ஒருவிளக்கு காற்றில் ஆடுவதைக் கவனித்தார். அதன் அலைவீச்சு (swing) சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அது ஒரு  கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்லஒரே அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவருக்குத் தோன்றியது. அதை எப்படி சரிபார்ப்பது? அது கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத காலம். வல்லவனுக்குப் புல்லும்ஆயுதம் என்று தெரியாமலா சொன்னார்கள்? தனது நாடித்துடிப்பை வைத்தே தனது ஊகம் சரிதான் என்று கண்டுபிடித்தார் கலீலியோ. இப்படித்தான் அவர் ஊசலின் (simple pendulum) விதிகளைக் கண்டுபிடித்தார். இவரது பரிசோதனைகளை வைத்தே கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 25 வயதில் பைசா பல்கலைக்கழகத்தில் அவர் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார். பண்டிதர்களின் மொழியான லத்தீனில் போதிப்பதற்குப் பதில் பாமர மொழியானஇத்தாலி மொழியில் கற்பித்தார். 2000  ஆண்டுகளாகக் கொடிகட்டிப்  பறந்துவந்த அரிஸ்டாட்டிலின் சில கருத்துக்களை கலீலியோ கேள்வி கேட்கத் தொடங்கினார்.உதாரணமாக, வெவ்வேறு எடையுள்ள இரண்டு பொருட்களை உயரமான இடத்திலிருந்து ஒரே நேரத்தில் கீழே விட்டால் கனமான பொருள்தான் தரையை முதலில்வந்தடையும் என்பது அரிஸ்டாட்டிலின் “தத்துவம்”. இதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கலீலியோ சந்தேகம் கிளப்பியபோது, அவருடன் பணியாற்றிய மற்றபேராசிரியர்கள்   “இதிலென்ன சந்தேகம்? வெவ்வேறு வேகங்களில்தான் அவை விழும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறாரே, அவருக்கு மேலேயா நாம்சிந்தித்துவிட முடியும்? நீ ஏன் வீணாக அலட்டிக் கொள்கிறாய்?” என்றனர். கலீலியோ சமாதானம் ஆகவில்லை. பரிசோதித்துப் பார்க்க முடிவு செய்தார். பைஸா கோபுரத்தின் உச்சிக்குச் சென்று ஒரு சிறிய துப்பாக்கிக் குண்டையும் பெரிய பீரங்கிக்குண்டையும் ஒரே நேரத்தில்  கீழே நழுவவிட்டு, அவை இரண்டும் ஒரே சமயத்தில்  தரையில் வந்து விழுந்தன என்பதை நிரூபித்தார். அப்போதும் பேராசிரியர்கள் அதைநம்ப மறுத்தனர். நேரத்தை அளக்க ஒரு நீர்க்கடிகாரத்தை கலீலியோ வடிவமைத்தார். ஒரு சாய்தளத்தின் மீது அவ்விரண்டு பொருட்களையும் உருளவிட்டு, அவைதரையை வந்தடைய ஒரே நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். “அப்படியானால் நூறு பவுண்டு எடை யுள்ள இரும்பு உருளையும் மெல்லிய இறகும் ஒரே வேகத்தில்தான் கீழே விழுமா? இறகு காற்றில் மிதந்து எங்கெங்கோ சென்றுகொண்டல்லவா இருக்கிறது?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர். “காற்றுதான் இங்கே பிரச்சனை. காற்றே இல்லாத வெற்றிடத்தில் இரும்புக் குண்டும் இறகும்கீழே விழ ஒரே நேரத்தையே எடுத்துக்  கொள்ளும்!” என்றார் கலீலியோ, “எதையும் பரிசோதனை செய்து பார்” என்பதே  கலிலீயோ மனிதகுலத்திற்குச் சொல்லிச் சென்றிருக்கும் பாடம். தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் கலீலியோதான். “சந்திரன் மிருதுவான உருண்டை வடிவப் பந்து”  என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. “சந்திரனின் மேற்பரப்புகரடுமுரடானது,  மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்தது” என்று தொலைநோக்கி மூலம் கண்டறிந்து சொன்னார்  கலீலியோ. முதன்முதலில் தொலைநோக்கி மூலம்பால்மண்டலத்திலுள்ள பல புதிய நட்சத்திரங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டவரும் அவரே ; மற்றவர்களை ஆச்சரியப்படுத்தியவரும் அவரே. பேரண்டத்தின் மையம் பூமியா, சூரியனா..? “பேரண்டத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறுதான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத்திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில்மட்டுமல்ல, டாலமி  என்ற வானவியலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார்.  “பேரண்டத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும்மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன்றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு.கலீலியோ கோபர்னிக்கஸின் கருத்துதான் சரி என்று வாதிட்டார். ஆனால் கலீலியோவின் இந்த “அதிகப் பிரசங்கித்தனங்களை” சக விஞ்ஞானிகளே கூட ஏற்க  மறுத்தனர். கோபர்னிக்கஸின் கருத்துக்களை ஆதரித்து கலீலியோ எழுதிய Dialogue என்ற புத்தகம்  மிகப் பிரபலமானது. பைபிளில் கூறப்பட்டதற்கு மாறாக கலீலியோவின்கருத்துக்கள் இருந்ததால் போப்  முன் ஆஜராகி விசாரணையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. கலீலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது வீட்டுச்சிறைவாசமாக மாற்றப்பட்டது. அவரது வயோதிக காலத்தில் “சர்ச்சைகளில் சிக்காத”  இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர் அனுமதிக்கப்பட்டார் ! 1638-இல் இரு கண்களும் தெரியாமல்போய்விட்டது. அந்த நிலைமையிலும் பெண்டுலத்தைப் பயன்படுத்தி கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் கலீலியோ. 1642-இல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன்.…