1. Home
  2. இடிப்பு

Tag: இடிப்பு

ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு

  ஆமையைத் தோற்கடிக்கும் மசூதி இடிப்பு வழக்கு   அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறக்கட்டளை கோவிலை கட்டுவதாகவும், ஐந்து கோபுரங்களுடன் 161 அடி உயரத்தில் கட்டுமானம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்களாம்.   கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்திலிருந்து மீண்டும் அந்தப் பணி துவங்கியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கொரோனா நோய்த்தொற்றும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை கோவில் கட்டும் அறக்கட்டளை யோ, விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடியோ கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.   அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர் பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு நீதியின்பாற் பட்டதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் தற்போது கோவில் கட்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படியென்றால், பாபர்  மசூதியை சட்ட விரோதமாக இடித்த வழக்கு என்னாயிற்று என்ற கேள்வி எழுவது இயல்பு.  அந்த வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1992ஆம் ஆண்டு  டிசம்பர்  6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை யும்  மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மசூதி இடிப்பிலும், அது தொடர்பான சதியிலும், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் அடக்கம். லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட பலர் மரணமடைந்து விட்டனர். அந்த கமிஷன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும், யார் மீதும் எடுக்கப்படவில்லை. மறுபுறத்தில் மசூதி இடிப்பு வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்மாதம் ஜூலை 24ஆம் தேதி எல்.கே. அத்வானி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டு மென்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதால்தான் நடக்கிறது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் வாக்குமூலம் பெறும் பணியே நடைபெறுகிறது என்றால், ஆமையை தோற்கடிக்கும் வேகத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவருவதை நாம் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய போக்கு நீதித்துறையின் மீதான மக்க ளின் நம்பிக்கையையும் தகர்க்கக் கூடியதாகும். (ஜூலை 22 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)