பட்டம் ஒரு ஆரம்பம்… திறனே வெற்றியின் முழுமை…
பட்டம் ஒரு ஆரம்பம்… திறனே வெற்றியின் முழுமை…
இன்றைய வேகமாக மாற்றம் காணும் வேலைவாய்ப்பு சந்தையில், “தகுதியுள்ளவர்” என்பதற்கான வரையறை கடந்த காலங்களில் போல அல்லாமல், மாறிக்கொண்டே வருகிறது. ஒரு காலத்தில், கல்லூரி பட்டம் என்பது சிறந்த வேலையும், நிலையான வாழ்வின் துவக்கப் படியாகவும் கருதப்பட்டது. ஆனால், தற்போது திறன்களை அடிப்படையாகக் கொண்டு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதும், ஆன்லைன் கற்றல் தளங்களின் வளர்ச்சியும், மாற்று கல்வி முறைகளின் எழுச்சியும், “பாரம்பரிய கல்வி முறையில் மாற்றம் தேவை” என்பதை உறுதிப்படுத்துகிறது.
திறன்களே (Skills) இன்றைய காலத்தின் புதிய நாணயம்!
நவீன தொழில்துறைகள் இன்று பட்டங்களை விட நடைமுறைச் செயல்திறன்கள் (Practical skills), கையறை அனுபவங்கள் (Hands-on Experience), மற்றும் தொழில்நுட்ப திறன்களை முக்கியமாகக் காண்கின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், நிதி, வடிவமைப்புத் துறைகள் போன்றவற்றில், முறையான கல்வித் தகுதிகளுடன், சிறப்புப் பயிற்சி சான்றிதழ்கள், மற்றும் செயல்முறைப்பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
Google Career Certificates, Coursera, Udemy போன்ற ஆன்லைன் தளங்கள், வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை குறுகிய காலத்தில் கற்றுத் தருகின்றன. இது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தொழில்துறைக்கு தயார்படுத்தும் எண்ணத்தை ஊக்கப்படுத்துகிறது.
ஆன்லைன் கற்றல் – ஒரு புதிய கல்விப் புரட்சி
COVID-19 பெருந்தொற்றுக்காலத்தில் கல்வியில் ஏற்பட்ட மாறுபாடுகள், ஆன்லைன் கற்றல் ஒரு பரந்த வாயிலாக வளர உதவின. இன்று, தொழில்நுட்பம், சுயக் கற்றல், திறன் அடிப்படையிலான பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் ஒருவருக்கு தன்னிலை நெறிப்படுத்தல் (self-driven learning) சாத்தியமாகியுள்ளது. Bootcamp, சான்றிதழ் படிப்புகள் மற்றும் பல முன்னணி மென்பொருள் தளங்கள் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப திறன்களை எளிதாக பெறுகின்றனர். இது தொடர்ந்து கற்றல் (Lifelong Learning) என்ற பண்பாட்டை உருவாக்கி வருகிறது.
பாரம்பரிய கல்வி மதிப்பு குறைவடைந்துவிட்டதா?
இல்லை. பாரம்பரிய கல்வி இன்னமும் மதிப்புடையதாகவே இருக்கிறது. ஆனால் அது தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய கோணத்தில் சிந்திக்க தொடங்கியுள்ளது. மருத்துவம், சட்டம், கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில், பாரம்பரிய கல்வி அவசியமான ஒன்றாகவே உள்ளது. ஆனால் பாடத்திட்டங்களில் நவீன தொழில்துறை தேவைகள் இணைக்கப்பட வேண்டும்.
பட்டம் மட்டும் போதாது – திறன் என்பதே உயர்வு!
நிகழ்கால வேலை சந்தையில் வெற்றி பெற, பட்டப்படிப்புடன், குறுகிய கால சான்றிதழ்கள், மென்மைத் திறன்கள் (soft skills) மற்றும் கையறை அனுபவம் ஆகியவையும் இணைந்து ஒரு நபரை முழுமையாக வேலைக்குத் தயாராக்குகின்றன. இணைந்த கல்வி (Blended Education) என்பது இப்போது பரவலாக ஏற்கப்படும் கல்வி முறை. இதில், ஒரு மாணவர், அறிந்ததை செயல்படுத்தும் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
இப்போது மாணவர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கல்லூரிப் படிப்பை ஆதாரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் தொடர்புடைய குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், மென்மை திறன்கள், தொழில்நுட்ப பயிற்சிகள் ஆகியவற்றையும் படித்துக் கொள்ளுங்கள்.
“நான் இவற்றை செய்கிறேன்” என்பதிலிருந்து “நான் இதைச் செய்துள்ளேன்” எனும் நிலைக்கு வலுவாக நகருங்கள்!
மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே இதை உணர்ந்து, இணைந்த கல்வியை பின்பற்றினால், வாழ்வில் தோல்வி என்பது காணவே காணாது.
லெப்டினென்ட். ஜ. ஹாஜிராம் பீவி
உதவி பேராசிரியை மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்,
கணினி அறிவியல் துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி – 620 020

