எல்லாப் புகழும் இறைவனுக்கே

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
28.  எல்லாப் புகழும்  இறைவனுக்கே
‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன.
எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.’ இதற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன் என்று பொருள்.
ஆச்சரியத்தைத் தரக்கூடிய பொருளைப் பார்க்கும்போது சொல்ல வேண்டிய சொல், ‘சுப்ஹானல்லாஹ்’ (இறைவன் மிகவும் தூய்மையானவன்)
கோபம் வரும்போதும், தீய செயல்களில் ஈடுபடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்போதும், ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கில் இருந்து நான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுகிறேன்) என்று சொல்ல வேண்டும்.
ஒரு நண்பரின் மகளுக்கு திருமணம். அதில் பங்கேற்க முடியாத உறவினர் அவரைச் சந்தித்து, ‘முக்கிய வேலை இருந்ததால் உங்கள் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் சிறப்பாக நடந்ததா?’ என்று வினவுகிறார். அதற்கு அந்த நண்பர், ‘ஆமாம். சிறப்பாக நடந்தது’ என்று சொல்ல மாட்டார். அதற்கு மாறாக ‘மாஷா அல்லாஹ்’ என்று பதில் அளிப்பார்.
‘மாஷா அல்லாஹ்’ என்பதற்கு ‘இறைவனால் நடந்தது’, ‘இறைவன் நாடியதால் நடந்தது’ என்று பொருள். எந்தவொரு சுப நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது உயர்வு தேடி வந்தாலோ அதற்குக் காரணம் இறைவன் என்று நம்புவதும், தான் இதற்கு எந்தவிதத்திலும் காரணம் அல்ல; இது இறைவனால் நடந்தது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே ‘மாஷா அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
யாராவது நமக்கு நன்மை செய்யும்போது, ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்று சொல்ல வேண்டும். இதற்கு ‘அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக’ என்றும், ‘அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அருள்வானாக’ என்றும் அர்த்தம். ‘ஜஸாக்கல்லாஹ் கைரா’ என்பது ஆங்கிலத்தில் ‘தேங்க்ஸ்’ என்று சொல்வது போலவும், தமிழில், ‘நன்றி’ என்று கூறுவது போலவும் அமையும். இருந்த போதிலும் இந்தச் சொல்லை ஆழ்ந்து நோக்கினால் அதன் உயர்ந்த நோக்கம் புலப்படும். உதவி செய்தவருக்கு வெறுமனே ‘நன்றி’ சொல்வது நன்றன்று என்று கருதி, ‘நீங்கள் செய்த இந்த உதவிக்காக, ‘இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவான்’ என்ற ஒற்றை வாக்கியத்தில், இறைவனை நினைவு கூர்வதையும், உதவி செய்தவருக்கு இறைவனிடத்தில் உயர்வை வேண்டி பிரார்த்திப்பதிலும் உள்ளடங்கிய மேன்மை தெரிகிறது.
செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்தபோதும், உண்டு முடித்தவுடனும் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று மொழிய வேண்டும். இதற்கு, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று அர்த்தம்.
அதே நேரத்தில் தும்மும்போது தும்பியவர் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று சொல்ல வேண்டும். அதைக் கேட்டவர், தும்மியவருக்கு, ‘யர்கமுகல்லாஹ்’ (இறைவன் உங்கள் மீது அருள் பாலிப்பானாக) என்று பதில் கூற வேண்டும். சாதனைகளைப் புரிவதற்கும், உணவைப் பெறுவதற்கும் இறைவனின் அருள் வேண்டும். அதனால் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். ஆனால் தும்மும்போதும் ஏன் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூற வேண்டும்? ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அர்த்தம் புரியும்.
தும்மும்போது இதயம் நின்று விடுவதைப் போல ஒரு வினாடி நின்று மீண்டும் இயங்குவதைப் பார்க்கலாம். அதனால்தான் தும்மும்போது இறைவனைப் புகழும் வகையில் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்கிறோம். இதைப் போலவே பிற மதத்தைச் சேர்ந்த சகோதரர்களும் தும்மும்போது அவரவர் கடவுள்களை நினைவு கூர்வது இங்கே நினைவு கூரத்தக்கது.
முஸ்லிம்கள் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு சொல், ‘தவக்கல்து அலல்லாஹ்.’ இதற்கு ‘இறைவன் மீது நான் பொறுப்பு சாற்றுகிறேன்’, ‘இறைவன் உன்னைப் பாதுகாப்பான்’ என்பதாகும். ‘தவக்குல்’ என்பது ஒருவன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து தன் செயல்கள் அனைத்தையும் அவனிடமே ஒப்படைப்பதாகும்.
‘எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்’ (திருக்குர்ஆன்&65:3) என்பது இறைமறை வசனம்.
வெளியிலோ, வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும் மகனை ஒரு தாய் வாழ்த்தும்போது, ‘தவக்கல்து அலல்லாஹ்’ என்பார்கள். இறைவனின் பாதுகாப்பே இறை நம்பிக்கையாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பாகும்.
ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு பெரும் சோதனை ஏற்பட்டாலும் கலங்குவதில்லை. ‘இறை விதிப்படியே இது நடந்திருக்கிறது’ என்ற எண்ணமே அதற்குக் காரணம். ஒருவர் மரணம் அடைந்து விட்டால் முஸ்லிம்கள் சொல்லக்கூடிய வார்த்தை ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ என்பதாகும். இதற்கு ‘நாம் இறைவனுக்காகவே இருக்கின்றோம்; அவனிடமே செல்லக் கூடியவராக இருக்கின்றோம்’ என்று அர்த்தம். நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே; நாமும் அவனுடையதாகவே இருக்கின்றோம். அவனே அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான்.
ஆக முஸ்லிம்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை முன்னிறுத்தியே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
நிற்கும்போதும், நடக்கும்போதும், பார்க்கும்போதும் கேட்கும்போதும், பேசும்போதும், எழுதும்போதும், தும்மும்போதும், தூங்கும்போதும், எழும்போதும், எப்போதும் இறைவனையே தங்கள் சிந்தையில், செயலில், சொல்லில் ஏற்றுகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

News

Read Previous

புகழ்பெற்ற சூத்திரம்

Read Next

உலக புகையிலை தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *