ஹஜருல் அஸ்வத்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
22   ‘ஹஜருல் அஸ்வத்’
கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதன் வரலாறு நீண்டது; மாண்புடையது.
ஆரம்பத்தில் வானவர்கள் அல்லது ஆதி இறைத் தூதர் ஆதம் (அலை) அவர்கள் புனித கஅபாவைக் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக இறைதூதர் இப்ராகீம் (அலை) அவர்கள், கஅபாவின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடித்து அதன் மீது கட்டிடத்தை எழுப்பினார்கள். அப்போது ஒரு வானவ தூதரால் பக்கத்தில் இருந்த அபூ குபைஸ் என்ற மலையில் இருந்த ஒரு கற்பாறை இப்ராகீம் நபியிடம் வழங்கப்பட்டது. இந்தக் கற்பாறை வானலோகத்தில் இருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் அந்த மலையிலேயே இருந்து வந்தது. இந்தக் கற்பாறை கஅபாவின் தென் கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது.
‘இந்தக் கல் சொர்க்கத்தில் இருந்து வந்தது. அப்போது அது பாலை விட வெண்மையாக இருந்தது. மனிதனின் பாவக்கறைகள் அதைக் கறுப்பாக்கி விட்டன’ என்பது நபிமொழியாகும்.
அறியாமைக் காலத்தில் கஅபாவை குரைஷிகள் புதுப்பித்தனர். அப்போது நபிகளாருக்கு வயது 35. கட்டுமான வேலை ஒரு கட்டத்திற்கு வந்தவுடன், அந்தக் கட்டிடத்தில் இப்ராகீம் நபி பதித்திருந்த ‘ஹஜருல் அஸ்வத்’ என்னும் புனிதக் கல்லை அது முன்பிருந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டி இருந்தது.
அந்தக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் வைக்கும் பெருமை தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஆர்வம் கொண்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் நிலை நிலவியது.
அங்கிருந்த முதியவர் அபூ உமையா பின் முகைரா, ‘நாளை அதிகாலை இங்கு யார் முதலில் நுழைகிறாரோ அவரிடம் நம் வழக்கைச் சொல்லி தீர்ப்புக் கோருவோம்’ என்றார். அதை அனைவரும் ஏற்றனர்.
மறுநாள் கஅபாவுக்குள் முதலில் நுழைந்த நபிகளாரிடம் அவர்கள் முறையிட்டனர். சிறிது நேரச் சிந்தனைக்குப் பிறகு ஒரு போர்வையை வாங்கி தரையில் விரித்தார்கள். ‘ஹஜருல் அஸ்வத்’ என்ற அந்தப் புனிதக் கல்லைத் தனது திருக்கரங்களால் எடுத்துப்  போர்வையில் வைத்தார்கள்.
‘ஒவ்வொரு கோத்திரத்தாரும் போர்வையின் ஓரங் களைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அந்தக் கல்லைப் பதிக்க வேண்டிய இடத்திற்கு அருகே வைக்குமாறு பணித்தார்கள். இதை ஏற்று அவ்வாறே அவர்கள் அதைத் தூக்கிக்கொண்டு சென் றனர். பின்னர் அதனை உயர்த்திப் பிடிக்கக் கூறிய நபிகளார், சரியான உயரத்திற்கு வந்ததும், கல்லை எடுத்து உரிய இடத்தில் தனது கரங்களால் பதித்தார்கள். இத்தகைய முத்திரைத் தீர்ப்பால் அத்தரையில் பெரும் போர் தவிர்க்கப்பட்டது.
இன்றைய தினம் ஹஜ் பயணிகள் இந்தக் கல்லை நோக்கி கையை உயர்த்துகிறார்கள் அல்லது முத்தமிடு கிறார்கள் என்றால், அன்று தனது புத்திசாலித்தனத்தால் அமைதியை நிலை நாட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூரும் வகையில் அவ்வாறு செய் கிறார்கள்.
(தொடரும்)
‘ஸம் ஸம்’ – அதிசய நீரூற்று
மக்காவில் உள்ள புனித கஅபாவுக்கு அருகில் உள்ள வற்றாத நீரூற்றே ‘ஸம் ஸம்’ ஆகும். இது கஅபாவுக்கு கிழக்கே 20 மீட்டர் (66 அடி) தூரத்தில் உள்ளது. இறைத்தூதர் இப்ராகீம் (அலை) அவர்கள் தமது மனைவி ஹாஜரா (அலை) மகன் பாலகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரை மக்காவில் உள்ள பாலைவனத்தில் விட்டுவிட்டுச் சென்றார். மனைவிக்கும், குழந்தைக்கும் அவர் கொடுத்துச் சென்ற உணவும், நீரும் தீர்ந்து போயின. இதனால் தண்ணீரைத் தேடி ஹாஜரா அங்குமிங்கும் அலைந்தார்கள். இறுதியில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, தனது காலால் மண்ணில் அழுத்தினார்கள். அந்த இடத்தில் ஓர் ஊற்று பீரிட்டு எழுந்தது. அதைக் கண்ட ஹாஜரா ஓடிச் சென்று, அந்த ஊற்றை அணை கட்டி ‘ஸம் ஸம்’ என்றார். அதற்கு ‘நில் நில்’ என்று அர்த்தம். அதன்படி அந்த ஊற்று அப்படியே நின்றது. அதுதான் இன்றைய ‘ஸம் ஸம்’  கிணறாகும்.
அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர். நீர் மட்டம் சுமார் 4 மீட்டர். அந்தக் கிணற்றின் ஊற்றில் இருந்து ஒரு வினாடிக்கு 11 லிட்டர் முதல் 19 லிட்டர் வரை நீர் வந்து கொண்டிருக்கிறது. அது உருவான காலத்தில் இருந்து இன்று வரை ஓய்வறியா  சூரியனைப் போல ஓயாது, வற்றாத நீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.
குறைந்த ஆழம் கொண்ட ஒரு கிணறு ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் கூடும் லட்சக்கணக்கான பயணிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது அதிசயம் அல்லவா?
மேலும், ‘ஸம் ஸம்’ கிணற்று நீரையும், மக்கா நகரில் உள்ள வேறு கிணற்று நீரையும் ஆராய்ந்து பார்த்ததில், இரண்டுக்கும் இடையே கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமும் ஓர் அதிசயத்தை அரங்கேற்றியது. ‘ஸம் ஸம்’ நீரில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்),  வெளிமம் (மக்னீசியம்) ஆகிய சத்துகள் அதிகம் உண்டு. இதனால் களைப்பை நீக்கும் நிவாரணியாகக் கருதப்படுகிறது. அந்த நீரில் கிருமிகளைக் கொல்லும் ‘புளோரைடுகள்’ உள்ளன. உள்ளபடியே அந்த நீர் குடிப்பதற்கு உகந்த நீர் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் வைத்திருந்தபோதிலும் கெடாத தன்மையைக் கொண்டது.

News

Read Previous

நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!!

Read Next

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *