15 நாட்களாக 200 கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் பொதுமக்கள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அலைகின்றனர்.
முதுகுளத்தூர், கடலாடி, கமுதி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மகிண்டி, காக்கூர், காஞ்சிரங்குளம், ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொட்டியில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 15 நாட்களாக இந்த கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காலி குடங்களுடன் தண்ணீரை தேடி பக்கத்து கிராமங்களுக்கு செல்கின்றனர். வேறு வழியின்றி கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் லாரிகள், டிராக்டர்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 என விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏனாதியை சேர்ந்த காந்தி கூறுகையில், “கோடைகாலம் துவங்குவதற்கு முன்னரே, முறையாக குடிநீர் சப்ளை செய்யவில்லை. 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறையே கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது 15 நாட்களாக முற்றிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  கண்மாய், ஊரணிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.
முறையாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

காவிரி திட்ட உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், “திருச்சியில் காவிரி ஆற்றில் ஊற்று குறைவாகி விட்டது. மேலும் இளையான்குடி பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. விரைவில் இந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

News

Read Previous

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

Read Next

இறைவா,இவர்களை பொருந்தி கொள்வாயாக!

Leave a Reply

Your email address will not be published.