ஆரோக்கியத்தால் பெருகும் வருமானம்

Vinkmag ad

ஆரோக்கியத்தால் பெருகும் வருமானம்

 

ஆரோக்கிய உணவெல்லாம் பாட்டி காலத்துடனே போய்விட்டது எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு ஜென்சிலின் வினோத் ஆச்சரியம் தருகிறார். இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட 180 விதமான உணவுப் பொருட்களை ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அளவுக்கு இவர் விற்பனை செய்துவருகிறார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்.

“நான் தயாரிக்கும் உணவு வகை எல்லாமே, ஒரு காலத்தில் நம் வீடுகளில் செய்யப்பட்டவையே. ஆனால், காலப்போக்கில் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், துரித உணவின் மீது நம் கவனம் திரும்பிவிட்டது. எனக்குச் சமையல் குறிப்புகளைக் கற்றுத்தந்தவர் என் அம்மா குளோரி. நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோதே, சமையல் செய்யக் கற்றுக்கொண்டேன்.

சிறுதானியங்களில் நூடுல்ஸ், கஞ்சி, தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் என ஏராளமானவற்றை அம்மா தயாரித்துக்கொடுப்பார். என் தாத்தா நாட்டுவைத்தியர் என்பதால், எங்கள் வீட்டில் எப்போதும் பாரம்பரிய உணவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எனக்கு வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவும் குளிர்பானங்களும் பிடிக்காது. அதனால்தான் என் குழந்தைகளுக்கும் வேதிப்பொருட்கள் கலப்பில்லாத உணவை தயாரித்துக்கொடுக்கத் தொடங்கினேன்” என்கிறார் ஜென்சிலின்.

தொடக்கத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக உணவு வகைகளைச் செய்யத் தொடங்கிய ஜென்சிலின், பின்னர் அதையே தொழிலாகத் தொடங்க முடிவெடுத்தார். “ ஃபார்ம் டு ஹோம் ” என்ற நிறுவனத்தை 2018-ல் தொடங்கினார். குழந்தைகளுக்கான கஞ்சி வகைகள், சத்துமாவு போன்றவற்றுடன் விற்பனையைத் தொடங்கினார்.

தற்போது குழந்தைகளுக்கான 40 வகைக் கஞ்சி, பால் கொடுக்கும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கு 16 வகை உணவு, உடனடியாகத் தயாரிக்கக்கூடிய 20 வகைக் காலை சிற்றுண்டி, நீரிழிவு நோயாளிகளுக்கு 12 வகை உணவு, சிறுதானியத்தில் செய்யப்பட்ட நான்கு வகை நூடுல்ஸ் போன்றவற்றுடன் சிகைக்காய், குளியல் பொடி, முகப்பூச்சு உள்ளிட்ட 180 வகைப் பொருட்களைத் தயாரித்து அசத்துகிறார்.

இரண்டு ஆண்டுகளில் ஜென்சிலின் கண்டிருக்கும் இந்த அசத்தல் வளர்ச்சி நமக்கு மலைப்பை ஏற்படுத்தினாலும், அதற்குப் பின்னால் பலரின் கூட்டு உழைப்பு அடங்கியுள்ளது என்கிறார் அவர்.

(ஜுன் 7 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் எல்.ரேணுகாதேவி எழுதிய கட்டுரையிலிருந்து)

 

 

News

Read Previous

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்

Read Next

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!

Leave a Reply

Your email address will not be published.