மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்

Vinkmag ad
மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள் 
பேராசிரியர் கே. ராஜு

நோயாளிக்குத் தெரியாமல் உண்மையான மாத்திரைகளுக்குப் பதிலாக சாதாரண இனிப்பு மாத்திரைகளைக் கொடுப்பது.. சரியான மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக நம்பும் நோயாளிகள் அந்த நம்பிக்கையின் காரணமாகவே குணமடைவதற்கு “பிளேசிபோ மனவைத்தியம்” என்று பெயர். மாரடைப்பு ஏற்பட்ட சில நோயாளிகளுக்கு வேண்டுமானால் ஸ்டெண்ட் பொருத்துவது பயனளிக்கலாம். மற்றபடி பெரும்பாலான நேரங்களில் ஸ்டெண்ட் பொருத்துவது அக்கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிலிலும் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவமனைகளிலும் உள்ளோருக்கு மட்டுமே நன்மை தரக்கூடிய செயலாக அமைகிறது என்பது கசப்பான உண்மை.

சீனிக்கு அடிமையாதல்

நமது உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் நமது பாரம்பரிய தானியங்கள் அனைத்திலும் காய்கறிகளிலும் உள்ளன. அதற்கு சீனியைத் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. பிஸ்கெட்டுகள், இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்குவது நாம்தான். கொக்கைன் போல சீனியும் மூளையில் சில மகிழ்ச்சியைத் தரும் மையங்களைத் தூண்டும் வேலையைச் செய்கிறது. சீனியை உட்கொள்வதற்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு மீதான ஆய்வைக் குழப்ப துரித உணவு மற்றும் குளிர்பானத் தொழில் பல முயற்சிகளை எடுத்திருக்கிறது. உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஆகிய குறைபாடுகளுக்கும் சீனியை உட்கொள்வதற்கும் உள்ள தொடர்பை குறைத்துக் காட்டும் மோசடியான ஆய்வுகளுக்கு கோடிக்கணக்கான டாலர்களை கோகோ கோலா அள்ளிக் கொடுத்திருக்கிறது என்ற புள்ளிவிவரங்களைத் தந்து  நியூயார்க் டைம்ஸ் அந்நிறுவனத்தை அம்பலப்படுத்துகிறது. உலகம் முழுதும் உள்ள மக்களின் உடல்நலன் மேம்பட வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயல்படுவதாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கோகோ கோலா கம்பெனியின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறது. கோகோ கோலா பானத்தின் சிறப்புகளை அந்த அறக்கட்டளை விளம்பரப் படுத்துவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

நமது உடலின் 70 சதம் நீரினால் ஆனது. உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் அன்றாடம் குடிப்பது மிகவும் அவசியம். அதே சமயம், தேவைக்கதிகமாக தண்ணீர் குடிப்பதும் கெடுதல்தான். அப்படிக் குடித்தால், ரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவு மிகவும் குறைந்து செல்கள் வீங்கத் தொடங்கும். மூளையில் வீக்கம், நினைவிழத்தல், சமயங்களில் முற்றிலும் நினைவிழத்தல் போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படும். குழந்தைகள் அதிகமாகத் தண்ணீர் குடித்தால் அவர்களது சிறுநீரகங்கள் அதிகப்படியான நீரை வெளியேற்றத் திணறும். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களும் சில மருத்துவச் சாமியார்களும் நாம் மிக அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர். இதை நம்பி ஆபத்தை வரவழைத்துக் கொள்ளும் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். உண்மையில் தண்ணீர் எவ்வளவு தேவை என்பதை நம் உடலே நமக்குத் தெரிவித்துவிடும். தாகம் எடுக்கும்போது மட்டும் தேவையான அளவு தண்ணீர் குடித்தால் போதுமானது.

தேவைக்கதிகமான நீர் அருந்தும் பழக்கம் எப்படி உருவானது? நீரை பாட்டில்களில் அடைத்து விற்ற டனோன் என்ற பிரெஞ்சுக் கம்பெனி குழந்தைகள் உட்பட பலர் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதில்லை என்று பிரச்சாரம் செய்தது.  அமெரிக்காவில் பெர்ரியர் என்ற பன்னாட்டுக் கம்பெனி  1970-களில் பாட்டில் தண்ணீர் பெருக்கத்தைத் தொடங்கிவைத்தது. 1978-ல் அமெரிக்கர்கள் 500 மில்லியன் காலன்கள் பாட்டில் தண்ணீரை வாங்கிப் பருகினர். அடுத்த பத்தாண்டுகளில் இது 1.8 பில்லியன் காலன்கள் என்று கிட்டத்தட்ட நான்கு மடங்காகியது. கிடைக்கும் கொள்ளை லாபத்தைப் பார்த்ததும், பெப்சியும் கோகோ கோலாவும் பெர்ரியரை பாட்டில் தண்ணீர் சந்தையிலிருந்து விரட்டி அடித்தன. 2014-ம் ஆண்டில் அமெரிக்கர்கள் பாட்டில் தண்ணீருக்காக ஒரு நாளைக்கு 35 மில்லியன் டாலர்களைச் செலவழித்தனர். குழாய்களிலிருந்து கிடைக்கும் குடிநீரைப் போல இது 1000 மடங்கு செலவு கூடியது. இம்மாதிரி விஷயங்களில் அமெரிக்கர்களை அப்படியே பின்தொடர்பவர்கள்தானே நாம்?
இன்று இணையம் நமக்குப் பல பயனுள்ள தகவல்களைத் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதே இணையத்தை கார்ப்பரேட் நலன்களைக் காப்பாற்றும் ஊடகமாகவும் செயல்பட வைக்க முடியும் என்பதை அந்த நிறுவனங்கள் புரிந்து வைத்துள்ளன. நாம்தான் நமது நம்பிக்கைகளை அறிவியல் அடிப்படை, பகுத்தறிவு ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலித்து ஏற்கக் கூடியவற்றை ஏற்க வேண்டும்.. நிராகரிக்க வேண்டியவற்றை நிராகரிக்க வேண்டும்.
                                          (உதவிய கட்டுரை : ஜூன் 25-ஜூலை 01 பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் அமித் சென்குப்தா எழுதியது)

News

Read Previous

கலைஞர் மு. கருணாநிதி

Read Next

ஆனந்த யாழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *