ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

Vinkmag ad

Difference Between Bypass and Open Heart Surgery? - Food Habits and Nutrition Guide in Tamil

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஓபன் ஹார்ட் ஆபரேஷன்:

இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும்.

இந்த, ‘ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.

செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை  மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

பைபாஸ் சர்ஜரி:

பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன்.

இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.

இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

News

Read Previous

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

Read Next

எண்ணத்தில் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *