ஓசையின்றி ஓர் எதிரி !

Vinkmag ad

மருத்துவம் :                ஓசையின்றி ஓர் எதிரி !

இதயம் சுருங்கி இரத்தத்தை பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே உயர்நிலை இரத்த அழுத்தம் (systolic) எனப்படுகிறது. இரத்தத்தை இதயம் பம்ப் செய்த பிறகும்கூட இரத்தக் குழாயில் உள்ள சிறிய அளவு அழுத்தமே கீழ் நிலை இரத்த அழுத்தம் (Diastolic) எனப்படுகிறது.

உயர்நிலை இரத்த அழுத்த அளவு (சிஸ்டாலிக்) 12ல் எம்எம். எச்ஜி-ம் கீழ் நிலை இரத்த அழுத்த அளவு (டயாஸ்டாலிக்) 80 எம்எம்.எச்ஜி-ம் இருந்தால் இயல்பானது. இந்த அளவீடுகளுக்கு மேல் இரத்த அழுத்தம் இருந்தாலே எச்சரிக்கை உணர்வு அவசியம். உயர் நிலை இரத்த அளவு 140 எம்எம்.எச்ஜி-யைத் தாண்டியும் கீழ் நிலை இரத்த அழுத்த அளவு 90 எம்எம்.எச்ஜி-யைத் தாண்டியும் இருந்தாலே உயர் இரத்த அழுத்தநோய் வந்து விட்டதாகக் கொள்ளலாம்.

உணவு உள்பட பழக்கங்களில் மாற்றம் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். உதாரணமாகப் புகைப் பிடிப்பவராக இருந்தால் அப்பழக்கத்தை விட்டு விட வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாறாக அதிக அளவு பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் காய்கறிகள், பழங்களில் அதிக அளவு பொட்டாஷியம், கால்ஷியம் சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோய் இருக்கும் நிலையில் பழங்களைச் சாப்பிடுவதில் டாக்டரின் ஆலோசனை அவசியம்.

உடல் எடையை உயரத்துக்கு ஏற்றாற்போல் சீராகப் பராமரிக்க வேண்டும். உடல் எடை எவ்வளவு இருக்கலாம் என்பதற்கு எளிதான கணக்கு உள்ளது. அதாவது உங்களது உயரத்தை நூறிலிருந்து கழித்தால் கிடைக்கும் எடையே இயல்பான எடை உதாரணமாக ஒருவர் 160 செ.மீ உயரம் இருந்தால் அவரது இயல்பான எடை அளவு 60 கிலோ கிராம். உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள நாள்தோறும் குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு மருந்துச் சிகிச்சையின்றியே உயர் இரத்த அழுத்த நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தத்துக்கு உரிய அறிகுறிகள் எதுவும் தெரியாது. இதனால்தான் இந்நோயை silent killer என்று அழைக்கின்றனர். தலைவலி, தலை சுற்றல், படபடப்பு, நெஞ்சு வலி, பார்வை மங்குதல், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

குடும்ப ரீதியாக வர வாய்ப்புள்ள உயர் இரத்த அழுத்த நோய்க்கு பிரைமரி ஹைபர்டென்ஷன் (Primary Hypertension) என்று பெயர். இந்த வகையில் உயர் இரத்த அழுத்த நோயால் 95 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மீதமுள்ள 5 சதவிகிதம் பேர் பாதிப்புக்குள்ளாகும் உயர் இரத்த அழுத்த நோய்க்கு செகண்டரி ஹைபர்டென்ஷன் (Secondary Hypertension) என்று பெயர்.

முதுமையை அடையும் நிலையில் உடலில் உள்ள இரத்தக் குழாய்கள் இறுக்கம் அடைவதால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது 55 வயது வரை இயல்பான இரத்த அழுத்த அளவைக் கொண்டிருக்கும் 90 சதவிகிதம் பேருக்கு அதன் பிறகு உயர் இரத்த அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு 35 வயது முதல் 55 வயதுக்குள் உயர் இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

உயர் இரத்த அழுத்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டு இரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம். இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் இதயத் தசை வலுவிழந்து உயிர் போவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகம். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் கசிவு ஏற்பட்டுப் பக்கவாதம் (Stroke) ஏற்பட வாய்ப்பு ஏழு மடங்கு அதிகம்.

News

Read Previous

பயணம்

Read Next

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *