என்றும் இளமைக்கு நெல்லிக்காய்!

Vinkmag ad

டாக்டர் ஆர்.பத்மபிரியா 

 
 
பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

News

Read Previous

வீடியோக்களின் விபரீதங்கள்

Read Next

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள்

Leave a Reply

Your email address will not be published.