உடல் இயக்கத்தை பாதிக்கும் ரத்த சோகை

Vinkmag ad

குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம் மற்றும் வளர்ந்த பின்னரும் ரத்தசோகை பிரச்னை ஆண், பெண் இருபாலரிடமும் காணப்படுகிறது. ரத்த சோகையின் காரணமாக சோர்வு, படிப்பில் ஆர்வம் இன்மை மட்டுமின்றி பெண் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாகவும், மாதவிடாய் காலம், மகப்பேறு காலம் ஆகியவற்றிலும் சிக்கலை உருவாக்குகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும் போதே தாய் இரும்புச் சத்து குறைபாடு இன்றி வளர்ப்பது அவசியமாகிறது. உடலில் ரத்தம் பெருகி உடல் இயக்கத்தை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள இரும்புச் சத்து, உயிர்ச்சத்து பி.12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவை தேவைப்படுகிறது. இரும்பு சத்து ரத்தம் விருத்தியடையத் தேவையான பணியை மேற்கொள்கிறது.

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் உள்ளது. இது இரும்புச் சத்தும், புரதமும் அடங்கியது. எனினும் இரும்புச் சத்தின் அளவே அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை உடலின் எல்லாத் திசுக்களுக்கும் எடுத்துச் செல்கிறது. இரும்புச் சத்தின் அளவு குறையும் போது ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இதனால் உடல் உறுப்புகள் இயங்கத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இரும்புச் சத்து குறைபாடு ரத்த சோகையை மட்டும் ஏற்படுத்துவதில்லை. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், திசுக்களும் பாதிக்கப்படுகின்றன. இதயம், நுரையீரல், கல்லீரல், இரைப்பை, குடல் போன்ற முக்கிய உறுப்புகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இரும்புச் சத்து குறைபாடானது உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும் எமனாக மாறுகிறது.

குழந்தை கருவில் வளரும் பொழுதில் இருந்தே இரும்புச் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் மற்றும் மாட்டுப் பாலிலும் இரும்புச் சத்து குறைவாகவே உள்ளது. கருவில் வளரும் போது தனக்கு தேவையான இரும்புச் சத்தை குழந்தை தாயிடம் இருந்து கிரகித்துக் கொள்கிறது. கருவுற்ற தாய்க்கு ரத்தசோகை இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு தாயிடம் இருந்து போதிய இரும்புச் சத்து கிடைக்க வாய்ப்பின்றிப் போகிறது. இதனால் பிறந்த சில நாட்களில் ரத்த சோகைக்கு ஆளாகும் குழந்தையை பல்வேறு தொற்று நோய்கள் தாக்குகின்றன. எனவே பெண்கள் தாய்மைக் காலத்தில் இரும்புச் சத்து உள்ள கீரைகள், சுண்டைக்காய், கேழ்வரகு, பேரிச்சம்பழம், வெல்லம், ஈரல், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கொக்கி ப்புழு மற்றும் குடல் புழு தொற்று, சீதபேதி, நிமோனியா போன்ற நோய்களும் ரத்த சோகையை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதற்கு குடல் புழுக்களும் காரணமாகிறது. ரத்த சோகை உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சோர்வு, பசியின்மை, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படும். ஆரம்ப கட்ட அறிகுறிகள் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை உள்ளதா என்பதை பரிசோதித்து இரும்புச் சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தவறாமல் எடுக்க வேண்டும்.

News

Read Previous

திருச்சி மாநகரில் உங்கள் கனவு இல்லம் கட்ட நல்லதொரு வாய்ப்பு !

Read Next

தயவான நீயே தாய் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *