பொதுப்போக்குவரத்து முடக்கம்.. ஏழைகள் மீதான வன்முறை

Vinkmag ad

பொதுப்போக்குவரத்து முடக்கம்.. ஏழைகள் மீதான வன்முறை

 

கரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் பொதுப் போக்குவரத்து இயங்குகிறது. உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும், இந்தியாவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரத்திலும்கூடப் பொதுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதன் மூலம், மக்களைப் பார்த்து நாமும் அரசும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான், “சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள்!”

தமிழ்நாட்டில் மார்ச் 22 அன்று நிறுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து, ஐந்து மாதங்களாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இடையில் ஜூன் 1 முதல் மாவட்டம், மண்டலத்துக்குள் பேருந்து இயக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஓரிரு வாரங்களிலேயே அதையும் முடக்கிவிட்டது. பொதுப்போக்குவரத்து முடக்கத்தால் வேலையையும் வருமானத்தையும் இழந்து, வறுமையில் வாடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும்.

நசுக்கப்படும் ஏழைகளின் குரல்

இ-பாஸ் பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை என்பதால், ஓரளவுக்கு அது ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது. ஆனால், “பஸ் எப்ப விடுவாங்க அய்யா?” என்று கேட்கும் ஏழைகளின் குரலை, “அறிவிருக்குதா? பஸ் விட்டா கரோனா பரவிடாதா?!” என்று நசுக்கிக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருந்த 22 ஆயிரம் பேருந்துகளில், தினமும் விற்பனையாகும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.10 கோடி. அதில் முக்கால்வாசி டிக்கெட்டுகள், நகர்ப் பேருந்துகளில் கிழிக்கப்படுபவை. தங்கள் வருமானத்துக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் பொதுப்போக்குவரத்தே சிக்கனமானது, பாதுகாப்பானது என்பது பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பொதுப்போக்குவரத்து கைவிட்டதால், அதில் பாதிப் பேர் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கட்டுமானப் பணி, சிறு மில்கள், தீப்பெட்டி, பஞ்சாலைகள் போன்றவற்றில் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்வோரை முற்றாக முடக்கியிருக்கிறது பொதுப்போக்குவரத்து முடக்கம். குறிப்பாக, பெண்களின் வேலைவாய்ப்பை அடியோடு ஒழித்துக் கட்டியிருக்கிறது.

திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் சுருங்கிவிட்டன. கோயில்களில் விழாக்களோ வழிபாடுகளோ இல்லை. எனவே, இப்போது புறநகர்ப் பேருந்துகளின் தேவை குறைந்துவிட்டது. ஆனால், நகர்ப் பேருந்துகளின் தேவை கொஞ்சம்கூடக் குறையவில்லை. பேருந்து இல்லாததால் நிறையப் பேர் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டோவும் தன்னை ஒரு பேருந்தாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்குக்கு முக்கு போக்குவரத்துக் காவலர்கள் நிற்கும் மதுரை போன்ற பெருநகரங்களிலேயே டீசல் ஆட்டோக்கள் 10, 12 பேரை ஏற்றிக்கொண்டு பறக்கின்றன. கரோனா அபாயம், விபத்து பயத்தைவிட வாழ்ந்தாக வேண்டும் எனும் உந்துதலே அவர்களை இப்படியெல்லாம் பயணிக்க வைக்கிறது.

கிராமத்துப் பெரியவர்கள் காலை 8 மணிக்கு ஒரு டவுன் பஸ்ஸில் ஏறி, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய், ஊசி போட்டுக்கொண்டு மாத்திரையும் வாங்கி வந்துவிடுவது வழக்கம். ஆரம்ப சுகாதார நிலையமெல்லாம் நமக்குச் சரிவராது, டவுன் தர்ம ஆஸ்பத்திரியில்தான் நன்றாகப் பார்ப்பார்கள் என்கிற கூட்டத்துக்கும், அரசுப் பேருந்துகள்தான் உதவும்.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் காலத்தில் நம்முடைய பழைய பேருந்துகளில் எத்தனை பேருந்துகள் நகரும் என்ற சந்தேகம் போக்குவரத்து ஊழியர்களுக்கே இருக்கிறது. இன்னொருபுறம், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம் கைமீறிப் போய், ஒட்டுமொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்படக்கூடிய சூழலும் வரலாம்.

கரோனா காலத்தில் ரயில்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தை என்ன செய்யக் காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

– ஆகஸ்ட் 28 தமிழ் இந்துவில் கே.கே.மகேஷ் எழுதிய கட்டுரையிலிருந்து

………………………………………………………………………………………………………………………

News

Read Previous

பத்துப்பாட்டு

Read Next

கொரோனா பல்கலைக்கழகம்

Leave a Reply

Your email address will not be published.