நல்ல_நோட்டா_கள்ளநோட்டா ???

Vinkmag ad

#நல்ல_நோட்டா_கள்ளநோட்டா???

இந்திய ரூபாய் நோட்டுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15–வது நூற்றாண்டில் பணப்புழக்கம் தொடங்கியபோது, வெள்ளி நாணயத்தில்தான் தொடங்கியது. 1935–ம் ஆண்டுதான் முதலில் ரிசர்வ் வங்கி இந்தியாவில் தொடங்கப்பட்டது. 1938–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6–வது ஜார்ஜ் மன்னரின் படத்தோடு முதலில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது.

தொடர்ந்து அதே ஆண்டில் 10 ரூபாய், நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. 1940–ம் ஆண்டுதான் ஒரு ரூபாய் நோட்டு வந்தது. இப்படி தொடங்கியதுதான் ரூபாய் நோட்டுகளின் சரித்திரம். தற்போது ரிசர்வ் வங்கி 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை தயாரித்து, மக்களிடையே புழக்கத்தில் வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி அச்சிட்ட 11 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடி ரூபாய், 73 ஆயிரத்து 517 மில்லியன் ரூபாய் நோட்டுகளாக உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்த பணத்தின் மதிப்பை வைத்துத்தான் பொருளாதார மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. ஆனால், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க, சில அண்டை நாட்டு சக்திகள் குறிப்பாக, பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்குள் சுற்ற வைக்கிறது. இதுபோல, நம் நாட்டுக்குள்ளும் சில தீயசக்திகள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வினியோகத்துக்கு அனுப்புகின்றன.

இப்போதெல்லாம் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடையே ஒரு பயம் உருவாகிவிட்டது. 2013–2014–ம் ஆண்டு மட்டும் ரிசர்வ் வங்கியும் மற்றும் வணிக வங்கிகளும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 273 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளைக் கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல 4 லட்சத்து 98 ஆயிரத்து 252 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்த கள்ள நோட்டுகளில் 52 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள்தான். 24 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள். 22.5 சதவீதம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பே நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான நோட்டுகள் 2005–ம் ஆண்டுக்கு முன்பு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தோற்றத்தைப்போல இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாகும். 2005–ம் ஆண்டுக்குப்பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பின்பக்கத்தில் கீழ் வரிசையின் மத்தியில் சிறிய அளவில் அந்த ரூபாய் நோட்டு அச்சடித்த ஆண்டு இடம்பெற்றிருக்கும். அதற்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுகளில் அப்படி ஆண்டு இடம்பெற்றிருக்காது.

கடந்த ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 1–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டுக்கு முந்தைய நோட்டுகளை அனைத்து வங்கிகளும் திரும்பப்பெற்று அதற்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வங்கிகள் இப்போது விநியோகம் செய்யும் ரூபாய்களிலும் இத்தகைய நோட்டுகள் இருக்கின்றன.

முதலில் வங்கிகள் இந்த நோட்டுகளை வழங்கக்கூடாது. மேலும், ஏராளமான நோட்டுகளில் இப்படி ஆண்டு மட்டும் அச்சடிக்கப்படாமல் வேறு சில வித்தியாசங்களும் இருக்கிறது. அவையெல்லாம் கள்ளநோட்டுகள் என்று தெரியாமல் இதை வாங்கிய அப்பாவிகளும், வியாபாரிகளும் என்ன செய்வது? என்று திணறுகிறார்கள். ஏராளமான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், இந்த சுமையை யார் தாங்குவது? ஒருவர் கைக்கு வந்துவிட்டாலேயே, அவரை எப்படி பொறுப்பாக்குவது?. எனவே, கள்ளநோட்டுகளை அறவே ஒழிக்க, ஒரு புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

நன்றி: தினத்தந்தி

News

Read Previous

எலுமிச்சை சாறு

Read Next

திரும்பி நீ வரவேண்டும் !

Leave a Reply

Your email address will not be published.