சுத்தமான நகரத்துக்கு இலக்கணம் எது?

Vinkmag ad

அறிவியல்

 

சுத்தமான நகரத்துக்கு இலக்கணம் எது?

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜூன் மாதத்தில் வீடு வசதிநகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம்ஸ்வச் சர்வேக்ஷன்-2018 ( மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்கள் எல்லாம் சுத்தமான இந்தியில் மட்டும்தான் இருக்க வேண்டுமாகூடவே ஆங்கிலத்திலும் இருந்தால் தேசகௌரவம் குறைந்தா போய்விடும்?) என்ற அறிக்கையை வெளியிட்டது.  துப்புரவு மற்றும் நகராட்சியின் திடக்கழிவு நிர்வாக அடிப்படையில் 4,203 மாநகரங்களின் பெயர்களை தரப்படுத்தி வெளியிடப்பட்ட அறிக்கை அது. தரவரிசை எப்படி தீர்மானிக்கப்பட்டதுதிடக்கழிவு மேலாண்மை குறித்து அது எந்தவிதமான செய்தியைச் சொல்ல வருகிறது என்பது குறித்து ஆழமான சில கேள்விகள் உள்ளன.

ஒரு நகரம் சுத்தமாகக் காட்சியளிக்கிறதா என்பதற்கான பரிசை இந்தக் கணக்கெடுப்பு அளித்திருக்கிறது. ஆனால் அந்த நகரத்தில் நீடித்த கழிவு மேலாண்மை நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி அது கவலைப்பட வில்லை. மக்கள் பங்கேற்புடன் கூடிய பரவலாக்கப்பட்ட முயற்சிகளை அது அங்கீகரிக்கவில்லை. அது வரிசைப்படுத்தியுள்ள முதல் 50 மாநகரங்கள் பார்வைக்கு சுத்தமாக காட்சியளிக்கலாம். ஆனால் கழிவுகளை அகற்றுவதற்கு செயல்படுத்த வேண்டிய சரியான கட்டமைப்புகள் அந்த 50 மாநகரங்களில் பெரும்பாலானவற்றில் இல்லை. உதாரணமாகதரவரிசைப் பட்டியலில் மூன்றாவது சிறந்த மாநகரம் என்ற இடத்தை சண்டிகர் பெற்றிருக்கிறது. கழிவுகளை அவை உற்பத்தியாகுமிடத்தில் பிரிப்பதற்கு திறனுள்ள வழிமுறை அந்நகரத்தில் கிடையாது. கழிவுகளை சரியான முறையில் நிர்வகிக்கும் ஆலையோ ஒரு சட்டச் சிக்கலில் மாட்டி செயலற்று நிற்கிறது. தரவரிசையில் 4வது இடம் பெற்றிருக்கும் புதுதில்லி நகராட்சி கவுன்சில்தரவரிசையில் 32வது இடம் பெற்றிருக்கும் தெற்கு தில்லி நகராட்சி கவுன்சில் ஆகிய இரு இடங்களிலுமே கழிவுகளைச் சேகரிப்பதுமில்லை.. பிரிப்பதுமில்லை. மிக மோசமாகப் பராமரிக்கப்படும் கழிவிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் ஆலைகளில்தான் 80 சதமான கழிவு மேலாண்மை நடைபெறுகிறது. காற்று மண்டலத்தில் மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதற்காக ஓக்லா ஆலையின் மீதுள்ள குற்றச்சாட்டு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே போலதரவரிசைப் பட்டியலில் மேலே இடம் பிடித்திருக்கும் திருப்பதிஅலிகார்வாரனாசிகாசியாபாத் போன்ற மாநகரங்களில் கழிவுகளை  நிர்வகித்து அகற்றும் பணிகளை சரியான முறையில் நிறைவேற்றும் ஏற்பாடுகளே கிடையாது.

நீடித்த கழிவு மேலாண்மை வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் மாநகரங்கள் தரவரிசைப்பட்டியலில் கீழே வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நகரங்கள் தங்களது கழிவு மேலாண்மையை மிகவும் பரவலாக்கப்பட்டுள்ள முறையில் செய்வதும் கழிவுகளை வீடுவீடாகச் சென்று சேகரிக்கும் முறையைச் சார்ந்திருக்காததும்தான் காரணம் எனக் கணக்கெடுப்பு அறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக கேரளாவில் உள்ள 219-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஆலப்புழையையும் 286-வது இடத்தைப் பெற்றிருக்கும் திருவனந்தபுரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாநகரங்கள் வீட்டளவில் அல்லது குடியிருப்புப் பகுதி அளவில்  செயல்படும் கழிவு மேலாண்மை அமைப்புகளை மேற்கொண்டதன் காரணமாக அவற்றுக்கு தரவரிசைப் பட்டியலில் கீழான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநகரங்களில் உள்ள பெரும் அளவு கழிவுகள் வீடு அல்லது குடியிருப்புப் பகுதி அளவிலேயே கலப்பு உரமாகவோ அல்லது உயிரிவாயுவாகவோ மாற்றப்படுகின்றன. பிளாஸ்டிக்கண்ணாடி போன்ற கனிமப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. திடக் கழிவுகளை சேகரித்து குப்பை கொட்டும் இடங்களுக்குக் கொண்டு செல்ல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுவதற்குப் பதிலாகஇந்த நகரங்கள் திடக்கழிவுகளிலிருந்து வருமானத்தை ஈட்டுகின்றன. இந்த நகரங்களும் சுத்தமாகத்தான் இருக்கின்றன. திருவனந்தபுரத்தைவிட வாரனாசி சுத்தமான நகரம் என்று சொல்வதை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது.

சரியான கழிவு மேலாண்மை நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதை விட பார்வைக்கு சுத்தமாகக் காட்சியளிப்பதுதான் முக்கியமானது என கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. உண்மையில்பெரும்பாலான நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் முதலீடு அதிகம் தேவைப்படும் மத்தியப்படுத்தப்பட்ட குப்பை கொட்டும் இடங்களைக் கொண்ட கழிவு அகற்றல் முறைகள் கட்டுபடியாகாது. செலவு குறைவாக ஆகும் நீடித்த முன்னுதாரணங்களே அவற்றுக்குத் தேவை. நகராட்சிகளின் ரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் வழிமுறையைவிட அவற்றுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வழிமுறையே சிறந்ததாக இருக்க முடியும். அடுத்து வரும் ஆண்டுகளுக்கான ஸ்வச் சர்வேக்ஷன் அறிக்கைகள்  இதை மனதில் வைத்துக் கொள்ளட்டும்.

News

Read Previous

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா

Read Next

கட்டுரைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *