கொடுமணல் அகழாய்வுக்கு சங்க கால இலக்கியச் சான்றுகள்!

Vinkmag ad
கொடுமணல் அகழாய்வுக்கு  சங்க கால இலக்கியச் சான்றுகள்! 
——   ம. ஆச்சின்    
முன்னுரை :
தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து ஏறத்தாழ 9 கிமீ தூரத்திலும், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, கொடுமணல் (பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) பகுதியில் அகழாய்வு நடத்தியது.
ஊர்ச்சிறப்பு:
இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic Period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
aachin.jpg
aachin2.jpg
கொடுமணலில் தொல்லியல் பொருட்கள் :
இவ்வகழாய்வு, பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலத்திய பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு வண்ணப் பூச்சு கொண்ட பானை ஓடுகள், சிவப்பு வண்ணப் பூச்சு கொண்ட பானை ஓடுகள் மற்றும் சிவப்பு வண்ணம் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், குவார்ட்ஸ் மற்றும் களிமண்ணால் ஆன மணிகள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் குறியீடு கொண்ட பானை ஓடுகளும் சேகரிக்கப்பட்டன.
இப்பகுதியில் காணப்பட்ட பெருங்கற்காலக் கல்வட்டப் பகுதியிலும் அகழாய்வு செய்யப்பட்டது. நான்கு கால்கள் கொண்ட ஜாடி, கிண்ணங்கள், வட்டில்கள், மூடிகள் மற்றும் தாழிகள் முதன்மைக் கல்திட்டைக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டன.  இத்திட்டையின் தென்கிழக்குப் பகுதியில் காணப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்து 782 கார்னிலியன் மணிகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதல் கல்திட்டையின் கிழக்குப் பகுதியில் 169 செ.மீ நீளம் கொண்ட இரும்பு வாள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், நான்கு இரும்பு வாள்கள், செம்பு வடிகட்டி, சிறிய பிச்சுவாள் மற்றும் குறியீடு கொண்ட பானை ஓடுகளும் இவ்வகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
கொடுமணல் பழந்தமிழ் நாட்டின் வணிக நகரம்  என தொல்லியல் அகழாய்வுக்கு ஆதாரமாக விளங்கும் இலக்கியச் சான்றுகள் :
கொடுமணல் பழங்காலத் தமிழ்நாட்டின் வணிக நகராக இருந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணல் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
       “கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
          பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
          கடனறி மரபிற் கைவல் பாண
          தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”
          – (பதிற்று : 67) என்று கபிலரும்,
 
       “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
          பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”
          – (பதிற்று : 74) என்று அரிசில் கிழாரும்
பாடியுள்ளனர்.
விளக்கம் :
பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர். சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது.
கொடுமணம் எனும் கொடுமணல் பெயர் மாற்றிய காரணம் :
கொடுமணல் சங்க இலக்கியத்தில் “கொடுமணம்” என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமைமிக்க கைவினைக் கலைஞர்கள் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று குறிப்புகள் உள்ளன. தற்போது அங்கு நடைபெறும் அகழாய்வில் அப்பகுதியில் வணிகத்திலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் மிக முக்கியமான தொல்லியல் தளமான கொடுமணலில் நடந்து வந்த நான்கு மாத அகழாய்வு முடிவிற்கு வந்துள்ளது. இங்கு மக்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான கூடுதல் சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. மேலும் கிணறு போன்ற வடிவத்தில் தானியங்கள் சேமிக்கும் பகுதியும் கிடைத்துள்ளது. கொடுமணல் பழந்தமிழர்களின் வாழ்விடப் பகுதி மற்றும்  வணிக நகராக இருந்ததற்கு ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
கொடுமணல் அகழாய்வின் வரலாறு:
மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation) மற்றும் ஈமக்குழி (Burial Complex) என இரண்டு வகையான இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்களாயினும் பெரிய கற்பலகைகள் மற்றும் பெரிய கற்களைப் பெருமளவில் பயன்படுத்தியமையால் இவர்களைத் தொல்லியலாளர்கள் பெருங்கற்படை (megalithic) பண்பாட்டுக்குரிய மக்கள் எனக் கருதுகின்றனர். இந்த அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse – stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன. குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper),  பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapis lazuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது. அக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் அவர்தம் நூலில் (Warmington, E.H., The commerce between the Roman Empire and India, 1948) குறிப்பிட்டுள்ளவை யாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடு கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது. கருப்பு -சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானைகளில் பல்வேறு வகையான குறியீடுகள் (graffiti) காணப்படுகின்றன. இக்குறியீடுகள் எதற்காகப் பானைகளில் கீறப்பட்டன என்பதும், இக்குறியீடுகள் குழுக்குறியீடுகளா அல்லது எழுத்துகளின் தோற்ற நிலைகளின் முதல் கட்டமா? போன்றவை குறித்து ஆய்வாளர்களிடையே இன்று வரை விவாதங்கள் தொடர்கின்றன. மேற்சுட்டிய கருப்பு-சிவப்பு, கருப்பு நிற மற்றும் வண்ணப்பூச்சு (russet quated) கொண்ட மண்கலங்களில் எழுத்துப் ( தமிழ் பிராமி/தமிழி/ தமிழ்) பொறிப்புகள் காணப்படுகின்றன. இது கொடுமணல் அகழாய்வுச் சிறப்புகளில் ஒன்றாகும். அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட மண்கலச் சில்லுகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மண்கலச் சில்லுகளில் பழம் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது பெருமைக்குரியதாகும். மண்கலங்களில் காணப்படும் பெயர்கள் பல (காட்டாக: ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன்) சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றன. அக்காலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்குகின்றன எனில் மிகையன்று.
அக்காலத் தமிழ்ப் பண்பாட்டோடு பிராகிருத மொழி பேசிய மக்களின் கலப்பு இருந்ததற்கான பல சான்றுகளும் (காட்டாக: நிகம, விஸாகீ) பானை எழுத்துப் பொறிப்புகளின் வாயிலாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இது இப்பகுதியினுடன் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிக நிமித்தமாகக் கலந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
 24 காரட் மற்றும் 22 காரட் மதிப்புடனான பொன் ஆபரணங்கள், வெள்ளி மோதிரங்கள், ஈயத்தாலான வளையல்கள், வளையங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் (காட்டாக: அரிய கற்கள் பதிக்கப்பட்ட வெண்கலத்தாலான புலி), விளையாட்டுப் பொருள்கள், மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் ஈமக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள், உலைகள் (furnace), மரக்குச்சிகள் பூமியில் நடப்பட்டதற்கான அடையாளங்கள் என அக்காலப் பண்பாட்டு நாகரிகம் சார்ந்த எச்சங்கள் கொடுமணல் அகழாய்வில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
500 கிலோ எலும்புக் கூடுகள்:
இந்தப் பகுதியில் 500 கிலோ எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அது என்ன விலங்கின் எலும்பு என்று தெரிந்துகொள்ள 75 கிலோ எலும்புக் கூடுகள் ஆய்வுக்காக அனுப்பப்பட இருக்கிறது. 25 மீட்டர் அளவிலான ஓர் இடிந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான ஆய்வை விரிவுபடுத்தினால் அது நீர்வழிப் பாதையாக இருந்ததா என்பதும் தெரியவரும்.
நெசவுப் பொருட்கள்:
நெசவுத் தொழில் செய்வதற்குத் தேவையான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே பண்டைய காலத்தில் இப்பகுதி வர்த்தகத்திற்கான முக்கிய நகரமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் கொடுமணல் நொய்யல் நதிக்கரையில் உள்ள தொல்லியல் தளமாகும். மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கல் அடுக்கு சங்ககாலத்தைச் சேர்ந்ததாகும்.
தானியக் களஞ்சியம்:
கிணறு வடிவத்திலான தானியக் களஞ்சியம் 4.25 மீட்டர் உயரத்தில் மக்கிய நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தானியக் கிடங்கு மூன்று அடி ஆழத்திற்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள்:
மேலும் அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த ஈமத் தாழிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் மூன்று வகையான இறுதிச் சடங்குகள் நடைபெற்றிருந்தது தெரியவந்துள்ளது. தாழிகளில் ஒன்றில் மனித மண்டை ஓடு, பல், கை மற்றும் கால் எலும்புகள் கிடைத்துள்ளது. இது இந்தப் பகுதியின் காலத்தை வரையறுக்க உதவும். இவை மரபணு ஆய்விற்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
எழுத்து பொறிக்கப்பட்ட குவளை மற்றும் ஓடுகள்:
‘சம்பன்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட  குவளையும், ‘ஏகன்’ என்ற பெயர்ச்சொல் பொறித்த மண் கலங்களின் ஓடுகள் இரண்டும் கிடைத்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்து பொறிக்கப்பட்ட ஓடுகள் கிடைத்துள்ளது.  இதற்குமுன் 2014-ம் ஆண்டு நடந்த அகழாய்விலும், ‘சம்பன்-சுமணன்’ என எழுதப்பட்டிருக்கும் பெரிய பானைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நொய்யல் ஆற்றுப் பகுதி அகழாய்வு:
திரு. ஜே.ரஞ்சித்  நொய்யல் ஆற்றுப் பகுதியில் அகழாய்வுப் பணி துவங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  2020-ம் ஆண்டு நடைபெற்ற 8-ஆவது  அகழாய்வில் தொழிற்கூடங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கால்வாய் நொய்யல் ஆற்றுப் பகுதி வரை சென்று இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் அப்போது ஆய்வுப் பணிக்கான காலம் முடிந்ததால் மேற்கொண்டு ஆய்வு நடைபெறவில்லை.  தற்போது 2 இடங்களில் 10 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தபோது 30 சென்டிமீட்டர் ஆழத்திலேயே கல்மணிகள், அதற்கான மூலப்பொருட்கள், கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்தால் இது 2300 ஆண்டுகளுக்கு முன் உள்ளதாக இருக்கும். மேலும், சுமார் 12 சென்டிமீட்டா் நீளத்தில் இரும்பினால் ஆன பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
முடிவுரை :
அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. இவ்விடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ.இராசு அவர்களாவார். பின்னர், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பகுதியில் இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள், கல்லறைகள் ஆகியவை தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய அகழாய்வு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வில், பழங்காலப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பு :
1, கொடுமணல் அகழாய்வு தமிழ்நாடு தொல்லியல் துறை.
[https://www.tagavalaatruppadai.in/excavations-id=“vword11_3″ data-popupmenu=”popmenu11_3”>details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1]
2,Madras review society, October 1, 2020  அகழாய்வு கொடுமணல் தொல்லியல்.
3.கொடுமணல் அகழாய்வு
முனைவர் பா.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை.
4.சங்க கால இலக்கிய நூல்..
ம. ஆச்சின்
aachinjisti@gmail.com,  9751822278
முதுகலை முதலாமாண்டு மாணவர்
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை  – 600 005.

News

Read Previous

ஆன்ட்ராய்ட் செயலிகளை கணினியில் பயன்படுத்துவது எப்படி?

Read Next

எங்களுக்கு ஒரு அரசு தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *