குப்பை மேலாண்மை

Vinkmag ad
490A-Chennai wasteஅறிவியல் கதிர்

குப்பை மேலாண்மை
பேராசிரியர் கே. ராஜு

குப்பைகளை நிர்வகிப்பதென்பது இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில்  சரியானதென நிரூபிக்கப்பட்டதொரு குப்பை மேலாண்மை நடைமுறை நமக்குத் தேவைப்படுகிறது. கழிவுகளை நிர்வகிப்பது, மறுசுழற்சி செய்வது இரண்டையும் பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (NAPCC)  வலியுறுத்துகிறது. இவ்விரண்டும் சுற்றுச்சூழலோடு இயைந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமானவை. உயிரி வேதியியல் மாற்றம், கழிவு நீர் பயன்பாடு, மறுசுழற்சிக்கான சாத்தியங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது என தேசிய செயல்திட்டம் முடிவு செய்துள்ளது. பொருட்களின் நுகர்வு, பொருளுற்பத்தி, கட்டுமானம், விவசாயம், ஆபத்தான பொருட்கள் உற்பத்தி, அவற்றின் பயன்பாடு முடிதல் போன்ற பல்வேறு வழிகளில் கழிவுப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. தாள்கள், உலோகங்கள், கண்ணாடி, நெகிழி, தகரம், மரம், மின்னணுப் பொருட்கள் போன்றவற்றின் கழிவுகள் வீடுகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் உருவாகின்றன.  இவற்றில் பெரும்பாலான பொருட்களை பயன்பாடு முடிந்தபிறகு மறுசுழற்சி செய்துகொள்ள முடியும். இதன் மூலம் இயற்கை வளங்களை அதிகம் வீணாக்காமல் பாதுகாக்க முடியும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். பூமியின் வளங்கள் எல்லையற்றவை அல்ல. அவற்றை நாம் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் நீடித்த பயன் கிடைக்கும். ஆனால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் படுவேகமாக நடந்துவரும் நகரமயமாக்கல் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. கழிவுகளை எந்த அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவுக்கு வேகமாக அவற்றை அகற்றவும் வேண்டும். கழிவுகளை அகற்றுவதென்பது தற்காலத்தில் மிகப் பெரிய சுமையாக மாறியிருக்கிறது.  உலக மக்கள் தொகை 2050-ல் 960 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போதைய உற்பத்தி முறைகளும் நுகர்வும் அப்படியே தொடருமானால், அப்போதைய வாழ்வியல் முறைகளையும் நுகர்வையும் சமாளிக்க பூமியைப் போல மூன்று கிரகங்கள் நமக்குத் தேவைப்படும்!
இந்தியாவின் பல நகரங்களில் கழிவுகள் உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை அறிவியல்ரீதியாகவும் நன்கு திட்டமிட்ட முறையிலும் பாதுகாக்கும் முறைக்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. பக்கத்தில் எங்கு காலியான இடம் இருக்கிறதோ அங்கு குப்பைகளைக் கொட்டுகிறோம். குப்பையை நைசாக பக்கத்து வீட்டுப் பக்கம் தள்ளிவிடுவதும் உண்டு. மூடப்படாத கழிவுநீர்க் குழாய்களில் குப்பைகளை பலரும் கொட்டுவதால் அவற்றில்  அடைப்பு ஏற்படுகிறது. தரையில் தேங்கியிருக்கும் நீரும் நிலத்தடி நீரும் இதனால் மாசுபடுகின்றன. விஷத்தன்மையுடைய வாயுக்கள் வெளியேறுவதால் காற்று மாசுபடுகிறது. கொசுக்களாலும் கழிவுகளை மேயும் விலங்குகளாலும் மக்கள் உடல்நலன் கெடுகிறது.
நாட்டில் தினசரி 1,35,000  மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவை மக்கும் தன்மையுடையவை. அதில் 30,000 டன்கள் மட்டுமே  உரமாகவோ ஆற்றலாகவோ மாற்றப்படுகின்றன. இவை போக, 41,523 தொழிற்கூடங்களிலிருந்து ஆண்டிற்கு 7.9 மில்லியன் டன் ஆபத்தான கழிவுகள் உற்பத்தியாகின்றன. இக்கழிவுகளை மறுசுழற்சி செய்யயலாம், எரிக்கலாம் அல்லது மண்ணில் புதைக்கலாம். மின்னணுக் கழிவுகளை (E waste) உற்பத்தி செய்வதில் உலகில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் 1.7 மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின.  தூசி உறிஞ்சிகள் (vacuum cleaners), வீடியோ காமெராக்கள், துணி துவைக்கும் கருவிகள், மின்சார அடுப்புகள், அலைபேசிகள், கால்குலேட்டர்கள், கணினிகள் போன்றவை காலாவதியாகும்போது மின்னணுக் கழிவுகள் ஆகி சுற்றுப்புறத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கின்றன. சிஎஃப்எல் பல்புகளில் பாதரசம் உள்ளதால் அதைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும்போது மிகப் பெரிய கேட்டினை மக்கள் உடல்நலனுக்கு விளைவிக்கிறோம். கழிவுகளை மக்கும் குப்பை, மக்காதவை எனப் பிரித்து அவற்றை அகற்றி சரியான முறையில் மறுசுழற்சி செய்தோ உரம் அல்லது ஆற்றலாக மாற்றியோ நிர்வகிப்பதில் நமது உள்ளாட்சிகள் கவனம் செலுத்துவதுதான் ஸ்வச் பாரத் திட்டத்தின் இலக்காக இருக்க வேண்டும். அந்தத் திசையில் அத்திட்டம் செயல்பட இன்னமும் தொடங்கவே இல்லை.
(உதவிய கட்டுரை : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான கட்டுரை)

News

Read Previous

பாஸ்போர்ட்

Read Next

விசா பெற வழிகாட்டும் இணையத்தளங்கள்!……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *