‘ஆதார்’ இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

Vinkmag ad
‘ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,” என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் கூறினார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

சாதாரண முறையில் விண்ணப்பிக்கும் போது, போலீஸ் அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு கட்டணம், 1,500 ரூபாய். இந்த நடைமுறையை, வெளியுறவு துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. இனிமேல் சாதாரண முறையில், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது, ‘ஆதார்’ அட்டை, ‘பான்கார்டு’ எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு – 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல், பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், போலீஸ் அறிக்கை பெறப்படும்.
பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், ‘தத்கல்’ முறையும் அமலில் உள்ளது; அதற்கு கட்டணம், 3,500 ரூபாய்.
வசதியான நேரம்
ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, ‘ஆன்லைனில்’ தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல், வெள்ளிக் கிழமை வரையிலான, ஐந்து நாட்களில், எந்த நாளிலும் வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை, ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை, மாற்றிக் கொள்ளவும் முடியும்.
மொபைலில் அறிக்கை
போலீஸ் அறிக்கை பெற, விண்ணப்பதாரரின் விவரங்கள், மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை, தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு, போலீஸ் சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட, 21 நாட்களுக்கு முன், மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும். பாஸ்போர்ட் உதவி
மையங்கள், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன; இதற்கு, சேவை கட்டணம், 100 ரூபாய்.
நீட்டிப்பு
மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, பிப்., 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் துவங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள், பிப்., 8 வரை விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
விண்ணப்பதாரர்கள், 1,500 ரூபாய் கட்டணத்துடன், ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு – 1 படிவம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினால், போலீஸ் அறிக்கை பெறாமல் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
கே.பாலமுருகன்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்

News

Read Previous

ஆங்கிலம் கலந்து பேசுவது தமிழை அழிக்கும் செயல்!

Read Next

பிடிவாதம் சரியா? தவறா?

Leave a Reply

Your email address will not be published.