பாசக்கடல் “ஷாஹா”

Vinkmag ad

60 ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்து 90 வயதைக் கடந்துள்ள முஸ்லீம் எழுத்தாளர் யார்?

அறிந்து கொள்ள நர்கிஸ் வாசகர்கள் விரும்பலாம்.

அவரே பதில் சொல்கிறார்.

ஷாஹா என்பது என் புனைப் பெயர். முழுப் பெயர் ஷாஹுல் ஹமீது. புனைப்பெயரில் மோகம் கொண்டவனில்லை நான். ஒரு நிர்பந்தத்தால் இந்தப் பெயரைச் சூட்டினேன். மணிவிளக்கு ஆசிரியர் (ஆ.கா.அ. அப்துஸ் ஸமது) ஷகீலா என்ற மற்றொரு பெயரைச் சூட்டினார்.

உங்கள் பூர்வீகத்தைக் கூறலாமா?

இராமநாதபுரம் மாவட்ட சித்தார்கோட்டையில் 1919 –ல் பிறந்தேன். சீறாப்புராணம் படைத்த உமறுப்புலவரின் வழித்தோன்றல்கள் நாங்கள். ஹாஜி. மு.சீ. முஹம்மது களஞ்சியம் மரைக்காயர் என் தந்தையார். தாயார் இப்ராஹீம் அம்மாள். மூன்று தலைமுறைக்கு முன் ஏற்பட்ட பர்மா தொடர்பு எங்களை மூலைக்கு மூலை பிரித்து விட்டது. தந்தையார் தமிழ், அரபி, உர்தூ, பார்ஸி மொழி அறிந்த இலக்கியவாதி. அவரால் நான் இலக்கிய உணர்வு பெற்றது முதல் கட்டம்.

உங்கள் கல்வி, தொழில் பற்றி…?

உள்ளூரிலேயே அரபி மொழி கற்றேன். ஆசிரியர் ‘பெரிய ஆலிம்’ என அந்நாளில் அழைக்கப் பெற்ற மெளலவி அஹ்மது இபுராஹீம் ஆலிம். உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து ஊட்டி வளர்த்தவர் திரு.என். ராமகிருஷ்ண ஐயர். இரு ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிப்பாக இரண்டு கதைகளை எழுதினேன். தமிழ் கற்பித்தவர்கள் வித்துவான் சிவஞானம் பிள்ளை, கார்மேகக் கோனார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1941-ல் பி.ஏ. பட்டப்படிப்பை முடித்து விட்டு பர்மாவுக்குச் சென்றேன். அங்குள்ள சோலியா உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலை.

உங்கள் எழுத்துத் துறையைப் பற்றி …?

கதை எழுத வேண்டும் என்ற ஆசை கல்லூரி மாணவனாக இருந்த . போதே மனதில் அரும்பு கட்டி விட்டது. அமுதசுரபி பத்திரிகையில் 1948 –ல் எழுத ஆரம்பித்தேன். அடுத்தடுத்து மூன்று சிறுகதைகளை அதன் ஆசிரியர் திருவேம்பு பிரசுரித்தார். இந்த காலத்தில் எனக்கும் எழுத்தாளர் மாயாவிக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கதைகளை விரும்பிப் படித்தேன். உடனுக்குடன் விமர்சனம் எழுதுவேன். அவர் உற்ற நண்பராக, உடன்பிறவா சகோதரராக இருந்தார். சுதேசமித்திரனிலும் அப்போது எழுதினேன். 15 ரூபாய் அன்பளிப்புக் கிடைத்தது. சென்னை வானொளியில் பணியாற்றிய மாயாவியின் மூலம் அகிலன், கலைமகள் கி.வா.ஜ. முதலானோரின் நட்பைப் பெற்றேன்.

அடுத்த கட்டங்கள் எப்படி?

ஐந்து வருடம் தொய்வு. பர்மாவில் ஏற்பட்ட குடும்பப் பொருளாதார சுழற்சியினால் எழுதுவதை நிறுத்தி விட்டேன். ரங்கூனுக்கு வந்த மணி விளக்கு ஆசிரியர் தூண்டியதால் மீண்டும் எழுதத் தொடங்கினேன். அந்த இதழில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை ஆ.கா.அ. கேட்டுக் கொண்டபடி மொழி பெயர்த்தேன். ‘இக்வானுஸ் ஸபா’ நூலை ‘மனிதனா? மிருகமா? என்ற தலைப்பில் தந்தேன். முக்கியத் திருப்பத்தைத் தந்தது. ‘இன்ப வேதனை’ தொடர்கதை… அடுத்து பாசக்கடல், மலர்மாலை,அன்னை பூமி தொடர்கதைகள். என் எழுத்தில் அக்கறை கொண்ட நட்பு வட்டம் அருகில் இருந்தது

நண்பர் எழுத்தாளர் நூன் முக்கியமானவர். பத்திரிகையாளரான அவர், சோலியா முஸ்லிம் பள்ளியின் மேலாளராகவும் இருந்தார்.

உங்களுக்கும் பத்திரிகை அனுபவம் உண்டா?

பள்ளி ஆசிரியராவதற்கு முன் சாந்தி தினசரியில் பணிபுரிந்தேன். இரங்கூனில் சிறப்பாக வெளிவந்த பத்திரிகை அது. இரண்டு வருடம் அதில் இருந்து விட்டு சோலியா பள்ளிக்கு மாறினேன். பர்மாவில் வாழ்ந்தாலும் இந்திய ஹிந்தி பத்திரிகைகளுடன் தொடர்பு உண்டு. சரிகா, தர்மயுக் இதழ்கள் என் சிறுகதைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டன. பர்மிய மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன.

உங்களுக்குப் பிடித்தவர்கள்?

அது ஒரு பெரிய பட்டியல் … இதோ எதிரில் இருக்கும் உங்களையும் இந்த டாக்டரையும் சொல்லாமல் இருக்க முடியுமா? நீங்கள் என் உடன்பிறவா தம்பி… டாக்டர் ஹிமானா சையத் என் மைத்துனர். அரை நூற்றாண்டாக நாம் இருவரும் இறைவனின் நாட்டப்படி இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறோம். இத்தனையாண்டுகளாக நாம் எழுதிய கடிதங்கள் பாசநேசத் தொகுப்பல்லா?

தமையனார் ஷாஹா நெகிழ்ச்சியுடன் ஆரத் தழுவி நல்லாசி கூறி இரங்கூனுக்குப் புறப்படும் வரை, இரண்டு வாரத்திற்கு மேல், நானும் டாக்டர் ஹிமானா சையதும் (’நர்கிஸ்’ கெளரவ ஆசிரியர்) அன்றாடம் அவர்களுடன் ஆன்மீக, இலக்கிய உரையாடல்களில் ஆழ்ந்திருக் கிறோம். பாசக் கடலான ஷாஹாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

இது ஓர் அத்தியாயம் !

சந்திப்பு : ஜே.எம். சாலி

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – ஆகஸ்ட் 2009

admin

Read Previous

வெறுப்பு

Read Next

துக்ளக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *