துபையில் வேலை வாய்ப்பு ? – குத்தாலம் லியாகத் அலி பேட்டி !

Vinkmag ad

துபையில் வேலை வாய்ப்பு ?

( குத்தாலம் லியாகத் அலி பேட்டி ! )

குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஈமான் பொதுச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். சட்டத்துறை அலுவலகத்தில் நிதிப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவர் காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளராக இருப்பதுடன் துபை தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப் பினராகவும் இருந்து வருகிறார். சென்னை வந்திருந்த குத்தாலம்      ஏ.லியாகத் அலி துபையில் தற்சமயமுள்ள வேலை வாய்ப்பு குறித்து “இனிய திசைகள்” இதழுக்கு அளித்த பேட்டி இதோ:

? பொருளாதார வீழ்ச்சியால் துபை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் துபையை வெகு வாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட்ஸ் கட்டட நிர்மாண நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி விட்டன. வெளி நாட்டவர் களுடைய முதலீடுதான் துபையின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி யாக அமைந்திருந்தது. இப்போது ஏறக்குறைய 50 சதவிகிதம் வெளி நாட்டவர் முதலீடு கீழிறங்கி விட்டது.

? வெளி நாட்டவர் முதலீடு குறையக் காரணம்?

வெளிநாட்டவர் முதலீடு செய்து மிகப்பெரிய கட்டடப் பணிக ளெல்லாம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தன. அந்த கட்டடப் பணி களுக்கெல்லாம் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்கள் வழங்கின. இப்போது வங்கிகள் முற்றிலுமாகக் கடன் தருவதை நிறுத்தி விட்டதால் பல கட்டடப் பணிகள் அப்படி அப்படியே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

? முற்றிலுமாகக் கட்டடப்பணிகள் நின்று விட்டனவா?

அப்படி இல்லை ஏற்கனவே வங்கிக்கடன் பெற்ற பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. சமாளிக்கக் கூடிய திறமையுள்ள நிறுவனங்களின் கட்டடப்பணிகள் ஏற்கனவே இருப்பது நடந்து கொண்  டிருக்கின்றன. புதிய கட்டுமானத் திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பழைய பல கட்டுமானத் திட்டங்களுக்குக்கூட வங்கிக்கடன் கிடைக் காததால் கிடப்பில் கிடக்கின்றன. விமான நிலையக் கட்டடப் பணிகள் கூட இன்னமும் முடிவடையாத நிலையே உள்ளன.

? இதனால் வேலை வாய்ப்பு நிலை என்ன ஆயிற்று?

கட்டுமானப் பொறியாளர்கள், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்த நிலைமை மாறி நாளுக்கு நாள் வேலை இழக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவது வேதனை தருவதாக உள்ளது.

? வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எப்படி உள்ளன?

வங்கி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் ஐ.டி. துறை வெகுவாகப் பாதித்துள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் ஏறக்குறைய 700 பேர் வேலை இழந்துள்ளார் கள்.’அவுட்சோர்சிங்’ இந்தியாவுக்கு வந்துவிட்டதும் இதற்கு முக்கிய காரணமாகும். அப்படி வேலை இழப்பவர்களுக்கு இந்தியாவில் இந்திய சம்பள விகிதப்படி வேலை கிடைக்கச் சில நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்தபோதிலும் அவை உறுதியானதாக இல்லை. ஐ.டி. துறையைப் பொறுத்தமட்டில் துபையை விட இந்தியாவே சிறந்திருக்கிறதென்று கூறலாம்.

? ஏனைய வணிகத்துறைகள் எப்படி உள்ளன?

பிற வணிகங்கள் எப்போதும் போல் நடைபெற்று வருகின்றன. என்றாலும் ஏறுமுகம் இல்லை. பழைய அதே அளவிலுள்ள தொழி லாளர்களைக் கொண்டே சமாளித்து வருகிறார்கள். நான்கைந்து மாதங் களுக்கு முன்பு இவையும் பாதிக்கப்படுமென்றும் அதனால் வேலை இழப்பு வெகுவாக அதிகரிக்குமென்றும் அச்சமும் பீதியும் ஏற்பட்டன. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை தற்சமயம் பரவாயில்லை யென்றே சொல்லலாம்.

? தற்சமயம் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது?

சி.ஏ, பி.காம், எம்.காம் முதலானவற்றைப் படித்தவர்களுக்குத் தற்போது சராசரியாக வேலை வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. வங்கிப்பணிகள், கட்டுமானப் பணிகள் நீங்கலாகப் பிற பணியிடங்களில் வேலை வாய்ப்பு இருக்கவே செய்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையப் பணிகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது. என்றாலும் பழைய வேகமில்லை; ஊதியமும் சற்றுக் குறையவே செய்கிறது.

? பொருளாதாரச் சரிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீளுமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்சமயம் மருத்துவமனை, வீட்டு மனைகள், வணிக வளாகங்கள் முதலியன கட்டும் பணியில் 1372 கட்டு மானத் திட்டங்கள் 900 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 566 கட்டுமானத் திட்டங்கள் பொருளாதாரத் சரிவின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டும். கைவிடப்பட்டுமுள்ளன. என்றாலும் வேலை வாய்ப்பு குறிப்பாக இந்தியர்களுக்கு நிறையவே இருக்கத்தான் செய்கிறது.

செளதி அரேபியாவில் 422 கட்டுமானத் திட்டங்கள் 114 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெற்று வருகின்றன. 18 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கத்தாரில் 124 கட்டுமானத் திட்டங்கள் 42 பில்லியன் டாலர் முதலீட்டில் நடைபெறுகின்றன. 7 திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

ஓமனில் 38 பில்லியன் டாலர் முதலீட்டில் 95 திட்டங்கள் நடந்து வருகின்றன. 8 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பஹ்ரைனில் 148 திட்டங்கள் 36 பில்லியன் டாலர் முதலீட்டில் நடை பெறுகின்றன. 54 திட்டங்கள் இங்கு நிறுத்தியும் தள்ளியும் வைக்கப் பட்டுள்ளன.

இந்த சரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி ஏற்படுமெனத் தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

? ஐக்கிய அரபு அமீரக ஜனத்தொகை எவ்வாறு இருக்கிறது?

2990 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனத் தொகை முதன்முறையாக ஐந்து மில்லியன் அளவைக் கடக்க விருக்கிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட 7 பகுதிகள் இணைந்து 38 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் உருவாயிற்று. அதன் வரலாற்றில் முதல் முறையாக ஜனத்தொகை அளவு கூடவிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு இறுதியில் 4.765 மில்லியன் என இருந்தது இவ்வாண்டு இறுதியில் 5.066 மில்லியன் அளவுக்கு உயரும்.

ஜனத்தொகை அளவில் முதலாவதாக இருந்த அபுதாபியை 2008 ஆம் ஆண்டில் துபை விஞ்சியது. துபையில் 2008 ஆம் ஆண்டில் 1.596 மில்லியன் எண்ணிக்கை 2009 ல் 1.722 மில்லியனாக உயர்கிறது. இரண்டாமிடத்திலுள்ள அபுதாபியின் ஜனத்தொகை அளவு 2008ல் 1.559 மில்லியனாக இருந்தது 2009ல் 1.628 மில்லியனாக உயர்கிறது. மூன்றா மிடத்திலுள்ள ஷார்ஜாவின் ஜனத்தொகை 2008ல் 9,46,000 என்ற அளவி லிருந்து 2009ல் 1.017 மில்லியனாக உயர்கிறது.

நான்காமிடத்திலுள்ள அஜ்மானில் 2008ல் இருந்து 2,37,000 என்பது 2009லிலும் அதே அளவு தொடர்கிறது. ராஸல் கைமாவில் ஜனத் தொகை 2,31,000 என 2008ல் இருந்தது. 2009ல் 2,41,000 ஆக உயர்கிறது. புஜீராவில் 1,43,000 (2008) லிருந்து 1,52,000 ஆக உயர்கிறது. உம்மல் குவைனில் 53000 லிருந்து 56000 ஆக உயர்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இளைஞர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,77,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,30,000 ஆக உயர்கிறது. 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் 2008ல் 7,54,000 பேர் இருந்தனர். இது 2009ல் 8,06,000 ஆக உயர்கிறது.

? படித்து வரும் இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை?

துபையின் நிலைதான் மோசமே தவிர அபுதாபி, மஸ்கட், கத்தார் போன்ற இடங்களில் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. எனவே கட்டுமானத் தொழில் சார்ந்த படிப்பு படித்தவர்கள் தொழிலாளர்கள் அங்கே வேலை வாய்ப்பினைப் பெற முயற்சிக்கலாம். அபுதாபியில் கட்டுமான நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் தரப்படுகிறது. இதற்கு அங்குள்ள கலீபாவே ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அபுதாபியில் இன்னும் 3 மாதங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே அங்கு வேலை வாய்ப்பு பாதிப்பு வராது.

துபையின் இன்றைய சூழல் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாறி விடும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும். எனவே இப்போது படித்துக் கொண்டிருக்கிற மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் படித்து முடித்து வருவதற்குள் இன்ஷா அல்லாஹ் துபையின் நிலைமை முன்னேற்றமடைந்து விடுமென நம்பலாம். இன்றைக்கு இன்ஜினீயரிங் மோகம் குறைந்து வருவதற்குத் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பல்லாயிரக் கணக்கில் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளதே சாட்சியாகும். மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் உலக அளவில் வேலைவாய்ப்பு கூடியிருக்கிறது. மாணவர்கள் அதிலும் கவனம் செலுத்தலாம்.

இறையருளால் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். தன்னம்பிக்கை யோடு இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சந்திப்பு : சேயோன்.

நன்றி :
இனிய திசைகள்
சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
அக்டோபர் 2009

eniyathisaigkal@gmail.com

admin

Read Previous

நினைவலைகள்…

Read Next

இஸ்லாமியர்களின் இதழியல் பணி

Leave a Reply

Your email address will not be published.