சகோதரர் S.A. அப்துல் மாலிக் அவர்களின் சிறப்பு பேட்டி

Vinkmag ad

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

அண்மையில் மணிச்சுடர் நாளிதழில் மறைந்த சகோதரர் S.A. அப்துல் மாலிக் அவர்களின் சிறப்பு பேட்டி வெளியாகியிருந்தது, அதனை ஒருங்குறியீட்டில் தட்டச்சு செய்து உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.. வளைகுடாவாழ் தமிழர்களின்பால் அவர்கொண்டிருந்த பாசம் இந்த பேட்டி முழுவதும் வெளிப்படுவது அவரின் தன்னலமற்ற சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு…

இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து நல்பதவி வழங்கவும், அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரின் இழப்பை தாங்கக்கூடிய மனவலிமையை தரவும், அவரின் கனவுகளை நனவாக்க நம் அனைவருக்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரவும் இறைவனிடம் இருகரமேந்துகின்றேன்.

பிரிவுத்துயருடன்…

இம்தியாஸ் அஹமது
செயலாளர்
சவூதி தமிழ்ச் சங்கம்.

imthias@imthias.com

‘வெளிநாடு வாழ் இந்தியர் நலன் காக்க தமிழ்நாட்டில் தனித்துறை ஏற்படுத்த வேண்டும்!’ ராஜகிரி எஸ்.ஏ. அப்துல் மாலிக் கோரிக்கை – மணிச்சுடர் நாளிதழ்

பிறந்தோம் வாழ்கிறோம் என்பது ஒரு சாராசரி மனிதனின் இயல்பு. பிறந்த ஊருக்கு நல்லது செய்ய நினைப்பது மனித இயல்பின் உயர்ந்த பண்பாடு. எங்கு வாழ்ந்தாலும் சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது என்பது உயர்ந்த பண்பாட்டின் உச்சகட்டம்.

ஆம்! அந்த உயர்ந்த பண்பாட்டினை கொண்டவர்தான் சவூதி அரேபியா ஜித்தாவில் வாழ்கின்ற எஸ்.ஏ. அப்துல்மாலிக். தஞ்சை மாவட்டம் ராஜகிரியை சேர்ந்தவர். ஜித்தாவிலுள்ள சராவாத் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ளார்.

சவூதியிலுள்ள இன்டர்நேஷ்னல் இந்தியன் ஸ்கூல்ஸ் உயர்மட்ட குழு உறுப்பினர், ஜித்தா தமிழ்ச் சங்கம், சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர், இந்திய புனித பயணிகள் பேரவையின் நிறுவன தலைவர் என பல்வேறு பொறுப்புக்களில் இடம் பெற்று மிகச் சிறப்பான சேவையாற்றி வருகிறார்.

அவருடைய சேவையை பாராட்டி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் சமுதாய ஒளிவிளக்கு பட்டம் அளித்து கவுரவித்தது.

அவருடைய உணர்வுகளையும் எண்ண வெளிப்பாடுகளையும் எல்லோரும் அறிந்து கொள்ள செய்ய வேண்டுமென்ற நோக்கில் ‘மணிச்சுடர்| நாளிதழுக்காக பிரத்யேக பேட்டி கண்டபோது வெளிவந்த அவரது கருத்துக்களிலிருந்து……….

வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

அரபுலகமான வளைகுடா நாடுகளில் இன்று முப்பது லட்சம் இந்தியர்கள் பணி செய்கின்றனர். சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் இதில் ஏறத்தாழ மூன்றரை லட்சம்பேர் தமிழர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்று பேசுகின்ற போது எல்லோரையும் சமநிலைப்படுத்திப் பார்க்கக் கூடாது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தொழில் அதிபர்களாகவும், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போன்ற உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். பலர் அந்நாட்டு குடியுறுமைப் பெற்று வசதியாக வாழ்பவர்கள்.

அரபுலகில் வாழுகின்ற இந்தியர்கள் அப்படி அல்ல. மிகக் குறைந்த ஊதியத்திற்கு சாதரண வேலை பார்ப்பவர்கள். ஆகவே, கோபுரத்தின் உச்சியில் இருப்பவர்களையும், அதன் அடித்தட்டில் கூட ஏற முடியாமல் தவிப்பவர்களையும் ஒரே அளவு கோலில் எடை போடக்கூடாது.

அரபுலகில் வாழ்கின்ற இந்தியர்கள் சுமார் 15 முதல் 30 ஆண்டுகள் வரை அங்கு பணி செய்து தாங்கள் பெறும் ஊதியத்தை தாயகமான இந்தியாவிற்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் அந்நியச் செலவாணிக்கு பெரும் துணைபுரிகின்றனர்.

ஆனால், குறைந்த சம்பளத்தில் வேலை பார்பதால் இவர்கள் தாயகம் திரும்பியபின் பெரும்பாலும் கஷ்டப்படுகின்றனர். எனவே, வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு அமல் படுத்த வேண்டும் இதில் தமிழகம் இந்தியாவிற்கே வழி காட்ட வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான ஒரு பகுதித் துகையை இங்குள்ளவர்கள் தங்கள் சம்பளத்தில் மாதாமாதம் அரசு சேமிப்பு நிதிக்கு அனுப்ப தயாராக உள்ளனர்.
;
இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் என்பதால் மற்ற நாடுகளில் உள்ளதுபோல் இந்திய அரசு இவர் களுக்காக குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். கடந்த ஆட்சியின் போதே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் இதற்கான கோரிககையை வைத்தோம் அதனை பரிசீலித்து நடைமுறைப் படுத்தவேண்டும்.

திருச்சி என்.ஐ.டி.யில் தமிழக என்.ஆர்.ஐ.களுக்கு தனி இட ஒதுக்கீடு:

சவூதி அரேபியாவில் தம்மாம், ஜித்தா, ரியாத், தாயிப், ஜுபைல், தபூக், புரைதா, அல்-ஹாக், மஜ்மா உள்ளிட்ட 10 இடங்களில் இந்தியப் பள்ளிக் கூடங்கள் உள்ளன. இதில் 60,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தம்மாம் பள்ளியில் மட்டுமே இந்திய மாணவர்கள் 13,000 பேர் கற்கின்றனர்.

இவர்களுக்கு சேவையாற்றுவதற்காக சவூதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர், சவூதி அரேபிய நாட்டின் கல்வித்துறை செயலாளர் மற்றும் சமுதாய நல உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஐவர் குழு அடங்கிய உயர் மட்டக்குழு உள்ளது. அக்குழுவில் முதலாவது தமிழராக பணி செய்கிறேன்.
வளைகுடா நாடுகளில் சுமார் 150,000 இந்தியப மாணவர்கள் கல்வி கற்கின்றனர். நாடு முழுவதுமுள்ள என்.ஐ.டி.,களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திருச்சியில் மட்டுமே என்.ஐ.டி., உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள். உள்நாட்டில் படித்திருந்தாலும் மற்ற மாநிலங்களில் உள்ள என்.ஐ.டி.,களில் அனுமதிக்கின்றனர். ஆனால் திருச்சி என்.ஐ.டி.,யில் வெளிநாட்டில் படித்த மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றனர்.

இந்த 10 சதவீத விழுக்காடு கோட்டாவில் பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் உயர் அதிகாரியின் பிள்ளைகள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இலகுவாக திருச்சியில் இடம் கிடைத்துவிடுகிறது. இதனால், வெளிநாடு வாழ் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருச்சி என்.ஐ.டி.,யில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு குறிப்பாக வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அமல் படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவூதி அரேபியாவில் இந்தியர்களின் எதிர்காலம்:

இந்தியர்களுக்கு சவூதி அரேபியாவில் சிறந்த எதிர்காலம் உண்டு. ஆனால், இங்கு வருபவர்கள்; குறைந்தபட்சம் ஐ.டி.ஐ.,யாவது படித்து 2 வருட அனுபவம் பெற்று சவூதி வேலைக்கு முயற்சிக்க வேண்டும். வெளிநாட்டு வேலை என படிக்காதவர்கள் ஆசைப்பட்;டு இங்குவந்து அவஸ்தை படக்கூடாது.
இரண்டாவது, ஏஜென்டுகள் சரியானவர்களா? அவர்கள் அரசு உரிமம் பெற்று அதன்படி நடக்கின்றவர்களா? தருகின்ற விசா உண்மையானதா? வாக்களித்த வேலைக்குரியதா? என்பதை பற்றியெல்லாம் விவரம் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து தெரிந்தபின்பே சவூதி வரவேண்டும்.

தொழிலாளர்களாக வருகின்றவர்களுக்கு லேபர் ஹெல்த் இன்சூரன்ஸ், இரு வழி ரிட்டன் டிக்க்ட்டுக்கான டெபாஸிட் அந்தந்த ஏஜென்ஸிகள் செய்து கொடுக்க வேண்டுமென்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். மிகக் குறைந்த சம்பளத்திற்காக சவூதி வருவதை தவிர்ப்பதே நல்லது.
இங்கு ஏற்படும் பிரச்சனைகளால் வேலை இழந்து நிர்பந்தமாக திரும்பும் தமிழர்களுக்கு உதவும் வகையில் நமது அரசு இடைகால நிவாரண நிதியை நிரந்தரமாக ஏற்டுத்த வேண்டும்.

ஹஜ் புனிதப் பயணம்:

ஆண்டுதோறும் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுகின்ற புனித ஹஜ் பயணத்திற்கு இந்தியாவிலிருந்து ஒன்றறை லட்சத்திற்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதையும் மிரட்டுகின்ற தொற்று நோய்க் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபிய அரசு ஹஜ் பயணத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 65வயதிற்கு மேற்பட்டவர்களும், பத்து வயதுக்குட்பட்டவர்களும் புனித பயணம் செல்ல இயலாது. குலுக்கலில் ஏற்கெனவே இடம் கிடைத்தவர்கள் இந்த பட்டியலில் இருந்தால் அவர்களும் பயணம் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்குப் பதிலாக மற்றவர்களே செல்ல வாய்ப்பு ஏற்படும். எனவே, புனித ஹஜ் பயணம் சம்பந்தமாக உரிய தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் கேட்டு பெற வேண்டும்.

பொதுவாகவே, ஹஜ் பயணம் மேற்கொள்கின்றவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். முதலில், லட்சக்கணக்கானோர் கூடுகின்ற புனித தலங்களில் தங்களைத் தாங்களே எப்படிக் காப்பாற்றிக்கொள்வது, எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள், விபத்துக்களிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? அதைப் போன்று உடல் நல குறைபாட்டிற்காக மருத்துவ உதவிகள் பெறுவது எப்படி என்பதை பற்றியெல்லாம் ஹஜ் பயணிகள் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்து, இங்கிருந்து பயணம் மேற்கொள்கின்றவர்கள் தேவையில்லாமல் அடுப்பு, பிளாஸ்டிக் சாமான்கள், அரிசி போன்ற உணவுப் பொருள்கள், ஊறுகாய் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் என எல்லாவற்றையும் கொண்டு வருகின்றனர்.

இதற்குத் தேவையே இல்லை, சவூதியில் எல்லா பொருட்களுமே கிடைக்கின்றன. விலையை ஒப்பிடுகின்ற போதும் பெரிய அளவில் ஆதாயம் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை. எனவே, எந்த பொருளை கொண்டு செல்வது என்பதை நன்றாக தெரிந்து கொண்டு அதை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தங்களுடைய பணம், பயண ஆவணங்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தவறவிடாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த விழிப்புணர்வு தேவை. இதில் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இனி சில ஆண்டுகள் கடுமையான கோடை காலத்தில்தான் ஹஜ் பயணம் வரும். அதற்கு அதிக அளவு தண்ணீர் பருகவேண்டும். முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடும் கற்றுக் கொள்ளவேண்டும்.

ஹஜ் பயணாளிகளுக்கென இந்திய புனித பயணிகள் நல்வாழ்வு அமைப்பு (ஐ.பி.டபிள்.யூ. எஃப்) அமைத்து சேவை செய்து வருகின்றோம். இதற்கு  சவூதியிலுள்ள இந்திய தூதரகமும், ஜித்தாவிலுள்ள துணை தூதரகமும உதவி செய்கிறது. இந்த அமைப்பின் சார்பில் ஜித்தா விமானநிலையத்தில் வழங்கப்படும் ;னுழ யனெ னுழn’வள –  உறுதுணையாக இருக்கும்.

இது தவிர, சவூதி வருகை தந்து வேலை இழந்து தவிக்கின்றவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை போன்ற தேவைகளை  நாடும் தமிழர்களுக்கு ஜித்தா தமிழ்ச் சங்கமும், வளைகுடாவாழ் இந்திய தமிழர் குழுமமும் உதவி செய்கின்றது.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் தனித்தறை வேண்டும்:

இந்தியாவில் படித்தவர்கள் முதல் பாமரர்கள்வரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கானோர் இதில் அடக்கம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய கேபினட் அமைச்சராக வயலார் ரவி உள்ளார். கேரளா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மாநில அளவில் தனித்துறை அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வாழ்கின்ற லட்சக்கணக்கான தமிழர்களின் நலன்காக்க தமிழக அமைச்சரவையிலும் தனித்துறையை ஏற்படுத்தி சேவை செய்ய வேண்டும் என்பதே வளைகுடா வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த ஆசை. கலைஞர் தலைமையிலான தமிழக அரசு இதை நிறைவேற்றி தரும் என நம்புகிறோம்.

சவூதி அரேபியாவை பொறுத்தவரையில் பதினெட்டு தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் ஒருங்கிணைந்து, சவுதி தமிழ்ச்சங்கம் என்ற கூட்டமைப்பில் தமிழர்கள்; அனைவரும் ஒன்று என்ற உணர்வோடு சிறப்பாக செயல்படுகிறோம்.

‘வளைகுடா நாடுகளில் வாழுகின்ற இந்தியர்கள் அனைவரும் நம் இந்திய திருநாட்டின் பெருமை காப்பவர்களாக செயல்பட வேண்டும் அதில்தான் நம் தன்மானம் அடங்கி இருக்கிறது’ எனக் கூறும் எஸ்.ஏ. அப்துல் மாலிக் போன்றோர்; ஒவ்வொரு இடத்திலும் உருவானால் இந்தியாவின் மதிப்பு வெகுவாக உயரும்.

-காயல் மகபூப்

admin

Read Previous

பெற்றோரைப் பேண்

Read Next

உன்னால் முடியும் : டாக்டர்: அப்துல் கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *