மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்

Vinkmag ad

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்
— முனைவர் சுபாஷிணி  கிபி 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் சமயம் பரப்பும் பணியில் முக்கிய பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானதாகும்.  சீனா ஜப்பான் கொரியா என நீண்ட தூரம் தமிழ் நிலத்திலிருந்து பயணித்திருக்கின்றார்கள்.  இத்தகைய பயணங்கள் கிழக்காசிய நாடுகளிலும் தூரக் கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தம் ஆழ வேரூன்றி வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தது.
ஸ்ரீவிஜயா போன்ற மிகப்பெரிய பேரரசு, மிகப்பெரிய பௌத்த அடிப்படை கொண்ட நாடாக இருந்த இந்தோனீசியா கிபி 12ஆம் நூற்றாண்டு முதல் சிறிது சிறிதாக இஸ்லாமிய மதத்தை உள்வாங்கிக்கொண்டு இஸ்லாமிய நாடாக மாறத் தொடங்கியது. மலாயா கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் இதே அரசியல் சமய மாற்றத்தை அடையத் தொடங்கி இவை இரண்டும் இன்று கிழக்காசிய நாடுகளில் இஸ்லாமிய மதத்தை அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. ஏனைய கிழக்காசிய,  தூரக்கிழக்காசிய நாடுகள் தொடர்ந்து பௌத்த சமயத்தைத் தங்கள் அரசியல் மதமாகக் கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன.

1.jpg


மலேசியாவின் பல பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கெடா மாநிலத்தில் ஏராளமான பௌத்த விகாரைகள் இருக்கின்றன என்பதை எனது இந்தப் பயணத்தில் தான் நான் அறிந்து கொண்டேன். பண்டைய பௌத்த சமய ஆதிக்கத்தின் தொடர்ச்சி முழுமையாக அழிந்து விடாமல் பலபகுதிகளில் அதிலும் குறிப்பான கெடா மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் இன்னமும் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
கெடா மாநிலத்தின் சிக், ஜெனியாங் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே உள்ள பௌத்த விகாரைகளுக்குச் சென்று வருவோம் என புறப்பட்டபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் ஏறக்குறைய 12 பௌத்த விகாரைகளை நான் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.  பெரும்பாலானவை தாய்லாந்து பௌத்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளாக அமைந்திருக்கின்றன. 

வாட் காலாய் பௌத்த விகாரை (Wat Kalai):

2.jpg

கெடா மாநிலத்தின் ஜெனியாங் பகுதியில் இருக்கின்றது வாட் காலாய் (Wat Kalai) என்ற பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை. செழிப்பான வளமான மலைப் பகுதியில் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வகையில் அமைந்த பகுதியில் இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. சாலையிலிருந்து மிக எளிதாக இந்த விகாரையை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்த பௌத்த விகாரைக்குப் பின்புறம் காட்டாறு ஒன்று மிக வேகமான நீர் பாய்ச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் நம் மனதைக் கவர்கிறது. மிகப்பெரிய வளாகத்தில் பல்வேறு சிறு சிறு அறைகளாக புத்தரின் வடிவங்கள் தாய்லாந்து பௌத்த சின்னங்கள் போதிசத்துவர் சிற்பம், தியான மண்டபம் பிக்குகள் தங்கும் வீடு என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

2a.jpg


இக்கோயிலின் மிகச் சிறப்பான ஒரு சிற்பம் என்றால் அது 21 மீட்டர் உயரம் கொண்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்ட ஒரு பகுதி எனலாம். புத்தரின் சிலைக்குக் கீழ் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. அதனுள் சிறுசிறு பெட்டிகள் போல் அமைக்கப்பட்ட அலமாரிக்குள் இறந்த பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் சாம்பல் குடுவைகளில் வைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ளன.  இக்கோயில் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த பழைய கட்டுமானத்தில் சிதிலமடைந்த பகுதிகள் சில ஓரிரு இடங்களில் தென்படுகின்றன.
ஒரு பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரது சிலை வைக்கப்பட்டு அதன் பின் பாம்புப் புற்று ஒன்று வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. சீனர்களின் வழிபாட்டில் அமைந்திருக்கக் கூடிய 12 மாதங்களுக்கான 12 விலங்குகளின் சிறிய அளவிலான சிற்பங்கள் வைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்திருக்கின்றது. தாமரைக்குளம் மீன் குளம் ஆகியவையும் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

2b.jpg

இப்போது இருக்கின்ற கட்டுமானம் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பழமையானவை என்ற தகவல் கிடைக்கின்றது. தாய்லாந்து அதாவது சயாமிய பௌத்த அடிப்படையில் அமைந்த கோயில் இது. கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் வசிக்கின்ற மக்களும் குறிப்பாக சீனா தாய்லாந்து இன மக்களும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.
இந்த பௌத்த விகாரை முகவரி:Wat KalaiMk Jenari, Jeniang, Gurun, Kedah

வாட் சாரோக் பாடாங் – Wat Charok Padang (Glass bottle temple):

3.jpg

வாட் சாரோக் பாடாங் எனப் பெயர் கொண்ட இந்த பௌத்த விகாரை கண்ணாடி பாட்டில் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பௌத்த விகாரை தாய்லாந்து பௌத்த கட்டுமானக் கலை அமைப்புடன் அமைந்தது. இது கெடா மாநிலத்தின் சிக் பகுதியில் அமைந்திருக்கின்றது.  அடர்ந்த காடுகள் கொண்ட பகுதியில் நேர்த்தியாக அமைந்திருக்கும் கிராமத்துச் சாலையிலிருந்து சற்று காட்டுப்பகுதிக்குள் செல்லும் வழியில் இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கின்றது.

3b.jpg


இந்த பௌத்த விகாரையின் சிறப்பு வியக்கத்தக்க வகையில் ஒன்றுள்ளது. அதாவது, இங்குள்ள ஒரு விகாரையின் கூரைப் பகுதி ஒரு லட்சம் (100,000) பச்சை மற்றும் பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களால் உருவாக்கப்பட்ட கூரை அமைப்புடன் அமைந்துள்ளது. (இதனை முதல் புகைப்படத்தில் காணலாம்) தாய்லாந்திலும் இதேபோல கண்ணாடி பாட்டில்களில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3a.jpg


இந்தச் சிறிய கண்ணாடி பாட்டில் கூரை அமைப்பு கொண்ட விகாரை மட்டுமன்றி விரிவான பெரிய 2 மாடிக் கட்டிடம் ஒன்றும் அதோடு சிறிய சிறிய வழிபாட்டுப் பகுதிகளும் போதிசத்துவர் சிலையும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் உருவச் சிலைகளும் இந்த பௌத்த விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ளன.  இந்த ஆலயத்திற்கு உள்ளே மிகப் பழமையான  உடைந்த படகு ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. அதன் சிறப்பு என்ன என்ற தகவல் தெரியவில்லை.
இந்த வளாகத்திற்குள் சீன நாட்காட்டியில் இடம்பெறுகின்ற 12 விலங்குகளின் சிறிய உருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குளத்தில் ஆமைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன.
இந்த பௌத்த விகாரை அமைந்திருக்கும் பகுதியின் முகவரி:Kampung Charok Padang, 08200 Sik, Kedah

தம்ம ஸ்ரீ வரராம் பௌத்த விகாரை – Wat Thammasirivararam (Wat Kura / wat Ruesee Kura) :

4.jpg

இது கெடா மாநிலத்தின் சிக் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மேலும் ஒரு பவுத்த விகாரையாகும்.
முதலில் பார்த்த இரண்டு பவுத்த விகாரைகளில் இருந்து மாறுபட்ட வகையில் இந்த பௌத்த விகாரை அமைந்துள்ளது. ஆமையின் வடிவம் கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறது. விகாரையின் உள்ளே செல்லும்போது வாசலில் இரண்டு பெரிய ஆமை உருவங்கள் நிற்கின்றன.  உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆமை உருவங்கள் பொன் வண்ணத்தால் வர்ணம் பூசப்பட்ட வகையில் காட்சி அளிக்கின்றன.

4a.jpg

இந்த பௌத்த விகாரை கடந்த 200 ஆண்டு  காலகட்டங்களில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். ஆயினும் இந்தப் பகுதியில் பழைய கட்டுமானங்களில் சிதிலமடைந்த பகுதிகள் பின்புறத்தில் இன்றும் காணப்படுகின்றன. பௌத்த விகாரையில் புத்தரின் சிலை என்பதைவிட ஓர் அவலோகிதரின் பொன் வண்ணச் சிலை பிரமாண்டமான வகையில் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பௌத்த விகாரைகளில் தென்படும் சிறிய சிறிய பௌத்த விகாரைகள் இந்தக் கோவில் வளாகத்திலும் அமைந்திருக்கிறது. ஒரு சிறிய அறைக்குள் இளம் வயது புத்தர் நடப்பது போன்ற அழகிய பளிங்கு நிறச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

4b.jpg

ஆமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பௌத்த விகாரை தனித்துவத்துடன் காட்சியளிக்கிறது. இந்த விகாரை அமைந்திருக்கும் ஒரு பகுதியும் மலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது.  முற்காலத்தில் மலைகள் நிறைந்த இப்பகுதியில் தியானம் செய்வதற்காகவும் பௌத்த நெறிகளைக் கற்பதற்காகவும் பௌத்தர்கள் வந்து தங்கிச் சென்ற இடமாக இது அமைந்திருக்கலாம். இதனை வெளிப்படுத்தும் வகையில் பெரிய கல்லூரி போன்ற ஒரு கட்டடம் ஒன்றும் இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பௌத்த விகாரையின் முகவரி:Kura08210, Jeniang Kedah

News

Read Previous

கோவையில் நடமாடும் இலவச மருத்துவ சேவை (Mobile Clinic)’ திட்டத்தின் ‘துவக்க விழா’

Read Next

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *