காயல்பட்டினச் சிறப்பு

Vinkmag ad

காயல்பட்டினச் சிறப்பு
🌸🌸🌸🌸🌸🌸🌸

இறையருட் கவிமணி
கா. அப்துல் கஃபூர்


புவனமதில் தமிழகமாம்
பொன்மாலை நடுவில்
நவமணிகள் பொலிகின்ற
நற்பதக்கம் காயல்!

தமிழ்பிறந்த தெண்பாண்டி
தண்பொருநை யோடும்
தமிழ்கூறும் அறம்வளர்த்துத்
தகுதிபெறும் காயல்!

மான்பிடித்த வேலவனின்
மாண்செந்தூர்க் கருகில்
தீன்பிடித்து நிற்கின்ற
திருப்பதியிக் காயல்!

சீரியநல் முகம்மது
கல்ஜீமரபைப் புரிந்த
பேரியல்பின் பாண்டியனார்
பட்டயத்துக் காயல்!

உடலனைத்தும் பள்ளிகளும்
உறையுள்களும் செறியக்
கடலலைகள் அடிவருடக்
கனிகின்ற காயல்!

பண்பரபு நிலத்துண்டு
பாரதத்தில் வீழ்ந்தே
இன்பமுற இணைவதுபோல்
இலங்குமொரு காயல்!

அகமூறும் செந்தமிழை
அரபெழுத்து வடிவில்
புகழூற எழுதியொரு
புதுமொழிகாண் காயல்!

நல்லதமிழ்த் தம்பிகளும்
நாச்சிகளும் சிறக்க
செல்லமொழி வாய்மணக்கும்
செல்வமிகு காயல்!

நிலைபெறுநற் காவியங்கள்
நீதிகளை ஈந்த
புலவர்களின் கோட்டையெனப்
பொலிகின்ற காயல்!

பெருநாதர் இலக்கியத்துப்
பேழைகளின் பாக்கள்
தெருவெல்லாம் கமழ்கின்ற
திருவாரும் காயல்!

மறைநெறியிற் கோடாத
மாசில்லா வாழ்வின்
இறைநேயர் பலர்வாழ்ந்த
இன்பதியிக் காயல்!

உருவழகில் முத்தைப்போல்
வலிமார்கள் ஐவர்
ஒருதாயின் மணிவயிற்றில்
உதித்திட்ட காயல்!

ஆலிம்கள் முப்தீகள்
ஆரிபுகள் ஹாபில்
காலிகாரீ சூபிகளால்
கனக்கின்ற காயல்!

பேர்மக்கா புகழ்மதினா
பேரான பேர்க்குச்
சீர்மொழியைப் பயிற்றுவித்த
சிறுமக்கா காயல்!

மனிதகுல மாதவராம்
மாநபிகள் மொழியின்
புனிதமுறு தொகுப்பான
புகாரிஷரீப் மன்றில்
தேனீக்கள் கூட்டமெனத்
திரண்டுவரும் மக்கள்
தீனீக்கள் ஆவதற்குத்
திசைகாட்டும் காயல்!

மெஞ்ஞானம் கூடிவரும்
மேன்மகல ராவில்
கைவண்ணக் கலையுயர்வைக்
காட்டுடுகின்ற காயல்!

பேர்மிகுந்த ஷாதுலிய்யா
பீடுயர்ஜா விய்யா
சீர்மிகுந்த நிறுவனத்தால்
சிறப்படையும் காயல்!

அயர்வில்லாப் பெரியவர்கள்
அன்பொழுக வளர்க்கும்
உயர்தரத்துப் பள்ளியினை
உடையதொரு காயல்!

தக்கபெரும் சங்கங்கள்
தகுதிபெறும் தைக்கா
மிக்கபெரும் பணியாற்றும்
மேலான காயல்!

அவனியினை வலம்வந்து
ஆங்காங்கே சிறக்க
நவமணிகள் மிகுந்துள்ள
நலமாரும் காயல்!

வானத்துப் பறந்துசென்று
வளர்க்கின்ற செல்வம்
தானத்து வழங்குகின்ற
தளர்வில்லாக் காயல்!

மேன்மையுறும் நன்னெறியின்
மின்னிலையம் போன்று
கோன்மையுற எத்திசையும்
கொள்கைவளர் காயல்!

முட்டாத சிறப்பெல்லாம்
முழுமையாய்ப் பெற்றுப்
பொட்டாகப் பொலிகின்ற
புகழாரக் காயல்!

இன்றுமுதல் இங்குற்ற
இடைவெளியைப் போக்கி
ஒன்றுபட்டு உயர்வதற்கே
உறுதிகொளும் காயல்!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

என் நினைவில் தங்கிய நிகழ்வு…


காயல்பட்டினத்தில் 1978 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 13, 14, 15 ஆகிய நாட்களில் அனைத்துலக மூன்றாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் இரண்டாம் நாள் இரவு, கவிக்கோ அவர்களின் தலைமையில் “தாயிப் நகரத்து வீதியிலே” எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கை திறந்துவைத்து இறையருட் கவிமணி அவர்கள் வழங்கிய கவிதையில், காயல்பட்டினத்தின் சிறப்பு குறித்து இடம்பெற்ற வரிகளை மேலே வழங்கியுள்ளேன்.

என் இளமைப் பருவத்தில் நான் நேரில் கண்டு மகிழ்ந்த கவியரங்கம் அது.

2011 ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 8,9,10 ஆகிய தேதிகளில் காயலில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் 15 ஆம் ஆண்டு இலக்கிய பெருவிழா சிறப்பு மலரிலும் இது வெளிவந்துள்ளது.

என் தாயூரின் சிறப்பைத் தரணிக்குச் சொல்லும் இந்த வைரவரிகளை, வலைதளங்களில் மீள் பதிவு செய்வதில் பெருமிதம் அடைகிறேன்.

இவண் : காயல் அமானுல்லாஹ்.

News

Read Previous

கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பால சாகித்திய புரஸ்கார் விருது-2021கவிஞர் மு.முருகேஷ்-க்கு வழங்கப்பட்டது

Read Next

தடை செய்யப்பட்ட சொற்கள்

Leave a Reply

Your email address will not be published.