நோன்புக் கஞ்சி செய்முறை

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்

ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது.
மாலையில் இஃப்தார் எனப்படும்  நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.

தேவையானவை:

பச்சரிசி    = 500 கிராம்
பூண்டு    = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு  = 50 கிராம்
வெந்தயம்  = 2 தேக்கரண்டி
இஞ்சி    = இருவிரல் அளவு
சீரகப்பொடி  = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி  = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி  = அரை டீ ஸ்பூன்
உப்பு    = தேவையான அளவு
பெரிய வெங்காயம்  = இரண்டு
கேரட்    = பாதி
தக்காளி    = 2 பழங்கள்
சமையல் எண்ணை  = 50 மில்லி
பச்சை மிளகாய்  = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி  =  தலா ஒரு கொத்து
எலுமிச்சை பழம்  =  ஒன்று
தேங்காய்ப் பால்  = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி  = 100 கிராம்
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி,வெந்தயம்,கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு+மஞ்சள்பொடி+மிளகாய்பொடி கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி,வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக/ஸ்லைசாக நறுக்கவும்.
4) புதினா+மல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
6) எஞ்சிய இஞ்சியையும் பூண்டையும் தோல்நீக்கி மிக்ஸியிலிட்டு பேஸ்ட் ஆகும்படி அரைக்கவும்.
செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி+மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சட்டிக்குள் இறக்கவும்
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்தபிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதியளவு எலுமிச்சை சாறுபிழிந்து சட்டியில் இடவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்தபிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.

18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.

நோன்புக் கஞ்சி செய்முறை ஊருக்குஊர் மாறும் என்றாலும் சுவை ஒன்றே. சுமார் 4-6 பேருக்குத் தேவையான நோன்புக் கஞ்சி செய்முறையை நானறிந்தவரை ஓரளவு தொகுத்துள்ளேன். தாய்மார்களின் கைப்பக்குவத்துடன் போட்டியிட முடியாது என்றாலும் பேச்சிலர்களுக்கு ஏற்றவகையில் முடிந்தவரை புரியும்படி விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன்.

வாய்ப்புள்ளவர்கள் சமைத்துப் பார்த்து குறைநிறைகளை சொன்னால் நானும் மற்றவர்களும் அறிந்து கொள்ளலாம். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

மறக்காமல் தாய்மார்களும் சமையல் கலை வல்லுனர்களும் கருத்து சொல்லவும்.

அன்புடன்,
அபூஅஸீலா

hiaseela@gmail.com

admin

Read Previous

கரோனரி ஆஞ்ஜியோகிராம்

Read Next

எய்ட்ஸ் நோயாளி

Leave a Reply

Your email address will not be published.