முஹர்ரம் என்னும் அருள்மாதம் !

Vinkmag ad

 

அல்லாஹ் உலகைப் படைக்க நாடி

      அரும்பாய்ச் செய்து கமாவை

எல்லா நலனும் இம்மை மறுமை

       இருக்க இயக்கி வளர்த்தானே !

நல்லார் நபிமார் இலட்சம் மேலும்

        நானிலம் எங்கும் வந்ததுவும்

வெல்லும் வேதம் கமாவாலே

         விளக்கும் முஹர்ரம் அருள்மாதம் !

பூவுல கெங்கும் ஹிஜ்ரீ புத்தாண்டு

        பூத்து மணக்கும் புதுமை காண் !

மேவும் மனங்களில் மேன்மை பொங்க

        மேலாம் தொழுகை மிளிர்வதைக் காண் !

காவும் குயிலும் காதல் இணையும்

      காட்சியாய் நோன்பும் கலந்தது பார்

பாவம் போகும் பக்குவம் கூட்டிப்

      பகரும் முஹர்ரம் அருள்மாதம் !

மக்கள் உரிமை ஓங்கிடப் பாரில்

       மனம்திறந் தெழுந்தது ஸகாத்தும்

தக்கவன் இறையைத் தரிசித்துத் தேற

        தகையாய்த் தொடர்ந்தது சீர்ஹஜ்

மிக்க ஆற்றல் மேலாய்க் காட்டும்

      மிளிர்சமு தாய ஒற்றுமையும்

எக்கா லத்தும் வேண்டும் என்று

       இயக்கும் முஹர்ரம் அருள்மாதம் !

அண்ணல் நபிகள் பேரர் ஹசனுசைன்

       அபு பெற்றசெல்வங்கள்

விண்மண் போற்றும் ஃபாத்திமா பாலகர்

          விரும்பும் அருட்கொடை உலகோர்க்கே

கண்கொளாக் காட்சி நபிகளார் தோளில்

         கனிமரம் போலத் தழுவினரே !

மண்ணில் பொழிந்தது மாவிறையருளே

        மலர்த்தும் முஹர்ரம் அருள்மாதம் !

சுழற்சியில் காலம் சுழன்றது பாராய்

      சூழ்ந்த பாட்டர் தாய்தந்தை

விழைந்தே விட்டனர் மண்ணை விண்ணுள்

        வியப்பாய் புகுந்து வாழ்கின்றார் !

அழகுச் செல்வம் அன்பர் உசைனார்

     அச்சீர் மதீனத் தில்வாழ்ந்தார்

எழுந்தப் பிரச்சனை எல்லாம் சொல்லும்

       எழுந்தே முஹர்ரம் அருள்மாதம் !

ஆட்சியைப் பிடிக்க யஸீத் முயன்றார்

       அரியணை தன்னில் ஏறினாரே !

மாட்சிமை மிக்க உசைனார் எழுந்தார்

       மனிதம் உயிர்பெறக் குரல் கொடுத்தார்

தாட்சினை இன்றித் தட்டிக் கேட்டார்

       தகைஜன நாயகம் காத்திடவே

காட்சி அனைத்தும் கருத்தாய்ப் பார்த்து

      கரையும் முஹர்ரம் அருள்மாதம் !

பகையாம் கழுகுகள் கூடிநின்றன

      பாதகம் செய்யும் கர்பலாவில்

முகைத்தே கலைகள் முளைத்த கூஃபா

        ஒவ்வோர்க் கூட்டில் பகைவலையை

மிகைத்தே விரித்திட, வாதம் புரிந்திட

        விளைத்தார் படைப்போர் தொடுத்தனரே

அதட்டிக் கூறும் வஞ்சகர் கொடுமை

      அறையும் முஹர்ரம் அருள்மாதம் !

அரிவையர் குழவிகள் சுற்றத் துடனே

       அங்கே நின்றார் உசைனாரும்

வரிந்து கட்டிப் பகைமை முட்ட,

      வழங்கும் தண்ணீர் தடுத்தனரே

பொருளும் தடுத்தார் பிறவும் தடுத்தார்

       பெருக்கி விட்டார் பீதிதனை

இரவும் பகலும் பட்ட துயரை

       இரையும் முஹர்ரம் அருள்மாதம் !

புத்தாண்டு நாளில் பித்தராய் ஆனார்

       புலர்ந்த வெள்ளி நன்னாளில்

கத்தியை வீசிக் கழுத்தினை அறுத்துக்

      களத்தில் குருதி நதிவிட்டார் !

பத்தரை மாற்றுப் பசும்பொன் குடும்பர்

       பதைக்கக் கொன்றார் குழவியையும் !

இத்தரை அழியா திருக்கும் வரைக்கும்

       எடுத்துரை முஹர்ரம் அருள்மாதம் !

குதிரைக் குளம்பால் மிதித்தார் உடல்களை

       கோமான் உசைனார் உடம்பினையும் !

அதிரடிச் செயலால் அநியாயம் செய்தார்

      அவர்தலைக் கொய்துக் கம்பொன்றில்

பதித்தார் எடுத்துச் சென்றார் பாதகர்

      பண்பார் முகத்தில் அடித்திட்டார்

உதிர்ந்த ஈமான் உரமே கொள்ள

       உரைக்கும் முஹர்ரம் அருள்மாதம் !

அண்ணல் நபிகள் மடியில் தவழ்ந்த

       அழகு உசைனுக்கோ இது கதியா?

அண்ணல் நபிகள் முத்தம் இட்ட

       அழகு முகத்திற்கோ இது விதியா?

விண்ணும் அழுதது ! மண்ணும் அழுதது !

      இன்றும் நம்கண் அழவில்லையோ?

கண்ணீர் விட்டே கதறி ஈமான்

      காக்கும் முஹர்ரம் அருள்மாதம் !

கொடியோர் கொடியோர் செய்தார் இழிவைக்

      குவலயம் அழியும் நாள் வரைக்கும்

கெடுவார் இழிவின் கேட்டைச் சுமப்பார்

      கொடுந்தீக் குணவாய் ஆகாரோ !

படுபுக ழோங்கும் உசைனாருக்கே

      பாரில் ஈமான் துளிர்விடுமே !

உடுமானம்மாய்க் கலந்தார் உசைனார்

         உரைக்கும் முஹர்ரம் அருள்மாதம் !

                  -அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா மதனீ

    நன்றி : இனிய திசைகள் – டிசம்பர் 2011

News

Read Previous

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

Read Next

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *