பொங்கல்

Vinkmag ad

போகி , போகி என்று

போகட்டும் துன்பமெல்லாம்
பழையன கழியவும் புதியன புகவும்
விழையும் பண்டிகை போகிதானே
வேண்டாத பொருட்களெல்லாம்
வீட்டிலிருந்தகற்றி விட்டு
பாங்காக வெள்ளையடித்து
பளபளக்கச்செய்துவிட்டு
வாசலில் சாணம் தெளித்து
வண்ண வண்ணக் கோலமிட்டு
வாசற்காலருகில் காப்புக்கட்டு கட்டிவைத்து
வரவேற்கத்தயாராவோம்
வளம் கொடுக்கும் தை மகளை .
ஆடியிலே விதை விதைச்சி
மார்கழியில் கதிரறுத்து
கதிரறுத்த களத்து மேட்டில்
கதிரவனுக்குப் பொங்கல் வைக்க
புத்தாடைகள் உடுத்து
புத்தடுப்பு பற்ற  வைத்து ,
புதுப்பானைதனை   வைத்து
புதுமஞ்சள் செடிகட்டி
 புத்தரிசிப் பொங்கல் வைத்து
 பொங்கிவரும் வேளையிலே
சுற்றி வந்து குலவையிட்டு
பொங்கலொடு  செங்கரும்பும்
பூசையில் படைத்துவிட்டு
உழவுத் தொழிலுக்கு உற்ற துணையான
உலகின் ஒளிவிளக்காம் ஆதவனுக்கு நன்றி சொல்லி
உறவு சனத்தோட உற்சாகமாகவே
உட்கார்ந்து திங்கையிலே
உள்ளம் மகிழ்ந்திடுமே .
பொங்கலோ பொங்கல் என்று
பொங்கிடுமே  இன்பமெல்லாம் .
கலப்பையை வயலிறக்கி
காளைகளைப் பூட்டி
நிலத்தை உழுவதற்கு
நித்தம் வரும் மாடுகளை
சுத்தமாய்க் குளிப்பாட்டி
புத்தாடைதனைப் போர்த்தி
கொம்புகளில் வர்ணம் தீட்டி
கும்பிடும் விதமாக
மாட்டுக்குப் பொங்கல் செய்து
மனமாறப் படையலிட்டு
வெல்லமும் பழமும் சேர்த்து
செல்லமாய் குழந்தையைப் போல்
ஊட்டிவிட்டு நன்றி காட்டும்  நாள்
மாட்டுப் பொங்கலென்பார்    .
 சுற்றம் , நண்பரென
மற்றவரைக் காண
உற்றநாளாக
உருவான நன்னாளே
காணும் பொங்கலென்பார்
கண்டு மகிழ்ந்திடுவார் -விருந்
துண்டு களித்திடுவார்
வாழ்க உழவர் திருநாள்  –
வாழ்க தமிழர் திருநாள்
வாழ்க வள்ளுவர் திருநாள்
 வாழ்க வையத்து தமிழரெலாம்
வாழ்க வையத்து மாந்தரெல்லாம் .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
14.01.2015

News

Read Previous

இயற்கை விழா பொங்கல் விழா – தந்தை பெரியார்

Read Next

தூரிகைச் சிதறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *