பேதலித்த பிரம்மன்

Vinkmag ad

>>பேதலித்த பிரம்மன்<<

பட்டுப் பாவாடை
ஒன்று கொடுத்துப்புட்டு
நச்சென்று ஒரு முத்தம்
தந்துபுட்டு சிட்டாக பறந்து
போனார் என் சின்ன
மச்சான்…..!!!

சின்னவள் என்
சிரிப்பை சிதற விட்டு
சிந்தனையில் மூழ்க
வைத்து சில்லறை
சேர்க்க சிங்கப்பூர்
போன மச்சானுக்கு
நான் அனுப்ப வேண்டும்
சில செய்திகள்…!!!

பட்டணத்துப் பிறப்பும்
இல்லை நான் படி ஏறி
படித்ததுமில்லை தட்டும்
கணினியைத் தொட்டதும்
இல்லை விட்டுச் சென்ற
மச்சானுக்கு வெத்துப்
பேப்பரை வைத்து
அனுப்ப விலாசமும்
தெரியில்லை…!!!

நாடி தேடி ஓடிச்
சென்றேன் உதவி
புரியும் என்று
இயற்கையிடம்
என் சோகம் சொல்லவே
ஓடும் மேகத்தை
நிறுத்தினேன்…!!!!

ஒரு தடவை நீ
போய் செய்தி
சொல்வாயா
மச்சானிடம் என்று
கெஞ்சினேன்…!!

உடனே முறைத்துப்
பார்த்து  விறைப்பாக
பதில் கூறியது வானம்
வறண்ட வானத்தில்
உருண்டு திரியும்
மேகத்தை நீ அழைக்கிறாயே
எங்கள்  கடமைகளைக் கூட
சரிவர  நிறைவேற்ற முடியாத
நிலையில் மரத்தை வெட்டி
மழையைத் தடுத்த
மானிடப் பிறவிகளே என
என்னைத் திட்டி மறுத்து
விட்டது மேகத்தை தூதாக
அனுப்பி வைக்க வானம்..!!!

ஏமாற்றத்துடன் வரும்
வழியில் கண்டேன்
வெண் புறாவை மனதில்
மகிழ்ச்சியுடன் நெருங்கினேன்
அங்கே அது  என்னைப் பார்த்ததும்
ஒரே புலம்பல் காட்டை எரித்தான்
நாட்டை வளமாக்க அப்போது
என் ஜோடிப் புறாவும் எரிந்து
விட்டது நான் அனாதையானேன்
மனிதன் இல்லா தேசம் தேடிப்
போறேன் என்று கூறி சென்றது…!!

இரவு வந்து விடவே
நட்சத்திரங்களைப்
பார்த்தேன் ஒளி
இழந்து என்னை விட
சோகத்தில் அவைகள்
இருந்தன காரணம்
கேட்டேன் கடுப்பானது நிலவு..!!

பூலோக மனிதன்
கண்டதையெல்லாம்
எரித்து கரும்புகையை
வெளியேற்றுகிறான்
நாசா என்னும் பெயரில்
ஏதோ ஒன்றை அனுப்பி
அது நாசமாக்குகின்றது
என் உடலை எங்கே நான்
காப்பது நட்சத்திரங்களை
உங்க இனம் கொடுக்கும்
தொல்லை கொஞ்சம்
இல்லை பெண்ணே என்று
என்னை விரட்டி விட்டது..!!

செய்வது அறியாமல்
கால் போன பாதை
செல்லும் போது கண்டேன்
படைக்கும் கடவுளை
கை ஏந்தி நின்றேன்
அசையாது அமர்ந்து
இருந்தார் ஆழ்ந்த
சிந்தனையுடன் சுவாமி
என்றேன்  அமைதியாக
கூறினார் என் வேலைக்கும்
மனிதன் வேட்டு வைத்து
விடுவான் என்றுதான்
என் ஏக்கம் நான் படைத்தவனே
பல உயிர்களை படைக்கிறான்
எனக்கே போட்டியாக மாறி
வரும் மனிதனை நினைத்து
கலங்கிப்போய் இருக்கின்றேன்
என்றார் அதிச்சியில் நான்
படைத்தவனையே பதற
விட்டுவிட்டோமா என்று…!!

கொடுப்பவனைக்
கெடுப்பவன் இருக்கிறான்
நன்மை செய்வோரை
நாசமாக்குபவன்
இருக்கிறான்
அடங்காதவன்
இருக்கிறான்
மதியாதவன்
இருக்கிறான்
சோம்பேறி
இருக்கிறான்
உழைப்பாளி
இருக்கிறான்
தட்டிப் பறிப்பவன்
இருக்கிறான்
விட்டுக் கொடுப்பவன்
இருக்கிறான்
பெற்றோரை மதியாதவன்
இருக்கிறான்  இப்படி
பல குணத்தில் மனிதன்
இருப்பது தெரியும்
ஆனால் பிரம்மனையே
பிரமிக்க வைத்த
மனிதன் இருப்பதை
நான் இன்றுதான்
அறிந்தேன் இறுதியில்
மச்சான் மடலையும்
மறந்தேன் அதிர்ச்சியில்
உறைந்தேன் கனவு
களைந்து எழுந்தேன்
அம்மா அழைக்கிறார்
கோலம் போட…!!!!

ஆர்  எஸ்  கலா
இலங்கை

News

Read Previous

உங்களுடன் நான் – மனம் விட்டு… கான் பாகவி

Read Next

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *