புத்தகங்களே!..புத்தகங்களே..!

Vinkmag ad
புத்தகங்களே!..புத்தகங்களே..!
=============================================ருத்ரா
காகிதக்காடுகளாய் மண்டிவிட்ட‌
உங்களை நான் அழைக்கவில்லை!
புது அகங்களே! புது அகங்களே!
என்று
அந்த புதிய “அகநானூறு”களைத்தான்
நான் தேடித்துருவுகின்றேன்.
காதலைப்பற்றி எழுதித்தீர்த்து விட்டு
சில சொட்டுகள்
மை மிச்சத்திலும்
பணம் குவிப்பது எப்படி?
அதற்காக அடுத்தவன் குரல்வளை என்றாலும்
அதை அழகாக நேர்த்தியாய்
அறுப்பது எப்படி?
தூரத்து நட்சத்திரங்களை
மடியில் கட்டி வைத்து
அல்லது அருநாக்கொடியில்
பிணைத்து வைத்து
அதன் சாத்திரங்கள் சடங்குகள் பரிகாரங்கள்
சிறப்பு தகடுகள் பூஜைகள்
என்று
மனித அச்சத்தில்
ரூபாய்களையும் டாலர்களையும்
அச்சடித்து
அழுக்கு மூட்டைகள் குவிப்பது பற்றி
இங்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
இதையும் மீறி
இந்த வைக்கோல் படப்புக்குள்
விழுந்து கிடக்கும்
அந்த சில வைர ஊசிகள் தேடியே
என் பயணம்.
அந்த எழுத்துகளின் தரிசனம் கண்டு
நான் புல்லரித்துப்போனேன்.
அந்த அரிய எழுத்துகள் ஊர்ந்த‌
மனிதனின்
சிந்து சமவெளிப்பக்கங்கள்
பொன் பரப்புகள்.
சில‌
சமுதாய பிரக்ஞைகளையே
கர்ப்பம் தரித்து
புதிய சமுதாயங்களை
பிரசவிக்கும்
சிந்தனை வெளிச்சங்கள்.
அவை உண்மையில் புத்தகங்கள் அல்ல.
மானிடத்தின்
பயணம் தொலைத்த தடங்களுக்கு
காகிதக்கல் செதுக்கிய‌
மைல் கற்கள்.

News

Read Previous

நான் பெண்மக்களின் தந்தை !

Read Next

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *