பா விரி மைந்தன் நீ!

Vinkmag ad

பா விரி மைந்தன் நீ!

இது ஒரு பானிலை அறிக்கை!
இன்று..
அரபிக் கரையோரத்தில் கவிமூட்டம்!
ஜானாகிராமன் வீட்டில்
தமிழ்ப்புயல் மையம் கொண்டுள்ளது!!

புவிக்காற்று மிதமாய்வீச
கவிக்காற்று வேகமாய் வீசலாம்!

வெண்தாழ் மடிப்புகளில்
பேனாவின் தொடர்மழை காரணமாக
பா நாவில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

கொதித்தெழும் பாலையில்
குதித்தெழும் காவிரியே!
கோவிரித்த குவலயத்தில்
நாவிரித்து பாவிரித்து
வாவென்றுபேசி வாய்விரித்து
வாஞ்சையாய் வரவேற்கிறேன்.

தமிழ்த்தேர் வடம்பிடித்து
சூளைமணற் பரப்பில்
சுவடுபதித்த  சுவைநாவே!
ஒம்பாட்டுக்கு பாட்டெழுதும்
காவிரிப் பூம் பாட்டினமே!
உன்னை வாழ்த்தி
இப்பாலை  பீச் ( Beach )ஓரத்தில் –
கவிப்பாலை பீச்சுகிறேன்!

கொட்டோ கொட்டென்று
ஓயாமல் பாட்டொழுகும்
ஒய்யார நீர்வீழ்ச்சியே!
நீர் வீழ்ச்சியடைய
ஒரு துளிகூட வாய்ப்பில்லை!

நீரின்றி அமையாது இப்பூவுலகம்!
நீர் இன்றி அமையாது இப்பாவுலகம்!!

நீர் கிடைக்கவில்லையே என்றுதான்
முக்கால்பாகம் தமிழகமும்
மூக்கை சீந்திக்கொண்டு
முகம்மூடி விழுந்தோடி மடிகிறது!
இங்கே நீர் கிடைத்தீரென்று
அகமே எழுந்தாடி மகிழ்கிறது!!

நீர் இல்லையேல்
மாநிலம் மீழுமா?

மாநிலம் இல்லையேல்
பா நலம் வாழுமா?

பனித்துளி இல்லையேல்
பாலைப்பூ மலருமா?

“பா” “பா” இல்லையேல்
காக்கா ஒன்று பாடுமா?

தமிழாய்ப் பிறந்து
கவியாய் ஓடி
பாலையில் தவழும்
ஜீவநதியே!
வான் பொய்த்தாலும்
வாக்கு பொய்க்கா
பா விரி மைந்தன் நீ!

கவிப்பஞ்சாங்கமே!
உனக்கு
எழுத்தாணியும் ஒருவிரல்தானே!
அதனாலல்லவா
விரலாறு கொண்டு
வரலாறு படைக்கிறாய்!

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளையே ஆறு..

இங்கேயும் ஆறுதான்..
பாயப்போவது கவியாறு…
தமிழ் ஏவப்போவதும் கவி ஆறு!

கிளை நதிகள் ஆறிருக்க
காவிரியாய் நீயிருக்கிறாய்….
எண்ணம் கரைபுரண்டதால்- விசால
எண்ணம் கரைபுரண்டதால்
கவி ஆறு ஏழானது…

காவிரியே!
நீ கறுப்பா?
இல்லை….
கவிதை மகுடியின்
கருப் பா….
மதிக்கிறோம்! வாழ்த்துகிறோம்!

அபு ஹசன் 

 

News

Read Previous

வஃபாத்து செய்தி

Read Next

கணிணித்தமிழ் – இணைய இதழ் – அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *