தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !

Vinkmag ad

முதல் கவிதை..!

தோற்றமும்,  பின்புலமும், புது நினைவும் !

கவிஞர்மஸ்கட் மு.பஷீர்

 

 

துண்டுக் காகிதங்களில்

துளிர் விட்ட வார்த்தைகள்

தூளியில் கூடுகட்டி

தூங்காமலே போனது – எங்கு

தேடியும் கிடைக்காமல்- இறுதியில்

தேடினேன் கிடைத்ததென்

மனதில் மறைவில் !

 

கன்னிக் கவிதை

கன்னியர் பார்வையால்

கர்ப்பம் தரிப்பது

காலங்கால உண்மை !

 

மரபு மாறாத

அந்த சுகப்பிரசவம் என்னிலும்

சுகமாய்ப் பிறந்ததில்

சுவைதானே சொல்வதற்கு !

X

அன்று.. என்

பள்ளிப் பருவம்

பதினாறாய் மலர்ந்தது !

 

துள்ளிப் பறந்தன கவிதைப்

பட்டாம் பூச்சிகள் !

கள்ளிக் கண்களின்

கடையோரப் பார்வையால்…

முள்ளால் குத்தியக்

கள்ளியின் பாலாய்

வெள்ளியாய் பரந்தது

மனதில் கூடவே

சுரந்தது காதல்?

கறந்தது கவிதை!

X

மறந்து விட்டேன் நான்…!

முதல் கவிதை என்பது

முதலில்

வரைந்த கவிதையா ?

 

மனதுள் வந்து

நனைந்த கவிதையா ?

 

மண் ஒட்டுச் சாளரத்தில்

விண் உடைத்த மழைத்துளி

வீழ்ந்து வடிந்த

வெண்ணிய மழைநீரில்

விளைந்ததுதான் என்

முதல் கவிதை !

 

நெஞ்சில் ஈரமாய்

மழையின் சாரல்…

கொஞ்சும் தமிழால் மனதில்

கவிதைச் சாரல் !

 

எத்தனையோ கவிவரிகள்

ஒவ்வொரு மழையிலும்…

அதில் நனைந்த பசுமைச்

செடிகொடி, மரங்களில்..,

இசைத்த குயிலின் குரல்களில்

இன்னும் ரீங்காரமாய் !

 

எழுத்தில் பதிக்க இயலாது போன

எண்ணற்ற வரிகள்;

மனதை விட்டு விலகிப்போனது

மழை விட்டு உலர்ந்த

மண்போல !

 

அந்த எண்ண விதைகள் மட்டும்

என்னோடு புதைந்து கிடக்கின்றன !

அதிலிருந்து தான் பிறக்கின்றன

புதுப்புதுக் கவிதைகள்

இன்றும் ;

மண்மேல் கருத்தரித்துப் பிரசவிக்கும் தாவரம் போல !

 

முதல் கவிதைப் பிரசவம்

குறைப் பிரசவம் ஆனதால்…

பின்பிறந்த குழவியை

பிரசுரிக்கத் தருகிறேன் !

 

என் நினைவில் இன்றும்

வளரும் கவிதைச் செல்வம்

இதுதான் !

முதலாய்க் கொள்க…

என் முதல் செல்வத்தை

விதையாய்க் கொள்க !

X          X          X          X

முதல் கவிதை !

ஞாயிறு !

காலை ஞாயிறுகளில்

கர்த்தரை நேசித்தாள்

காவல் கிடந்து நானோ

அவள்

பாதம் பூஜித்தேன் !

X 

உன்

காலடி படுவதால் தான்

இந்தத் தெருவீதியே

மணல் நட்சத்திரங்களால்

புலர் காலையில் கூட

பூத்து விரிகிறது !

அது

பொன்னாய்ச் சிரிக்கிறது !

 

மனதுக்குள் உன்

விழியின் ஓரம் மட்டும்தான்

பதிகிறது !

கனவில் உன் பாதி

முகம்தான் பிரகாசிக்கிறது !

 

காதலைத் தருவதில் கூட

கஞ்சத்தனம் உனக்கு !

காத்திருக்கிறேன் அடுத்த

ஞாயிறின் வருகைக்கு– அதில் சூரியக் குளியலால்

மனம் நனைவதற்கு !!

X          X          X          X

தமிழால் பிறந்தது என்

கவிதைக் காதல்…

அதுபோதும் காலமெல்லாம்

மனம் குளிர்வதற்கு !

 

வேகமாய்ப் போகும் நாட்கள்

சோகமாய் விழுந்தது அதில்

குவியலாய் முட்கள் !

காலச் சக்கரத்தால் -நாம்

தூக்கி வீசப்பட்ட

காகிதப் பூக்கள் !

 

கண்ணெட்டாப் பார்வையில்

கால இடைவெளிகளில்

காணாமல் பொனது – நம்

காத்திருப்பு மனங்கள் !

 

நிச்சயமாய்ச் சொல்வேன்- அவை

‘ஊன்’ காதல் அல்ல

ஊனமாகிப் போவதற்கு !

உண்மை அன்பில்

மௌனம் மொழியாய்ப்

பேசிய கவிதைக் காதல் !

கவிஞர்மஸ்கட் மு.பஷீர்

muscat.basheer@gmail.com

News

Read Previous

வாலிப வயதை வீணாக்காதீர் !

Read Next

தேவதை சரணாலயம் – மின்னூல் – கவிஞர் தவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *