தாமிரபரணி

Vinkmag ad
தாமிரபரணி
============================================ருத்ரா
 
கிளை பிரிந்த‌
ஒரு ஓடையில்
மஞ்சள் உரைத்த 
அந்த கல் அருகே முகம் பார்த்தேன்.
அவள் முகம் தான்..
கண்களை மூடிக்கொண்டு
மஞ்சள் விழுதுகளில்
அந்த மாணிக்க முகம்
இன்னும் அங்கேயே
பதிவு ஆகி விட்டது.
மஞ்சள் தேய்க்கும் விரல்களின்
இடுக்குகள் வழியே
நிலவுகள் கரைந்து வழிந்தன‌
 
அப்படித்தான் அன்று
பாபநாச படிக்கட்டில்
கால் நனைத்து உட்கார்ந்திருந்தேன்.
பருங்கண் துருத்திய‌
பெருமீன் கூட்டங்கள்
என் காலை கவ்விப்பிடித்தன.
அந்த குமிழ்வாய்கள் தந்த‌
கூச்சம்
என் முதுகுத்தண்டுக்குள்
வானவில் குழம்பு  ஊற்றி
என்னை கிறங்கடித்தன.
அவள் சொல்லியிருக்கிறாள்
இந்த மீன்கள் தான்
அவள் கொலுசு மணிகளை
சுவைத்தனவாம்.
மணிகள் குலுங்கிய ஒலிகளுக்குள்
என் இதய லப் டப் கள்
அவற்றிற்கு கேட்டிருக்குமா?
 
தாமிரபரணியின்
தண்ணீர்ப்பரப்பில்
தழுவிய 
தாழ்ந்த மருதமரக்கிளையில்
குட்டி தன் வயிற்றை அப்பியிருக்க‌
குதிக்கும் குரங்குகள்
வலித்துக்காட்டும் சிரிப்பில்
குறும்பு கொப்பளித்தது!
அவள் தங்கத்தேகத்தில்
சேதாரமாய்
நான் கொஞ்சம் கிள்ளியதற்கு
அவள் காட்டிய “வேவ் வே”யின்
க்ளுக் சிரிப்புகளை
அந்த குரங்குகள் அப்படித்தான்
“சிமுலேட்”செய்தன.
அந்த‌
பளிங்கு நீர் கிராஃபிக்ஸ்ல்
எனக்கு
இன்னமும் அது கொள்ளை லயிப்பு.
 
அந்த சித்திரைவிசு திருவிழாவை
பொதிகை மலை
இன்னும் பொட்டலம் கட்டி
நீட்டிக்கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு பீடிக்கம்பெனி
விளம்பரத்துக்கு
நைந்த சாயம் போன துணியில்
பூவேலையோடு
வலம் வந்த அந்த யானை
தும்பிக்கை நீட்டி
அவள் தலையைத்தொட்டு
என் தலையையும் தொட்டது.
அதிர்ச்சியில்
இருவரும் இறுகப்பிடித்துக்கொண்டோம்.
அதற்குள்
என் சட்டைப்பையில்
துருத்திக்கொண்டிருந்த 
பத்து ரூபாய் நோட்டு
அதன் தும்பிக்கை சுருளில்
லாவகமாய்..
இதைக்கண்டு
அவளுக்கு அடக்கமுடியாத சிரிப்பு.
சிரித்துக்கொண்டே..சிரித்துக்கொண்டே
சிரித்துக்கொண்டே
என் மீது அருவியாய் கொட்டினாள்.
அகஸ்தியன் அருவியே 
ஐந்தாய் வகிடு பிரித்து
ஐந்தருவியாய் என்னை மூடிக்கொண்டது.
அவள் குலுங்கல் சிரிப்பில்
மூச்சுத்திணறினேன் 
இனிப்பு முட்ட முட்ட.
அந்த தாமிரபரணி தண்ணீர் முழுவதும்
ஒரு தாகமாய் 
என் மீது ஓடிக்கொண்டே இருக்கிறது.
 
=================================================

News

Read Previous

பட்டினப்பாலை

Read Next

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் குறிப்புகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *