தமிழ் பா மாலை சூடி..

Vinkmag ad

தமிழ் பா மாலை சூடி.. (கவிதை) வித்யாசாகர்!

லகாள எழுத்தாகி எனையாளும் மொழியே
உனைபோற்றி வினைசெய்ய வரம் தாயென்
தமிழே, மனதாலும் நினைவாலும் ஒலியாக
எழுவாய், வரியாக வடிவாக உயிர்போல அமைவாய்!

பலகாலம் கருவாக உயிராக சுமந்தேன், உளகாலம்
உனதாகி உன்னுள்ளே உயிர்ப்பேன், மறவாது
மருவாது வரையின்றி நிலைப்பாய், உன் மடிமீது
தமிழ்பேசி உயிர்தீர அமர்வேன்!

அணைத்தாலும் மறுத்தாலும் மூப்பில்லை
யுனக்கு, மழைபோல வனம்போல இயல்பேயுன் சிறப்பு,
அரிதாகி வலிதாகி கடலோடுமிருப்பாய் மலையோடுமிருப்பாய்
பேசாதார் பேசுகையில் நீயே முதலாய் சிறப்பாய்!

அதிகாலை மழைதானே மண் வாசம்
பரப்பும், நீ முதலாக பிறந்தாயே மொழிவாசம்
பரப்பு, தீநாக்கு சூடின்றி ஒளியெங்கும் நிரப்பு
உனை அறியாதார் அறிகையிலே அமிழ்தம்போல் இனிப்பு!

உயிர்போல எங்கும் உணர்வோடு உள்ளாளே
நீதான், உனை மகளாக்கி கொஞ்சுகையில், பா
மாலைகள் குவிவது வரம்தான், அதற்காக நீயென்ன
சிறியவளா சொல் சொல்.. ?

எமைப்பெற்ற பெரும்பேறு உனதன்றோ தாயே ?
உளம்பொங்கும் மகிழ்வாலே நான் துதிப்பவளும்
நீயே, உனக்காக ஒரு புள்ளி தமிழாலே தொட்டேன்
நீயள்ளி பிரபஞ்சத்தை தீயாக தின்றாய்;

எனக்காக எனக்காக எந் தமிழாக நின்றாய்
வான்முட்ட உயர்ந்தாளே உனக்கென்
சரணம் சரணம்!! வனப்பூரும் தமிழே
உனக்கென் சரணம் சரணம்!!

————————————————-
வித்யாசாகர்

News

Read Previous

தமிழே வணக்கம்

Read Next

ஒரு புத்தகம் என்ன செய்யும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *