சிவனை நாம் வணங்கி நிற்போம் !

Vinkmag ad

சிவனை நாம் வணங்கி நிற்போம் !
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண்  )

சினமெமை தீண்டா நிற்க
சிரமதில் கனதி போக
பரமனின் பாதம் பற்றி
மணிந்துமே நிற்போம் என்றும்

மனிதராய் வாழ வேண்டில்
மனமதில் தூய்மை வேண்டும்
புனிதராய் இருக்க வேண்டில்
போற்றுவோம் பரமன் தன்னை

ஆணவம் தமக்குள் ஏற
அனைத்தையும் மறந்தே நின்ற
மாலொடு பிரமன் தானும்
மதிகெட்ட செயலைச் செய்தார்

கடவுளர் தாமே என்று
கங்கணம் கட்டி நின்று
அழிவினை தேடும் வண்ணம்
அவர்நிலை ஆயிற் அன்றோ

ஆணவம் அழிக்க அங்கே
அளவிலா ஜோதி தோன்றி
காணுங்கள் ஆதி அந்தம்
கடவுளாய் ஆவீர் நீங்கள்

என்ற அச்சேதி கேட்டு
இருவரும் முயற்சி செய்து
பன்றியாய் பட்சி ஆகி
பற்பல வித்தை செய்தார்

வென்றவர் யாரு மின்றி
விக்கித்து நின்ற போது
அங்குமே சிவனும் தோன்றி
ஆணவம் போக்கி நின்றார்

என்றுநாம் அறியும் வண்ணம்
இயம்பிடும் புராணம் தன்னை
நன்றுநாம் கற்றோம் ஆனால்
நாமுமே திருந்தி வாழ்வோம்

மனங்களில் அழுக்கு வந்தால்
மாயையே தோன்றி நிற்கும்
குணமெலாம் மாறிப் போகும்
குறைகளே குவிந்து நிற்கும்

அறமெலாம் மறந்தே போகும்
ஆணவம் ஆட்சி செய்யும்
அரனது நாமம் கூட
அனைவரும் மறந்தே போவர்

சிவனது இரவு தன்னில்
அவனையே மனதில் எண்ணி
பவவினை போக்கு என்று
பணிவுடன் வேண்டி நிற்போம்

நீறு அணிந்த நெற்றியொடு
ஆறு அணிந்த சடையுடையான்
பேறு தனைப் பெற்றுவிட
கூறி நிற்போம் அவன்நாமம்

சிவனது நோக்குப் பட்டால்
தெழிவுமே வந்து நிற்கும்
உளமெலாம் தூய்மை ஆகி
உமைபாகன் பக்கம் சேரும்

தவமுடன் சிவனை எண்ணி
தலைமீது கையை வைத்து
சிவனைநாம் வணங்கி நிற்போம்
சிவனது இரவு தன்னில் !

News

Read Previous

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா?

Read Next

தேர்வுக்கு ஏற்ற உணவுகள் – டாக்டர்.கு. கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *