கண்ணீர் கவிதாஞ்சலி

Vinkmag ad

kalam apjசிம்னி விளக்கொளியில் கற்றவரே

சிந்தாமல் உழைத்தே வான்வெளியில்

”அக்னிச் சிறகை”க் கட்டியவரே

அயராமல் வெற்றியை எட்டியவரே

தெருவிளக் கொளியில் படித்தவரே

தேசத்தின் முதற்பதவி பிடித்தவரே

பெருவிளக்கம் அறிவியலில் தருபவரே

பேராசானாய் என்றும்வலம் வருபவரே

 

தேசத்தின் தென்கோடியில் உதித்தவரே

தேடிவரும் குழந்தைகளை மதித்தவரே

பாசத்தில் எண்கோடி வென்றவரே

பாரெங்கும் புகழால் நின்றவரே

தேசியக் கொடியே தேசத்தின்

தொப்புள் கொடியாய் நேசித்ததனால்

தேசிய மக்களையே பாசத்தின்

தொப்புள் கொடியுறவாய் நேசிப்பவரே

 

பல்கலைக் கழக துணைவேந்தர்

பதவிக்கு வாரா திருக்க

பலகைகள் இச்சூரியன் முன்னால்

பலகைகளாய் தடுத்தும்; பின்னால்

உலகப் பல்கலைக் கழகங்கள்

உங்கள் உழைப்பை விழைகின்றன;

பலப்பட்டம் தருவதில் போட்டி!!

பயிற்றுத் திறனைக் காட்டியே

 

கணிணியின் மின்சக்தி சிக்கனத்தில்

 “கண்ட்ரோல்+ஆல்டர்+டெலிட்”(என்றீர்)

கணியன் பூங்குன் றனாரின்

கருத்துக்கள் உலகில் நிலைத்திட்டீர்

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”

ஐரோப்பாவில் தமிழில் ஒலித்தன

காதுகள் குளிர்ந்தன; கைகள் வலித்தன

கண்டங்கள் தாண்டியும் களித்தனவே

 

அஞ்சலட்டை போட்டு உங்களின்

அன்புக்கு ஏங்கிடும் எல்லாப்

பிஞ்சு குழந்தைகட்கும் தினமும்

பிசகாமல் மறுமொழி தருபவரே

குழந்தை களுடன் குழந்தையாய்

குதூகலிக்கும் குழந்தை மனமே

உழவின் பெருமையும் என்றும்

உள்நாட்டின் பெருமையும் விழைபவரே

 

மக்களோடு மக்களாய் கலப்பதில்

மகிழ்வைப் பெற்றதனால் இன்றும்

”மக்கள் குடியாட்சித் தலைவர்”

மக்கள் தந்த அடைமொழியாம்

எக்காலமும் உங்கள் புகழும்

இத்தரணியில் நிலைத்து வாழும்

பொற்காலம் உங்களின் பேராசனம்

போற்றுவோம்; மகிழ்வாய்க் கூறுவோமே

 

“கலாம் அய்யா  உங்கட்கு எங்கள் சலாம் அய்யா” “

இறைவனின் சாந்தி உங்கள் மீது உரித்தாகுக”

 

உங்களின் பெயரினைப் பெற்றுள்ள;

உங்களின் அன்பினைப் பெற்றுள்ள,

 

“கவியன்பன்” கலாம்,  அதிராம்பட்டினம்

News

Read Previous

சென்று வா!

Read Next

இந்திய மண்ணின் இரண்டாம் இமயம் இன்று சரிந்ததே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *