ஒரு நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து….

Vinkmag ad
ஒரு நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து….
===========================================================ருத்ரா
ஆம்
அப்படி நாம் கட்டிய
கற்கோவில்கள்
நுரைக்கோபுரங்களாய்
கண்முன்னே கரைகின்றன.
பூகம்பங்கள்
சுநாமிகள்
கொள்ளை நோய்கள்
கொரோனாக்கள்
இவை முளையடித்துக் கட்டிய‌
அச்சத்தின் கூடாரங்களில் தான்
நம் நம்பிக்கையின்
சித்திரங்கள்
தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அவை காற்றில்
படபடத்து
அவ்வப்போது
முகம் திருப்பிக்காட்டுகின்றன..
நம்பிக்கையின்மைகளாக!
நம்பினோர் கெடுவதில்லை
இது நான்கு மறை தீர்ப்பு.
அந்த தீர்ப்பு
மானுட வெளிச்சத்துக்கு
கட்டிய‌
நான்கு வர்ண சவப்பெட்டிகளில் தான்
நம்பிக்கைகள் எல்லாம்
சடலங்களாக‌
விறைத்துக்கிடக்கின்றன.
அறிவின் அக்கினி அலைகள்
மட்டுமே
உண்மைகளை
எத்தனை பிரபஞ்ச அடுக்குகளாக‌
அவை அப்பிக்கிடந்தாலும்
பிரித்து மேய்ந்து விடும்.
பகுத்தறிவு எனும் ஒளித்திரட்சி ஒன்றே
நம்
இருட்டுப்பிண்டங்களையெல்லாம்
அழித்துத் துடைத்து நிற்கும்.
நம்பிக்கை அவநம்பிக்கையாக‌
தூள் தூள் ஆக நொறுங்கும்போது
அந்த கண்ணாடிச்சிதறல்களின்
ஒவ்வொரு பிம்பமுமே
உன் அழகிய முக தரிசனம்.
உண்மையின் அறிவுப்பிழம்பு அது.
மீண்டும் அதன் மீது
அறியாமையின் இருட்டை
அள்ளிப்பூசிக்கொள்ளாதே.
ஆண்டவனைத்தேடியே இங்கு
ஆயிரம் ஆயிரம் ஆண்டவன்கள்
க்யூ வரிசையில் நிற்கிறார்கள்.
மனிதன் எழுதிய சமுதாய நேயத்தின்
மானுட வசனமே
காத்துக்கிடந்து காத்துக்கிடந்து
வாசிக்க வேண்டிய‌
அவர்களின் வேதப்புத்தகங்கள்.

News

Read Previous

கொரோனா !

Read Next

‘.இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *