உலக பால் தினம்

Vinkmag ad

உலக பால் தினம் – 26.11.2017

அன்னை- தந்தை கலப்பால்
பிறந்தோம் இந்த பூமியின்பால்
அன்னை தந்த தாய்ப்பால் குடித்து
வளர்ந்தபின் ஆவின் பால் குடித்து
அறிவின்பால் உள்ள அவசியத்தால்
கவனம் வைத்தோம் கல்வியின்பால்.
இளைஞனாகியதும் வந்த பொறுப்பால்
சேர்ந்தோம் ஒரு வேலையின்பால் .
பணியில்உயர்ந்தோம் உழைப்பால் .
உரிய வயது வந்ததும் வாழ்க்கையில்
இணைந்தோம் ஒரு துணையின்பால்
நாட்டம் கொண்டோம் இன்பத்துப்பால்
நமக்கென ஒரு மகவு பிறந்ததும்
ஆசை வைத்தோம் மழலையின்பால் .
வசதிக்குத் தேவை பொருட்பால்
அதனை அடைந்தோம் உழைப்பால்
அதானால் வந்த களைப்பால்
ஒய்வு பெற்றோம் முதுமையின்பால் .
அனைவர் மேலும் வைத்த அன்பால்
அவர்களைக் கவர்ந்தோம் பண்பால்

பொருட்பால் , இன்பத்துப்பால் இவற்றோடு
சிந்தனை வேண்டும் அறத்துப்பால்

முப்பால் அளித்த வள்ளுவர்பால்
கம்பன் அளித்த கவிதையின்பால்
இளங்கோ அளித்த சிலம்பின்பால்
சுருங்கச் சொன்ன அவ்வையின்பால்
சங்கம் வளர்த்த பாண்டியர்பால்
கலையிற்சிறந்த சோழர்பால்
வீரம் மிகுந்த சேரர்பால்
கொடையிற்சிறந்த பாரியின்பால்
தமிழை வளர்த்த புலவர்பால்
தாய் மொழியான தமிழின்பால்
நாம் கொண்ட பெருமதிப்பால்
கொண்டு செல்வோம் அதன் சிறப்பை
அனைவரும் அறிய உலகத்தின்பால் .

ஆட்டுப்பால் குடித்தார் அண்ணல் காந்தி
ஒட்டகப்பால் குடிக்கிறார் பாலைவனத்தார்
பசுவின்பால் குடிக்கிறார் பார் முழுவதும்
பால் உறைவைக்க தயிராகும் ,
தயிரிலிருந்து வெண்ணை வரும்
வெண்ணை உருகி நெய்யாகும்
எல்லா விதத்திலும் சக்தி தரும்
பாலே அனைத்திற்கும் அடிப்படையும் .
பாலின் சிறப்பை உணர்த்திடவே
பாற்கடலில் துயில்கிறான் பரந்தாமன் .

பாலின் பெருமை அறிந்திடுவோம்
பாலை உணவில் சேர்த்திடுவோம்.
பாலைக் கொடுக்கும் உயிர்களின்மேல்
பாசம்காட்டிக் காத்திடுவோம்.

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

கதை சொல்லுமா கைபேசிகள்?

Read Next

பாலிதீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *