இது வெறும் காலண்டர் தாள் அல்ல

Vinkmag ad
இது வெறும் காலண்டர் தாள் அல்ல.
====================================================ருத்ரா
பெப்ரவரி பதினாலு!
இது
வெறும் காலண்டர் தாள் அல்ல.
இன்று
மின்னல்களின் தொப்பூள்கொடி
இதயப்பூக்களில்
காதலாய்
காதலை காதலால் காதலித்து
கொடியேற்றும் தினம்.
தேசம் இல்லாத தேசத்தின்
எல்லைக்கோடுகள் இங்கே
அன்பும் நேசமும் கொண்டு தான்
வரையப்பட்டுள்ளன.
முரட்டு முள்கம்பியை இங்கே
சுற்றி வைத்தாலும்
அவை
இளம் இதயங்களின் யாழ் ஆகும்.
காதல் நரம்பு முருக்கேற்றிய‌
பாடல்களில் தான்
தினம் தினம் அந்த‌
சூரியன்களும்
வெது வெதுப்பாய் இமைவிரிக்கும்.
சாதி சமயங்கள் மற்றும்
நிறவெறிச் சாயங்களின்
சாக்கடை நதிகள் இங்கே
ஓடுவதும் இல்லை.
இவற்றின் மகா சாக்கடைகளின்
கும்பமேளாக்கள் இங்கே
கூடாரங்கள் அடிப்பதும் இல்லை.
சொர்க்கங்கள் எனும்
புராண சொக்கப்பனைகள்
இங்கே எரிவதில்லை.
ஆதமும் ஏவாளும்
இன்னும்
பழமும் பாம்பும் சைத்தானும்
சேர்ந்து
கூட்டணி ஆட்சிசெய்யும்
பம்மாத்துப்படங்களும்
இங்கு இல்லை.
இச் என்று
இரண்டு மனங்கள் இடும்
முத்தங்களில்
எச்சில் தெறிப்பதில்லை.
கலவிக்கு ஏங்கும் கனவுகள்
இங்கு இல்லை.
ஒரு பார்வை போதும்!
இந்த இளஞ்சிட்டுகளுக்கு
வானம் முழுதுமே அது
சாக்லேட் பிழம்புதான்.
பேசாத மௌனம் கூட‌
பேச்சுகளின் அடை மழை தான்.
பேச்சொலிகள் கேட்கும்
ஆனால்
அவற்றில்
செவிகளுக்கும் வாய்களுக்கும்
வேலை இல்லை.
இதயங்கள் யாவும்
தூய அன்பில் நனைந்து கிடக்கும்.
கொச்சை நிகழ்வுகளை
குப்பையாக கூட்டிப்பெருக்க‌
அவர்கள்
வாழ்க்கையே அங்கு
காத்து நிற்கும்.
பத்தாம் பசலிகளின்
கோரைப்பற்கள்
ரத்தம் குடிக்க அங்கே வரலாம்.
இந்த இளம்பூக்களை
காத்து நிற்கும் சமுதாயக்கேடயங்களே!
சமுதாய சம நீதி காக்கும்
ஊடக அரண்களே!
கவனம் கொள்க!
காதல் தேசத்தின்
எல்லைகளில்
பாட்டுச்சத்தங்களே நீங்கள் கேட்கும்
வேட்டுச்சத்தங்கள்!
காதல் வாழ்க!
காதல் இதயங்கள் வாழ்க!!

News

Read Previous

துடியன்ன இமைகள் காட்டுதி

Read Next

சிரிப்போ சிரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *