அன்னைத் தமிழ்த் திருத்தசாங்கம்

Vinkmag ad
அன்னைத் தமிழ்த் திருத்தசாங்கம்
காப்பு
அன்னைத் தமிழ்காக்கும் ஐங்கரன் அப்பனவன்
என்னைத் திருத்தசாங்கம் செய்யவைத்தான்- உன்னதமாய்க்
காக்க சுரேஜமீ; கற்றிடும் யாவரையும்
காக்கும் தமிழால் கசிந்து!!
நாமம்
பார்போற்றும் குக்கூவே பைந்தமிழில் கூவிடுக
ஏர்போற்றும் எம்மினத்தின் ஏற்றதமிழ்! – தேரேற்றி
ஊர்போற்றி உய்யொளி போற்றி உரக்கச்சொல்
வேர்போற்றன் னைத்தமிழ் என்று!
நாடு
இன்பக் குரலாயோய் இன்னிசைப் பாட்டாயோய்
நன்று நவில்வாயோய் நாடிது – மன்னுபுகழ்
கொண்ட இமயம் தொடர்ந்து குமரிவரை
வண்டமிழ் நாடென வாழ்த்து!.
நகர்
இசைக்குயில் ஈர்க்கின்ற எம்மூர் தெரிவாய்
திசைக்கொரு எல்லை இருக்கும்  – விசைதரு
சொக்கனுடன் மீனாள் சுகங்கொள் மதுரையென
திக்கெலாம் சொல்லித் திரி.
ஆறு
அக்காலம் தொட்டிங்(கு) அரும்பயிர் சார்ந்திருக்கும்
இக்காலும் வேண்டுகின்ற இவ்வாறு – சிக்கல்
மிகக்கொண்ட காவிரி யேயெனக் கூவு
மிகநன்றா யெங்கு மினி!.
மலை
வாசனை மிக்கும் வனப்போ டுயர்ந்தமலை
நேசன் அகத்தியன் நின்றமலை  – ஈசன்
புகழ்த்தமிழ் வார்த்த பொதிகை இதுவே
உகப்புக் குயிலே உரை!
ஊர்தி
உயிரோடு ஒட்டி உறவாடும் காற்றே
உயிரின் நிலைக்கிவ் வுலகில் –  உயிர்கொடு
காற்றே தமிழுக்குக் காவல் ஊர்தியெனச்
சாற்று நிலத்தில் சமைத்து!
படை
சங்கம் முதலாய்ச் சமீபம் வரைத்தமிழ்
தங்கம் பதித்த தகையோரே – உங்களால்
நாங்கள் நிமிர்கிறோம் நாளும் புலவர்காள்
நீங்கள் எமக்குப் படை!
முரசு
தென்கடல் மூழ்கியெங்கள் தெம்பினைக் காட்டிடும்
நன்றென நாமெடுத்த நற்சங்கே – இன்னிசை
ஓங்கி நிலத்தில் ஒலித்திடுக எம்முரசாய்
பாங்காய் எவர்க்கும் பரந்து!
தார்
அல்லிமலர் கொள்நீர் அருந்த இனிப்பாகும்
வெல்லும் மனதை இயல்பாகச் – சொல்கநிதம்
அன்னையவட் கேற்றதார் அல்லியென நற்குயிலே
இன்னைக்குப் பாட இசைந்து.
கொடி
கானக் கருங்குயிலே காணா வனப்பழகே
கானம் இசைத்துக் கவிபாடு! – மானமுடைப்
பாண்டியனின் மீன்கொடி பைந்தமிழ்ச் சங்கமெலாம்
தாண்டிவந்த எங்கள் கொடி!
நூற்பயன்
உயர்ந்த நெறிகொண்ட உத்தமர்காள் சொல்க
உயரத் திருத்தசாங்கம்! உண்மை!! – உயர்வீர்
உயரம் தொடுக;பின் ஊருக்குச் சொல்க
உயரட்டும் மக்கள் உணர்ந்து!
இதுகாறும் கிளி பேசுவதாக அமைந்த தசாங்கத்தைக் குயில் பாடுவதாக அமைத்துள்ளேன்.
அன்புடன்,
சுரேஜமீ

News

Read Previous

சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல்

Read Next

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *