அகரம்

Vinkmag ad

#அகரம் …
– அபு ஹாஷிமா

பெருமானார் வீட்டுத் திண்ணைதான்
உலகிற்கே முதல் பள்ளிக்கூடம் !
நபிகளின் நாவு சித்திய
வேதத் துளிகளை
உண்டு மகிழ்ந்தவர்கள்
சஹாபித் தோழர்கள் !

பெருமானார் சிந்தியதும்
தோழர்கள் பருகியதும்
பேரின்ப ஞானத்தேன்
ஈடில்லா அறிவுத்தேன் !

ஈருலகிலும்
நல்ல இருக்கைகளை
பெற்றுக் கொள்ள
இரு கை ஏந்தியவர்களாய்
நபிகள் வீட்டுத் திண்ணையில்
இருக்கைகளை இருத்தியவர்கள்
நபித் தோழர்கள் !

இவர்கள்
கற்றதிலும் பெற்றதிலும்தான்
இன்றுவரை உலகம்
தன் அறிவுப்பசிக்கு
ஆகாரம் எடுத்துக் கொள்கிறது !

நபிகளின் நடைமுறைதானே
நல்லோர்களின் வழிமுறை !

நல்ல விழிகளைப் பெற்றவர்கள்
நபித் தோழர்களின் வழியிலேயே
அறிவைப் பருகவும்
புகட்டவும்
புறப்பட்டார்கள் !

அண்ணல் விதைத்துச் சென்ற
வெளிச்ச வித்துக்களை
இவர்கள் எடுத்து வந்தார்கள் !
கோட்டாறிலும் அதனை
விதைத்தார்கள் !

கல் திண்ணைகள்
காவியம் பாடின !

அப்துரசாக் காதிரி அவர் பெயர்
என்றாலும்
” அகரம் ” எனச் சொன்னாலே
அனைவருக்கும் புரியும் !

அகரம்
ஆன்மீக அறிவின் சிகரம் !

ஞானப் பாதையில் நடை பயின்ற
இவரின் பாதச் சுவடுகள்
ராஜாக்கள் பார்வையில் பட்ட பிறகுதான்
புது வசந்தங்களைப் பூசிக்கொண்டது
வையாளி வீதி !

இவர் –
தனது இரவுகளைக்கூட
பகலாக ஆக்கியவர் !
மற்ற மாதங்களைக்கூட
ரமலானாக மாற்றியவர் !

அரிசியை மூடியிருக்கும் உமியைப்போல
சுளையைப் பொதிந்திருக்கும் முள்ளைப்போல …

கோட்டாறு –
இருட்டும் வெளிச்சமும்
கை குலுக்கிக் கொள்ளும்
அபூர்வ நகரம் !

வெறும் ஞானமும்
மெஞ்ஞானமும்
முஸாபஹா செய்து கொள்ளும்
விசித்திரங்களின் உலகம் !

அன்பு இதயங்களில்
பாசம் சுரக்கும்
அடக்கு முறைகளில்
புரட்சி வெடிக்கும்
குழப்ப மண்ணில்தானே
தெளிவு பிறக்கும் !

இதயங்கள்
செல்லரித்துப்போன சிலர்
இறைநேசச் செல்வர்களை
இகழ்ந்துரைக்கத் துணிந்த போது
அரிமாவென ஆர்ப்பரித்து எழுந்து
* ” ஜிஹாது ” நடத்தியவர்
தாஜுல் மில்லத்!

இவர் –
சினந்தால் சிறுத்தை
சிரித்தால் குழந்தை !
சீறும்போதுகூட
சிந்தையில் தடுமாற்றம்
இவரிடம் இல்லையென்பது
எதிரிகளே வியக்கும் விந்தை !

இவர் பார்வையில்
தீட்சண்யம் !
ஆனால்…
ஒருபோதும்
இவர் காட்டியதில்லை
கொள்கை கொலைகாரர்களிடம்
தயவு தாட்சண்யம் !

படைத்தவன் பாதையிலேயே
பயணத்தை நடத்திய இவர்
அஸ்தமனச் சூரியனாய்
அடிவானில் மறைந்த பொது
கோட்டாறே கசிந்தது
கண்ணீரும் அழுதது !

இன்று –
இருப்பதற்கு யாருமில்லாத
ஞான சிம்மாசனத்தைக் காணுகின்றேன்
அகரம் இல்லாத நிலை கண்டு வாடுகின்றேன் !

…. கண்ணியத்திற்குரிய அகரம் அவர்களை நினைத்தேன்…
கண்கள் பனிக்க எழுதினேன்.

@ ஜிஹாத் – அகரம் நடத்திய இஸ்லாமிய மாத இதழ்

News

Read Previous

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

Read Next

பேரறிஞர் அண்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *