50000 தோல்வி… 2000 பேடண்ட்… எடிசன் என்னும் ஃபீனிக்ஸ் மனிதன்!

Vinkmag ad

50000 தோல்வி… 2000 பேடண்ட்… எடிசன் என்னும் ஃபீனிக்ஸ் மனிதன்!

நான்கு வயது வரை அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. ஏழு வயதில்  ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது ‘மண்டு’ என்றும் ‘மூளை வளர்ச்சி இல்லாதவன்’ என்றும் ஆசிரியரால் வசைபாடப்பட்டான். கவனக்குறைவு நோய்க்குறியினால் பாதிக்கப்பட்டவன் (ADHD -attention deficithyperactivity disorder) என்று சொன்னார்கள். காதுகேளாதவன். தன் பெயரையே ஒரு சமயம் மறந்தவன். இப்படிப்பட்ட குழந்தை தானே கற்பித்துக்கொண்டு உலகம் முழுவதும் 2,332 காப்புரிமைகளைப் பெற்றான் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம், இருபதாம் நூற்றாண்டின் தலையெழுத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் அறிவியல் விஞ்ஞானி ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ தான் இத்தனை குறைபாடுகளுக்கு ஆளான அந்தக் குழந்தை. இத்தனை குறைபாடுகளையும் தாண்டி வென்றவர் எடிசன்.

1847ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார். குடும்பத்தின் கடைக்குட்டி இவர்தான். நான்கு வயது வரை பேசாமல் இருந்த எடிசன், பின்னர்ப் பேச ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே இருப்பார். எதற்கெடுத்தாலும் “இது என் இப்படி?”, “அது ஏன் அப்படி?” எனக்கேள்வி கேட்டே ஆளைக் கொன்றுவிடுவார். இவர் கேள்வி கேட்பார் என்று பலர் பயந்து ஓடியதும் உண்டு. ஏனென்றால் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும் “ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?” என்று மற்றுமொரு கேள்வியும் கூடவே வரும். அப்படி இல்லையெனில் 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் சாத்தியமாகுமா?

சிறு வயது முதலே யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பிவிடமாட்டார், எந்த விஷயமானாலும் அதை ஆய்ந்து கண்கூடத் தெரிந்து கொண்டால் தான் நம்புவார். அப்படி ஒரு நாள், குஞ்சு பொறிப்பதற்காக வாத்து முட்டையை அடைகாப்பதைப் பார்த்தார். அடைகாப்பதினால் தான் குஞ்சு பொறிக்கிறதா என எடிசனுக்கு ஐயம் எழ, ஆய்ந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தானே முட்டை மீது குஞ்சு பொறிக்கும் வரை அடைகாக்க உட்கார்ந்தாராம். இந்தச் சம்பவம் நடை பெற்ற போது எடிசனுக்கு ஐந்து வயதுதான். இந்த ஆய்ந்தறியும் தன்மைதான் பிற்காலத்தில் பிரபல புகைப்படக்காரரான மைப்ரிட்ஜ் “இயங்கும் படமெடுப்பது சாத்தியம் அன்று!” என்று சொன்ன போது ஆய்வில் இறங்கி கைனடாஸ்கோப்பை கண்டறிய உதவியது.

எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது.  முதன்முதலில் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்து, செய்யச் செலவு அதிகம் ஆகும். அந்தச் சாதனத்தை பெரும் அளவில் உற்பத்தி செய்யும்போது பெரிய இழப்புகள் ஏற்படும். அதனாலேயே அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாமல் போனது. ஆனால் எடிசன் எப்பொழுதும் தான் கண்டுபிடித்த சாதனத்தை, எளிய மக்கள் வாங்க வசதியாக மலிவு விலையில் உற்பத்தி செய்யும் வழிமுறையைக் கண்டறியும் வரை ஓயமாட்டார். ஐந்து மணி நேரத்திற்கு ஒருமுறை அரை மணி நேரத் தூக்கம். அது தான் அவரின் ஓய்வு நேரம். ஆய்வு தீவிரமான காலகட்டங்களில் இவர் வெறும் அரை நிமிடம் (முப்பது நொடிகள்) மட்டும் தூங்கிய காலமெல்லாம் உண்டு

தனது ஏழாம் வயதில் ஒற்றையாசிரியர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் அங்குள்ள ஆசிரியர் இவரை மண்டு, மூளை வளர்ச்சி அடையாதவன் எனக் கூற, கோபம் கொண்ட எடிசனின் தாய் எடிசனின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு தானாகவே புத்தகங்கள் படித்து கற்க ஆரம்பித்தார். ரசாயனம் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தானே புத்தகங்களைப் பார்த்து, வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்து ஆய்வுகளை மேற்கொள்வார். வயது ஆக ஆக ஆய்வும் பெரிதானது. அதற்குத் தேவையான பொருட்களை வாங்க பணம் அதிகம் தேவைப்பட்டது. எனவே ரயில் வண்டியில் பத்திரிகை விற்க அனுமதி பெற்றார். இரயிலில் சரக்கு பெட்டி ஒன்றினில் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். ஆனால் ஒரு முறை பாஸ்பரஸ் தவறியதில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது, எடிசனை ரயில் பொறுப்பாளர் கன்னத்தில் அறைய, முன்னரே செங்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு செவிப்புலன் பாதிப்புற்று இருந்ததால், இவருக்குக் காது இன்னும் மோசமாகி விட்டது.

தந்தி அலுவலராகப் பணிபுரிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த எடிசன், தனது இருபத்தி இரண்டாம் அகவையில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்து காப்புரிமை வாங்கினார். இதுதான் அவரின் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு. இது வாக்குகளைத் துல்லியமாய் பிரித்துக் காட்டியதால் அன்றைய அரசியல்வாதிகள் அந்த இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பொதுமக்களுக்கு பயன்படும் பொருட்களை மட்டுமே கண்டுபிடிப்பேன் என்று உறுதிமொழி எடுத்தார்.

கார்பன் டிரான்ஸ்மிட்டர், போனோகிராப், மின்விளக்கு, மின்சார ரயில், சேம மின்கலம், இரும்புத்தாது பிரித்தெடுக்கும் முறை, கான்கிரிட் தயாரிக்கும் முறை என எக்கச்சக்க சாதனங்கள் செய்து இவரே அதைப் பெருமளவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் துவங்கினார். ஒலியைப் பதிவு செய்து, பதிவு செய்த அதே ஒலியை மீண்டும் ஒலிபரப்பும் போனோகிராப் என்கிற கருவியை கண்டுபிடித்து, அதை மெருகேற்றி அதில் பல மாற்றங்களையும் செய்தார். போனோகிராப்புக்காக மட்டும் அறுபத்தைந்து காப்புரிமைகள் பெற்றுள்ளார்.

விடாமுயற்சி என்னும் சொல்லுக்கு இவரைத் தவிர சிறந்த உதாரணம் யாராகவும் இருக்க முடியாது. மின்விளக்கு நீண்ட நேரம் எரிய எந்த மின்னிழை ஏதுவானதாக இருக்கும் எனக் கண்டறிய கிட்டத்தட்ட 5,000 த்திற்கும் மேற்பட்ட மின்னிழைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார். 5000 இழைகள் மின்விளக்கிற்குப் பொருந்தாமல் போனபோதும் கூட மனந்தளராமல் விடாமுயற்சியோடு சரியான மின்னிழையை கண்டறிந்தார். இந்தச் சம்பவம் கூட சில பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சேம மின்கலத்தை கண்டுபிடிக்க முனைந்தபோது, சரியான நேர்மறை மின்தகட்டை கண்டுபிடிக்கும்முன் ஐம்பதாயிரம் (50,000) பொருள்களை ஆராய்ந்து எடிசன்  தோல்வியுற்றிருக்கிறார்.

ஆனால் அவரோ “நான் ஐம்பதாயிரம் முறை தோற்கவில்லை, ஐம்பதாயிரம் பொருள்கள் இதற்கு உதவாது என்று கண்டறிந்து வெற்றியடைந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். ஆமாம் எடிசன் நீங்கள் வெற்றியாளன் தான். தோல்வியையும் வெற்றியாய் மாற்றி, இருபதாம் நூற்றாண்டு மட்டுமல்ல வரும் பல நூறு நூற்றாண்டுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று (11-2-2021).

தகவல் உதவி – விகடன். காம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குரோம்பேட்டை கிளை

News

Read Previous

பச்சோந்தி நிறம் மாறுவது எப்படி?

Read Next

எதை நினைப்பது? எதை மறப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *