குழந்தைகளின் கோபத்தைப் புரிந்து கொள்வோம்

Vinkmag ad

குழந்தைகளின் கோபத்தைப் புரிந்து கொள்வோம்

கொரோனா ஊரடங்கால் பெரியவர்களே பெரும் மனப்போராட்டத்தைச் சந்தித்து வரும் சூழலில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வது பெற்றோருக்குச் சவால் நிறைந்ததாக இருக்கிறது. காற்றுக்குக் கடிவாளம் போடுவதைப் போன்றது தான் சுற்றித் திரிந்த குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துப் பராமரிப்பது.

ஊரடங்கின் தொடக்க நாட்களைப் பெரும்பாலான குழந்தைகள் மகிழ்ச்சியாகவே கழித்தனர். கற்பனைக்கு எட்டாத அற்புத உலகமாகவே இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் தங்க வைக்கப்படும்போது அலுத்துவிடும்தானே… மூன்று மாதங்களைக் கடந்து தொடரும் ஊரடங்கு அப்படியான அலுப்பையும் சோர்வையும்தான் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் நாம் வீட்டுக்குள்ளேயே இருப்பதன் அவசியம் குறித்தும் குழந்தைகளுக்குப் புரிந்தாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பது என்பதுதான் அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். எரிச்சல் கோபமாகி, சில நேரம் எல்லை கடந்துவிடுவதும் உண்டு. இதுபோன்ற சூழலில் பெற்றோரும் குழந்தைகளுக்கு நிகராகக் கோபப்படுவதோ அவர்களை அடக்க முயல்வதோ எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும்.

குழந்தைகளைக் கையாளும் வழி தெரியாதபோதுதான் கோபம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றினால் குழந்தைகளின் மனநிலையில் விரும்பத்தகுந்த மாற்றத்தைக் காணலாம் என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதைச் செய்தாலும் பத்து நிமிடங்களில் அலுத்துவிடும். அதனால், நாம்தான் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து அவர்களை பிஸியாக வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் அவர்களின் திறமைக்குச் சவால் விடும் வேலையைச் செய்யச் சொல்லலாம். கதை சொல்வது, ஓவியம் வரைவது போன்ற பொதுவான செயல்பாடுகளுடன் அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து அதை வைத்து மாறுவேடமிடுவது, நாடகத்தை அரங்கேற்றுவது, கலைப் பொருட்களைச் செய்வது என அவர்களின் கற்பனை வளத்துக்குக் களம் அமைத்துக் கொடுக்கலாம்” என்று சொல்லும் அவர், ‘பள்ளியில் நேர அட்டவணை இருப்பதைப் போல், வீட்டுச் செயல்பாடுகளுக்குக் குழந்தைகளையே அட்டவணை போடச் செய்து கடைப்பிடிக்க வைக்கலாம்’ என்கிறார்.

கைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றிலேயே குழந்தைகள் நாள் முழுவதும் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பது பெரும்பாலான பெற்றோரின் புலம்பல். அவற்றைப் பயன்படுத்தவிடாமல் தடுக்கும்போது, குழந்தைகளில் பலர் கோபப்படுவது, பொருட்களை உடைப்பது போன்றவற்றைச் செய்வதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். உரிய காரணத்தைச் சொல்லாமல் குழந்தைகளிடமிருந்து ஒரு பொருளைப் பறித்தால் அப்படித்தான் செய்வார்கள் என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், இதுபோன்ற விஷயத்தில் குழந்தைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்வது நல்ல பலனைத் தரும் என்கிறார்.

“செல்போனிலோ டிவியிலோ அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். தேவையற்ற வீடியோக்களைப் பார்ப்பது, விளையாடுவது போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தால் செல்போனைத் தர முடியாது என்பதைக் கண்டிப்புடன் சொல்ல வேண்டும். மாறாகப் படிப்பது, அறிவுப்பூர்வமான தகவல்களைத் தேடுவது எனப் பயனுள்ள வகையில் செல்போனைப் பயன்படுத்தினால் கண்டிக்கத் தேவையில்லை. பயன்படுத்தும் நேரத்தை மட்டும் கட்டுக்குள் வைத்தால் போதும்” என்கிறார்.

(ஜூலை 5 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் ப்ரதிமா எழுதியதிலிருந்து)

News

Read Previous

படங்களை தேட உதவும் தொழில்நுட்பம்

Read Next

வெள்ளிப்பனி மலையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *