விண்வெளித் திட்டத்தில் மற்றுமொரு இந்திய சாதனை

Vinkmag ad

அறிவியல் கதிர்

விண்வெளித் திட்டத்தில் மற்றுமொரு இந்திய சாதனை
பேராசிரியர் கே. ராஜு

இந்திய விண்வெளித் திட்ட வரலாற்றில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2017 ஜூன் 5 அன்று மாலை 5.28 மணிக்கு இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகலன் GSLV-Mk III ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்து GSAT 9 எனப் பெயரிடப்பட்ட தகவல் தொடர்பு  புவிசார் செயற்கைக் கோளினை இந்தியாவைச் சுற்றி வரும் பாதையில் செலுத்தியது. குண்டுப் பையன் (Fat Boy) எனப் பெயரிடப்பட்ட மிகக் கனமான ஏவுகலன்தான் GSLV-Mk III. அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதானது இந்திய விண்வெளித் திட்டம் சுயசார்பு அடைந்துவிட்டதையும் கிரையோஜெனிக் எஞ்சின்களைத் தயாரிப்பதில் இந்தியா உலக அரங்கில் வந்து சேர்ந்துவிட்டதையும்  பெருமிதத்துடன் இது பிரகடனம் செய்தது எனலாம்.
புவிசார் செயற்கைக் கோளை அனுப்புவதற்கு ஏவுகலன் தயாரிப்பதற்கான முதல் திட்ட இயக்குநர் எஸ்.ராமகிருஷ்ணனது அலுவலக அறைச் சுவரில் 2002 அக்டோபரில் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. விண்வெளியை ஆராய்வதில் சுயசார்பை அடைவதற்கான தொடர் முயற்சிகளை நோக்கி என்ற வரிகள் போஸ்டரை அலங்கரித்தன. அதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் GSLV-Mk III ஏவுகலன் தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் பரந்த வளாகத்தில்,  தும்பா கடற்கரையில், ஏவுகலன் தயாரிக்கும் திட்டம் உருப்பெற்றுக் கொண்டிருந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் ராமகிருஷ்ணனின் அலுவலகம் இருந்தது. அடுத்த தலைமுறைக்கான ஏவுகலன் வாகனம் எனப் பெயரிடப்பட்ட மார்க் 3 ஏவுகலனின் படம் போஸ்டரில் கம்பீரமாகக் காட்சியளித்தது. 2002 அக்டோபர் 2 அன்று இஸ்ரோவின் அன்றைய தலைவர் கே.கஸ்தூரிரங்கன் ராமகிருஷ்ணனை இயக்குநராகக் கொண்ட மார்க் 3 ஏவுகலன் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
15 ஆண்டுகள் கழித்து 640 டன்கள் எடையுள்ள பிரம்மாண்டமான ஏவுகலனை விண்ணில் செலுத்த முடிந்தது எனில் விஞ்ஞானிகளின் 15 ஆண்டுகால உழைப்பு அதன் பின்னணியில் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை 3.5 டன்கள் எடையுள்ள கனமான இன்சாட் வகை செயற்கைக் கோள்களை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியையே இந்தியா சார்ந்திருந்தது. ஒவ்வொரு முறை ஏவுவதற்கும் 800 கோடி ரூபாயை நாம் செலவழிக்க வேண்டியிருந்தது. இனி கனமான செயற்கைக் கோள்களை அந்த செலவில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவழித்தே (அதாவது சுமார் 350 கோடி ரூபாயிலேயே) அனுப்ப முடிவதை GSLV-Mk III சாத்தியமாக்கியிருக்கிறது. இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த மூன்று கட்ட ஏவுகலன் 4 டன்கள் (4000 கிலோகிராம்கள்) எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏந்தி சுமார் 35,800 கி.மீ. உயரத்தில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் படைத்தது. அதைவிட பூமிக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் 10.000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக் கோளினை செலுத்தவும் இந்த ஏவுகலனால் முடியும்.
இந்த ஏவுகலனைச் செலுத்தும் முயற்சியில் இந்தியா பெற்றுள்ள வெற்றி விண்வெளி ஆராய்ச்சியில் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியது. கனமான பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழில்நுட்பம் கைவசம் வந்துவிட்ட நிலை  விண்வெளிக்கு முதன்முதலாக மனிதரை அனுப்பும் சாதனைக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடியது. GSLV-Mk III-ன் வடிவமைப்பில் உள்ள பல கூறுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஏற்றவகையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவிக்கிறது. மனிதர்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது என்ற சான்றிதழை GSLV-Mk III பெற்றிருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியாவின் சுயமுயற்சியில் இந்த கிரையோஜனிக் ஏவுகலன் தயாரிக்கப்பட்டதென்பது ஒரு மகத்தான சாதனை. இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிக்க சோவியத் யூனியன் தயாரானபோது அமெரிக்கா கொடுத்த நிர்ப்பந்தத்தினால் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. அன்று இந்திய விஞ்ஞானிகள் கிரையோஜனிக் தொழில் நுட்பத்தை சொந்த முயற்சியிலேயே அடைய வேண்டும் என்ற சபதத்தை ஏற்றனர். விஞ்ஞானிகளின் அந்த சபதம் இன்று நிறைவேறியிருக்கிறது.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள உலகச் செயற்கைக்கோள் சந்தையில் குறைந்த செலவில் அதைச் சாதிக்க முடியும் என்ற சாதகமான அம்சத்துடன் இந்தியா இன்று நுழைந்திருக்கிறது. சந்திரயான் 2 திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல இநத் திறன் நிச்சயம் உதவும். விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் முன்னேற இது வழிவகுத்திருக்கிறது. பல நாடுகளின் செயற்கைக் கோள்களுக்கு ஏவுதளத்தை நாம் தரமுடியும் என்பதால் அந்நியச் செலாவணியையும் ஈட்ட முடியும்.
இஸ்ரோவின் சாதனைகளுக்கு ஒரு வாழ்த்து சொல்லுவோம்!

News

Read Previous

காமராஜர்: தனியொரு தலைவர்!

Read Next

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *