வானொலி உரை

Vinkmag ad

மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு

அகிலத்தை ஆளுகின்ற வல்லவனே அல்லாஹ் !

உன்பெயர் தொட்டு இவ்வுரையைத் துவங்குகிறேன் !

பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே !

(வானொளி ஆறின் அன்பு நெஞ்சங்களே!!)

கருணைக் கடலான காவலன் அல்லாஹ்வின் சிறப்பு மிகு சாந்தியும் சீர்மிகு சமாதானமும் நம் அனைவர்மீதும் நின்றிலங்கப் பிரார்த்திக்கிறேன் !

புனிதமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் கண்ணிய ரமளான் புனித பவனி வந்து விட்டது ! அதன் புனித நடையும், புண்ணிய வாடையும் பக்தப் பெருமக்களை பாக்கியவான்களாக்கப் பூமி எங்கும் பரவி நிற்கிறது !

எண்ணிலே அடங்காத ஏற்றங்களையும், எழுத்திலே அடங்காத மாற்றங்களையும் மனிதர் மனங்களிலும், மலர்விழிப் பார்வையிலும், நடையுடை பாவனையிலும் அரங்கேற்றி அகமகிழ்ந்து நிற்கிறது ரமளான்!

ஈமானிய்யத்தான நெஞ்சங்களிலே எண்ணை வார்த்து – எண்ணிப் பார்க்காத அமல்களை அரங்கேற்றி – இறை அருளைத் தேடிச் செல்லும் வழிப்பாதைக்கு ஒளிவிளக்காக ஒளிர்ந்து நிற்கிறது ஒப்பற்ற ரமளான் !

முஃமின்கள் என்னும் இறைவிசுவாசிகள் – முத்தக்கீன்கள் என்னும் பயபக்தி மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்பதற்காகவே நோன்பு என்னும் உபவாசத்தை ரமளான் மூலம் இறைவன் கட்டாயக் கடமையாக்கி வைத்திருக்கிறான்.

“இறை நம்பிக்கையாளர்களே ! உங்களுக்கு முன்பு வாழ்ந்த நபிமார்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து அடி நடந்த நம்பிக்கையாளர்களுக்கும் விதியாக்கியது போலவே தான் உங்களுக்கும் நோன்பு என்னும் உபவாசத்தை விதியாக்கி வைத்திருக்கிறேன்” என்று உரைக்கிறான் இறைவன் ! நோன்பு ஒரு புதுமையல்ல ! அது ஒரு பழமைமிக்க பாதை என்பதை இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

அகில உலக அரங்கிலே உண்ணா நோன்புக்கு ஒரு தனிப்பெரும் சிறப்பும் – தலைசிறந்த மரியாதையும் உண்டு ! ஞானிகளும், மேதைகளும், அறிவுசால் ஆராய்ச்சி வல்லுனர்களும், உடல் கூற்று நிபுணர்களும் இந்த உபவாச உண்ணா நோன்புக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் ! பெருமை படைத்திருக்கிறார்கள் ! கடைப்பிடித்து நடத்தியிருக்கிறார்கள் ! கடைப்பிடிக்கக் கற்றுத் தந்திருக்கிறார்கள் !

வேதங்களும், ஆகமங்களும் – புலமைகளும், கவிதைகளும் செய்யுற்களும் உபதேசங்களும் – நன்னெறி காட்டும் வெண்பாக்களும் நோன்பின் மாண்பினையும் – நோன்பு நோற்றோர் மதிப்பினையும் ஏற்றிப் போற்றிப் பாடிப் புகழ்ந்திருக்கின்றன !

இன்று நேற்றல்ல ! என்றைக்கு உலகம் உதயமானதோ அதில் எப்போது மனித இனம் உருவாக்கப்பட்டதோ – அந்த காலகட்டத்திலேயே நோன்பின் தனித்துவம் பெருமை பெற்றது ! ஆதிமனிதர் ஆதம் நபி தொட்டு நோன்பு கடமை கொண்டது ! பிரதித் திங்கள் பதினான்காம் நாளும் – பதினைந்தாம் நாளும் பசித்திருந்து பக்தி கொள்ளும் கடமையை – ஆதம் நபிகளாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஆரம்பக் கடமையாக்கினான் !

அன்று தொடர்ந்த நோன்பு இன்று வரை – ஏன் இனியும் இந்தப் பாருலகை ஆட்சி செய்யும் திறன் பெற்று நிற்கிறது !

மனித இனம் பெருகியது ! மனிதக் குடும்பங்கள் பெருகி நின்றன ! மனிதச் சமுதாயம் உருவானது ! மனிதச் சம்பிரதாயங்களும் உருமாறிப் போனது !

ஆதம் நபிகளாரின் நோன்பு – இடம் மாறித் தடம் மாறி ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தடுமாறித் திசைமாறி – ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வடிவங்களிலே அது படிந்து விட்டது. உலகில் வாழும் மனிதச் சமுதாயம் ஒவ்வொரு வகைகளிலே – வெவ்வேறு வடிவங்களிலே இன்று நோன்பைக் கடைப்பிடிக்கிறது !

நோன்பின் வடிவங்கள் வேறுபட்டிருக்கிறதே தவிர அதன் மாண்பும் மரியாதையும் இறைவனை நோக்கியே வீறுநடை போட்டுச் சென்று கொண்டிருக்கிறது !

உண்ணும் முறைகளும் – உபவாச நேரங்களும் எண்ணிப் பார்க்கையில் வகைவகையாயிருந்தாலும் நோக்கமும் தாக்கமும் இறை அன்பின் ஏக்கத்திற்கே என்பதில் யாரும் வேறுபட்டுப் பேசவில்லை ! மாறுபட்டு நிற்கவில்லை ! கூறுபோட்டுப் பிரியவில்லை! எண்ணங்கள் எல்லாம் இறை அன்பை நோக்கியே தான் நிற்கிறது !

ஏனென்றால் இறைவன் அன்பைத் தேடிப் பெறும் விஷயத்தில், உலகினர் மத்தியிலே பேதமில்லை ; பிளவுமில்லை ; உண்ணா நோன்பு ஒரு நாள் இறைவனின் நெஞ்சக் கதவைத் தட்டும் என்பதில் எல்லோருக்கும் மனமொத்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையின் பாதையிலே தான் உலக மக்கள் அனைவரும் உபவாசம் எனும் உண்ணா நோன்பை ஒவ்வொரு வகையாகக் கடைப் பிடித்து வாழுகிறார்கள் !

இறைவனின் அன்பு வேண்டும் ; அவனின் அருள் வேண்டும் ; அவன் தரும் பொருள் வேண்டும் ; சீர்மிகு செல்வம் வேண்டும் ; சிறப்பு மிகு செல்வாக்கு வேண்டும் ; சிதராத குடும்பம் வேண்டும் ; செழிப்பான மக்கள் வேண்டும் ; புகழ் பெரும் கல்வி வேண்டும் ; பயம் இல்லா வீரம் வேண்டும் ; பெரும் வீட்டிலே வாழ வேண்டும் ; வாழும் நாட்டையே ஆள வேண்டும் … இப்படியாகப் பற்பல நோக்கங்களை நெஞ்சிலே சுமந்து திரியும் மனிதன் தான் கொண்ட கொள்கையில் தொய்வு தெரியும் போது – அல்லது அதில் ஒரு சோதனை வரும் போது இறைவனை எண்ணுகிறான் – இதயத்தை இறைவனுக்காகக் காணிக்கை செய்கின்றான் ! தான் ஒரு சிறு தியாகத்தைக் கடை பிடிக்கத் துணிகின்றான் ! தன்னைத்தானே ஒரு கட்டுப்பாட்டில் பின்னிப் பிணைத்துக் கொள்ளுகின்றான் !

இப்படிப்பட்ட காணிக்கையை, கடமையை, தியாகத்தை கட்டுப்பாட்டை ஏற்கத் துடிக்கும் மனிதன் உண்ணாமல் பசித்திருக்கும் நோன்பைத்தான் முதல் நிலையாக மகிழ்வுடன் கடைப்பிடிக்க ஆசைப்படுகின்றான் !

ஏனென்றால் பசியின் பெருமையே பெருமை ! அதற்கு ஈடான இறைவணக்கம் என்ன இருக்க முடியும்? பணத்தால் சாதிக்காத ஒன்றை மனிதன் பசியால் சாதித்து விடுகிறானே? பட்டத்தால் சாதிக்க முடியாத ஒன்றை மனிதன் பசியால் சாதித்து விடுகிறானே?

பிஞ்சுக் குழந்தை – கெஞ்சிக் கேட்கும் கிடைக்காத ஒரு பொருளை – ‘சாப்பிட மாட்டேன் போ…’ என்று பெற்றோரை மிரட்டி பட்டினி கிடந்து தான் விரும்பிய பொருளைப் பெற்றுக் கொள்கிறது ! இதை வீட்டிலே பார்க்கிறோம் !

கட்டிய மனைவி கேட்கும் கிடைக்காத நகையை – கணவனுடன் சாப்பிடாமல் பசி கிடந்து முகம் வாடி – உடல் வதங்கி கணவனின் நெஞ்சத்தை நெகிழ வைத்து உடனடியாகப் பெற்றுக் கொள்கிறாள் ! இதை நாட்டிலே பார்க்கிறோம் !

போராடியும் கிடைக்காத சுதந்திரத்தை ஒரு நாட்டில் தியாகிகள் உண்ணா விரதம் இருந்து – பசி கிடந்து பட்டினி கிடந்து பெற்று விடுகிறார்கள் ! இதை ஏட்டிலே பார்க்கிறோம் !

இப்படி இப்படியாக எத்தனையோ சின்னஞ்சிறு விஷயங்களையும் – பென்னம் பெரிய காரியங்களையும் – பசிகிடந்து சாதித்தோரின் சரித்திரப் பட்டியல்களை படிக்கிறோம் – பார்க்கிறோம் – கேட்கிறோம் !

நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல், அந்தப் பசிக்கும் பட்டினிக்கும் உண்டு ! பிள்ளை பசித்திருக்கப் பெற்றோர் சகிக்க மாட்டார் ! கணவன் பசித்திருக்க மனைவி பொறுக்க மாட்டாள் ! மனைவி பசித்திருக்க கணவன் விரும்ப மாட்டான் ! மக்கள் பசித்திருக்க மன்னன் தாங்க மாட்டான் !

“தனியொரு மனிதனுக்கு உணவிலை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று பாடி வைத்தான் புரட்சி கவிஞன் ! அப்படிப்பட்ட பசி உணர்வை ஏற்று மனிதன் புனிதனாக வாழ வேண்டும் என்ற நினைப்பில்தான் இஸ்லாம் – இஸ்லாமியர்களுக்கு வருடத்தில் ஒரு மாதம் பகலில் மட்டும் நோன்பிருக்கும் கடமையைக் கட்டாயமாக்கியது.

பசியின் உணர்வுதனைத் தெரிந்த மனிதன் – பசியால் வாடிக்கிடப்பவனைப் பார்த்து விட்டுச் சும்மா போக மாட்டான் பசித்தவன் பசியடங்கும் வரை அவனைப் புசிக்கச் செய்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான் !

பசியின் உணர்வைத் தெரிந்த ஒரு நாடு பட்டினியால் வாழும் ஒரு நாட்டு மக்களைப் பார்த்து விட்டு விட்டு வாளாயிருக்காது ! அவர்களுக்குப் போர்கால நடவடிக்கை எடுத்துப் பணி செய்து விட்டுத்தான் ஓயும் !

ஒரு மனிதனின் பசியை இன்னொரு மனிதனாலேயே சகிக்க முடியவில்லை எனும் போது நம்மைப் படைத்து பரிபாலிக்கும் கருணை இறைவன் பசித்திருப்பதையும் ஏன் ஓர் கடமை ஆக்கினான் ? காலமெல்லாம் புசித்து மகிழ்பவனும் கஷ்டத்தில் பசித்திருப்பவனின் உணர்வை உணர்ந்து கொள்ளத்தான்.

இப்படிப் பசியின் உணர்வைத் தெரிந்த மனிதர்கள் பிற மனிதர்களின் துயர் துடைக்கத் துணிவு பெற்று விடுகிறார்கள். மனிதப் புனிதனாகிறார்கள் ! அருள் தரும் வெற்றிப் படிகளில் விரைந்து ஏறுகிறார்கள் ! பயபக்தியுள்ள முத்தக்கீன்களாக ஜெயசீலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

எனவே தான் இல்லாதார் உணர்வை இருப்பவர் தெரிந்து பசித்திருந்து இறைவனை நெருங்கும் உறவுப்பாலத்தை அல்லாஹ் அமைத்துத் தந்திருக்கிறான் !

( மலேஷியா வானொலி ஆறில் வழங்கிய உரை )

News

Read Previous

விரதத்தின் நாட்கள் !

Read Next

ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *