லெனினும் இந்தியப் புத்தகங்களும்

Vinkmag ad
லெனினும் இந்தியப் புத்தகங்களும்
ச.சுப்பாராவ்

இந்திய தேசியக் காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி, அனைத்து காங்கிரஸ் மாநாடுகளின் வரவேற்புரை, தலைமையுரை, தீர்மானங்கள், முக்கியமான தலைவர்களின் உரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் போடப்பட்ட ஒரு புத்தகமும் உண்டு. இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சென்னையின் ஜி.ஏ. நடேசன் & கோ என்பது சுவாரஸ்யமானது.

லெனின் ஒரு புத்தகக் காதலர் என்பதும், ஒரு பிறந்த நாளுக்கு புத்தகங்கள்தான் பரிசாக வேண்டும் என்று அவர் சொன்ன போது அவருக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன என்றும் நாம் படித்திருக்கிறோம். லெனினுக்கு இந்தியா மீது தனி அக்கறை உண்டு. இந்தியாவின் சமகால நிகழ்வுகளை அவர் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். இந்தியாவை, அதன் பிரச்சனைகளை அறிந்து கொள்ள அவர் இந்தியா பற்றி அவரது காலத்தில் வெளியான புத்தகங்களையும் உடனுக்குடன் படித்து முடித்தார் என்பது வியப்பான செய்தி.

லெனின் இன் இண்டியா என்று ஆனந்த குப்தா எழுதிய அருமையான நூலில் லெனினது நூலகம் பற்றியும், அதில் இந்தியா பற்றி அவர் சேகரித்து, படித்து முடித்த நூல்கள் பற்றியும் மிகச் சுவையான, அரிய தகவல்கள் உள்ளன. பொதுவாகவே, லெனின் தன்னைச் சந்திக்கும் இந்தியா்களிடம், ‘இந்தியாவிற்குச் சென்று, வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள்’, என்பாராம். ‘இந்தியாவில் விவசாயிகள் சங்கங்கள் ஏதேனும் இருந்தால், அவை பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரியுங்கள்’ என்பாராம். ஐரோப்பாவில் இருந்த இந்தியர்களை அவர் இந்தியச் சூழல் பற்றி நிறைய எழுதவேண்டும் என்று வேண்டுவார். தமது மக்களையும் இந்தியா பற்றி நிறைய படிக்க வேண்டும் என்பாராம். 1921இல் அபனி முகர்ஜி மலபார் போராட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதி லெனினுக்கு அனுப்பியிருக்கிறார். ‘மிக அருமை’ என்று சொல்ல முடியாது என்றாலும் கூட, இந்தியத் தோழர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் நாம் நிறைய இடம் தரவேண்டும் என்ற குறிப்போடு, அதை பிராவ்தாவில் பிரசுரிக்க அனுப்பினார் லெனின்.

1921 பிப்ரவரி 14ஆம் நாள் அப்துல் ராப் பெஷாவரி லெனினைச் சந்தித்து அரை மணி நேரம் உரையாடினார். அப்போது லெனின் இந்தியாவைப் பற்றி தான் அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கேட்டார். அப்துல் ராப் 38 புத்தகங்கள் கொண்ட ஒரு பட்டியலை பிப்ரவரி 16ஆம் தேதி லெனினுக்கு அனுப்பினார். மறுநாளே. லெனின் லண்டனில் சோவியத் வர்த்தகக் குழுவின் தலைவராக இருந்த எல்.பி.கிராசினுக்கு அந்தப் புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு கடிதம் எழுதினார்.  அவற்றில் சில லண்டனிலும், சில இங்கிலாந்திலும் வாங்கப்பட்டன. அதில் இந்திய தேசியக் காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி, அனைத்து காங்கிரஸ் மாநாடுகளின் வரவேற்புரை, தலைமையுரை, தீர்மானங்கள், முக்கியமான தலைவர்களின் உரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் போடப்பட்ட ஒரு புத்தகமும் உண்டு. இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சென்னையின் ஜி.ஏ. நடேசன் & கோ என்பது சுவாரஸ்யமானது.

1918 மார்ச் முதல் 1922 டிசம்பர் வரை லெனின் வசித்து வந்த வீடு புத்தகக் காதலர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். எளிமையான அந்த வீட்டில், சுவர்களின் ஒரு அங்குல இடத்தையும் வீணடிக்காது, லெனின் சேகரித்து, படித்த புத்தகங்களை நிரப்பியிருக்கிறார்கள். அதுபோக, சுழலும் புத்தக அலமாரிகள் பலவற்றிலும் மேலும், மேலும் புத்தகங்கள்.

லெனினது இருக்கைக்குப் பின்பக்கத்தில் லாலா லஜபதி ராய் எழுதிய இங்கிலாண்ட்’ஸ் டெப்ட் டு இண்டியா, ஏ.சி.மஜும்தார் எழுதிய இண்டியன் நேஷனல் எவெல்யூஷன், ரிப்போர்ட்ஸ் அண்ட் ரெசல்யூஷன்ஸ் அண்ட் பிரெசிடென்ஷியல் அட்ரஸஸ் ஆப் இண்டியன் நேஷனல் காங்கிரஸ் என்ற இரு முக்கியமான புத்தகங்கள். அவற்றை அக்காலத்தில் இங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களே படித்திருப்பார்களோ, என்னமோ, நம் தோழர் படித்து விட்டார்!லெனினது அந்த நூலகத்தின் கேட்லாக் மட்டுமே 800 பக்கங்கள்! இதில் 8400க்கும் அதிகமான புத்தகங்கள்! இவற்றில் இந்தியஅரசியல், இலக்கியம், மதம் சார்ந்த நூல்கள் நிறைய உண்டு. இவற்றில் தாகூர் எழுதிய புத்தகங்களும், தாகூரைப் பற்றிய புத்தகங்களும் அதிகம். காரணம், லெனினது நெருங்கிய நண்பர்களான மக்சிம் கார்க்கியும், கல்வியமைச்சர் லுனாசார்ஸ்கியும் தாகூரின் மிகப் பெரிய ரசிகர்கள். எம்.என்.ராய் எழுதிய நூல்கள் நிறைய இருந்தன. அவற்றில் பல எம்.என்.ராய் தானே லெனினுக்குப் பரிசாகத் தந்தவை. ஸ்பீச்சஸ் அண்ட் ரைட்டிங்ஸ் ஆஃப் சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால் எழுதிய தி நியூ எகனாமிக் மெனாஸ் என்று காங்கிரஸின் அன்றைய சமகாலத் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை லெனின் படித்திருப்பது அவரது நூலகத்தைப் பார்த்தால் தெரிகிறது.

1919இல் லெனினைச் சந்தித்து உரையாடிய இந்தியப் புரட்சியாளரான ராஜா மகேந்திர பிரதாப் எழுதிய நூலான ரிலிஜன் ஆஃப் லவ் என்ற நூல் லெனினின் சேகரிப்பில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தான் லெனினுக்குப் பரிசளித்தபோது, அவர் சிரித்தபடியே நான் ஏற்கனவே இதைப் படித்துவிட்டேன் என்று சொன்னதைக் கேட்டு தான் அசந்து போய்விட்டதாக மகேந்திர பிரதாப் குறிப்பிட்டுள்ளார். லெனினின் சேகரிப்பில் மகேந்திர பிரதாப்பின் நூல்கள் நிறைய உள்ளன. தாக்கூர் தயானந்த தேவ் என்ற இந்து சாமியாரின் சீடர் அலோகானந்தா மஹாபாரதி என்பவர் எழுதிய தி மாஸ்டர்‘ஸ் வேர்ல்ட் யூனியன் ஸ்கீம் என்ற புத்தகமும் லெனினின் நூலகத்தில் இருக்கிறது. இது இந்தியாவில் சில்சாரில் உள்ள அருணாசல் மிஷன் என்ற ஆசிரமத்தின் வெளியீடு.

இன்று இந்த புத்தகத்தை நாம் அமேஸானில் மிக எளிதாக வாங்கிவிட முடியும். நூறாண்டுகளுக்கு முன் லெனின் யாரிடம் சொல்லி வைத்து எப்படி வாங்கினாரோ? நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.1922 ஜனவரியில் லெனின் நோட்ஸ் ஆஃப் எ பப்ளிசிஸ்ட் என்ற நூலை எழுத ஆரம்பித்தார். அவரது பணிச்சுமை, உடல்நலம், நமது துரதிருஷ்டம் எல்லாம் சேர்ந்து அவரால் அதை முடிக்க முடியாமல் போனது. இந்த நூல் எதைப் பற்றியது என்பது பற்றிய குறிப்பில், லெனின் ‘ஹிந்து டால்ஸ்டாயைப் பற்றி’ என்று எழுதி வைத்திருக்கிறார். அவர் குறிப்பிடுவது நமது மஹாத்மா காந்தியடிகளை என்று அறியும் போது மெய்சிலிர்க்கிறது!

News

Read Previous

அழவிட்டுப் போனதெங்கே !

Read Next

நமது புனித பூமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *