லிசே மைட்னர் – அணுப்பிளவுக்கு விளக்கம் அளித்த விஞ்ஞானி

Vinkmag ad
அறிவியல் கதிர்

லிசே மைட்னர் – அணுப்பிளவுக்கு விளக்கம் அளித்த விஞ்ஞானி
பேராசிரியர் கே. ராஜு

லிசே மைட்னர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. நோபல் பரிசு வழங்கும் குழுவே அவரை ஒதுக்கிவிட்டு அவருடன் சேர்ந்து பணிபுரிந்த அவரது கூட்டாளிக்கு நோபல் பரிசை அளித்தது. ஆனால் அணுப்பிளவுக்கு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தை மைட்னரால்தான் அளிக்க முடிந்தது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது.
வியன்னாவில் 1878 நவம்பர் 7 அன்று பிறந்தார் மைட்னர். அக்காலத்தில் பெண்கள் படிப்பது வழக்கம் இல்லையென்றாலும் மைட்னரின் பெற்றோர் அவரைப் படிக்க வைத்தனர்.  புனித நாளான சபாத் அன்று துணி நெய்யக்கூடாது.. அப்படிச் செய்தால் வானம் இடிந்து விழுந்துவிடும் என அவர் சிறுமியாக இருந்தபோது அவரது பாட்டி  பயமுறுத்தினார். மைட்னர் அதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார்.  பூத்தையல் வேலை செய்ய ஊசியைக் கோத்தபடி வானத்தைப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு தையல் போட்டுவிட்டு மீண்டும் வானத்தைப் பார்த்தார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. தையல் வேலையைத் தொடர்ந்தார்!  எதையும் பரிசோதித்து ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை அவருக்குள் சிறு வயதிலேயே தோன்றிவிட்டது.
1905ஆம் ஆண்டில் வியன்னா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற இரண்டாவது பெண் மைட்னர். அவரது இயற்பியல் பேராசிரியர் லுட்விக் போல்ட்ஸ்மேனது வகுப்புகளின் காரணமாக இயற்பியல்  என்பது இறுதி உண்மையைத் தேடும் ஒரு போராட்டம் என்ற பார்வையைப் பெற்றார். முதல் உலகப் போரின்போது எக்ஸ்ரே கருவியைக் கையாளும் செவிலியராகப் பணிபுரிந்தார். 1916ஆம் ஆண்டில் அதை விட்டு ஆய்வுப் பணிக்குத் திரும்பினார். மாக்ஸ் பிளாங்க்கின் உதவியாளரானார். ஓட்டோ ஹானுடன் சேர்ந்து பல ஐசடோப்புகளைக் கண்டுபிடித்தார். பின்னர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் முதல் பெண் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அடால்ஃப் ஹிட்லர் 1933ல் ஜெர்மனியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு மைட்னர் உட்பட பல யூத விஞ்ஞானிகள் ஜெர்மனியைவிட்டு ஓடவேண்டியிருந்தது. மைட்னர் பாதுகாப்பாக ஸ்வீடன் சென்றடைய நீல்ஸ் போர் எல்லா ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்தார். ஸ்டாக்ஹோமில் சீக்பான் நிறுவனத்தில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் மைட்னர்.

பேரியம், கிரிப்டான் ஆகிய இரு தனிமங்களாக யுரேனியம் கரு பிளவுபடுவது எப்படி என்பதை பிற விஞ்ஞானி களால் புரிந்து கொள்ள முடியவில்லை. E = mc^2என்ற ஐன்ஸ்டீனுடைய பிரபலமான சமன்பாட்டின்படி யுரேனியம் கரு பிளவுபடும்போது பொருள் ஆற்றலாக மாறி வெளிப்படும் என மைட்னர் விளக்கம் அளித்தார். பரிசோதனையைத் தொடர்ந்து செய்து அணுப்பிளவு நடப்பதை உறுதி செய்துகொண்ட ஓட்டோ ஃப்ரிஸ் அதற்கு அணுப்பிளவு (nuclear fission)  என்று பெயரிட்டார். அதற்குப் பிறகு மைட்னரும் ஃப்ரிஸ்ஸும் இணைந்து அணுப்பிளவு பற்றி எழுதிய பல கட்டுரைகளை நேச்சர் இதழ் வெளியிட்டது.

     1944 வேதியியலுக்கான நோபல் பரிசு மைட்னரின் சக ஆராய்ச்சியாளரான ஓட்டோ ஹானுக்கு அளிக்கப்படடது. ஆனால் அணுப்பிளவு குறித்த உண்மைகளை வெளியுலகிற்குக் கொண்டுவந்த மைட்னருக்கும் ஓட்டோ ஃப்ரிஸ்ஸிற்கும் அந்தப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் 1966ஆம் ஆண்டில் ஹான், ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மான், மைட்னர் ஆகிய மூவருக்கும் என்ரிக்கோ ஃபெர்மி பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. 1949ல் மைட்னருக்கு மாக்ஸ் பிளாங்க் மெடல் கிடைத்தது. 1997ல் அவரைக் கௌரவிக்க 109வது தனிமத்திற்கு `மைட்னரியம் எனப் பெயரிடப்பட்டது. சந்திரனிலும் வெள்ளி கிரகத்திலும் உள்ள எரிமலைக் குழிகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. சூரியனைச் சுற்றிவரும் சிறு கோள் ஒன்றுக்கு 6999 மைட்னர் எனப் பெயரிடப்பட்டது. 1946ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்குச் சென்றபோது இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. தன்னுடைய பர்சில் ஒரு அணுகுண்டை எடுத்துக் கொண்டு இவர் ஜெர்மனியை விட்டுப் புறப்பட்டார் எனப் புகழாரம் சூட்டினர். இதில் முரண் என்னவெனில், அணுகுண்டு ஆராய்ச்சியில் மைட்னர் ஈடுபடவே இல்லை. அமெரிக்காவில் அணுகுண்டு தயாரிக்கத் தொடங்கப்பட்ட மன்ஹாட்டன் திட்டத்தில் மைட்னர் சேர மறுத்தார். மனிதர்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களைத் தயாரிப்பதைவிட நிரந்தரமான சமாதானத்தை விரும்புவது எப்போதுமே நல்லது என்றார் மைட்னர். முதிர்ந்த வயதிலும் பரவலாகப் பயணம் செய்து மாணவர்களைச் சந்தித்து உங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரவல்லது அறிவியலே. உண்மையை நோக்கிய பயணத்தில் உங்களை ஈடுபட வைப்பதும் அறிவியலே எனப் பிரச்சாரம் செய்தார். இவரை ஜெர்மனியின் மேரி கியூரி என்றார் ஐன்ஸ்டீன். தனது  1968ஆம் ஆண்டில் 89வது வயதில் மரணமடைந்தார் மைட்னர்.
(உதவிய கட்டுரை : 2016 நவம்பர் ட்ரீம் 2047 இதழில் கிருஷ்ணமூர்த்தி கோமஜோஸ்யுலா எழுதியது).

News

Read Previous

சிறைபட்ட மழை…….

Read Next

பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’

Leave a Reply

Your email address will not be published.