மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா

Vinkmag ad
‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வானமே எல்லை. பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வாய்ப்புகளும் அதிகம்.
வெளிநாட்டு மொழிகளைப் படித்த மாணவர்களுக்கு சுற்றுலாத் துறை, பொழுதுபோக்குத் துறை, ஊடகங்கள், மக்கள் தொடர்புத் துறை மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்காகவே இன்றைய மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாட்டு மொழிகளை நமது மாணவர்களும் இளைஞர்களும் எதற்காகப் படிக்கிறார்கள்? அவர்களது பார்வையில் காரணங்கள் இதோ…
ஃபிரெஞ்ச்
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டே பிரெஞ்ச் மொழி படித்து வரும் அன்வர்: “பல கோடி மக்களால் விரும்பி பேசப்படும் மொழி ஃபிரெஞ்ச். இந்த மொழியைத் படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம். உரிய கல்வித் தகுதியோடு, ஃபிரெஞ்சும் தெரிந்திருந்தால், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொண்டால் மொழிபெயர்ப்பாளர் ஆகலாம்.
செல்போன் கம்பெனி, வாகனத் தயாரிப்புக் கம்பெனிகளிலும் வேலை கிடைக்கும். சென்னையில் உள்ள அலியான்ஸ் பிரான்சேஸ் அமைப்பு நடத்தும் பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர்ந்து பிரெஞ்ச் மொழியைப் படித்து வருகிறேன். ஆங்கில இலக்கியம் படிக்கும் நான் பிரெஞ்ச் மொழியிலும் நல்ல புலமை பெற்றால் நல்ல வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பிரெஞ்ச் மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறேன்.”
ஜெர்மன்
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துக்கொண்டே பகுதி நேரமாக ஜெர்மன் மொழியைக் கற்று வரும் சீனிவாசன்: “ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறை பணிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது ஆசை. எனது வேலைவாய்ப்பு சாத்தியங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே ஜெர்மன் மொழியைக் கற்று வருகிறேன். சுற்றுலாத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஐரோப்பியர்கள்.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஏற்ற நாடு ஜெர்மனி. எனவே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டால் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்த மொழியைக் கற்று வருகிறேன். ஜெர்மனுடன் தமிழிலும் புலமை பெற்றவராக இருந்தால், ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றலாம்.”
ஸ்பானிஷ்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டே ஸ்பானிஷ் படித்து வரும் ப்ரீத்தி:
“ஸ்பெயின் நாட்டில் பேசப்படும் மொழி தான் ஸ்பானிஷ். உலகில் 40 கோடிக்கும் அதிகமானோர் இந்த மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர் என்று இணையதளத்தில் படித்தேன். ஆச்சரியமாக இருந்தது. அதனால் பொழுதுபோக்காக இதனைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஐ.நா. சபையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஸ்பானிஷும் ஒன்று. இந்த மொழி தெரிந்தால், அமெரிக்காவில் நல்ல வேலை கிடைக்கும்.
என் அண்ணன் ஸ்பானிஷ் படித்துவிட்டு அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். நானும் விரைவில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். அதனால் ஸ்பானிஷ் படிக்கிறேன். ஸ்பானிஷ் தெரிந்திருந்தால், ஸ்பெயின் நாட்டுத் தொலைக்காட்சியிலும் வேலை காத்திருக்கிறது. ஸ்பானிஷ் மொழியை முழுமையாகக் கற்றுக் கொண்டவர்களுக்கு, இன்ஸ்டிட்யூட்டோ இஸ்பானியோ நிறுவனத்தின் கிளைகளில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்புள்ளது.”
ஜப்பானீஸ்
ஜெயா பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் டெக்னலாஜி படித்துக் கொண்டே ஜப்பானிய மொழியைப் படித்து வரும் ரேடியோ ஜாக்கி ரோகிணி: “தொழில் துறையில் சிறந்து விளங்கும் நாடு ஜப்பான். தொழில்துறையில் தனித்து செயல்படவேண்டும், நம் திறமை வெளிப்பட வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அதற்காகவே ஜப்பானிய மொழியைக் கற்று வருகிறேன். ஜப்பானிய மொழி கற்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். காரணம், அந்த மொழியில் எழுத்துக்கள் எல்லாம் குறியீடுகளாக இருக்கும். நாம் சாலை விதிகளை கடைபிடிக்க நமக்கு குறியீடுகள் உள்ளதே, அதேபோல அவர்கள் மொழி குறியீடுகளை உள்ளடக்கியது. தொழில்நுட்பத்துடன் ஜப்பானிய மொழி தெரிந்திருந்தால், அனிமேஷன், கிராபிக்ஸ் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகம். ஜப்பானிய மொழி தெரிந்தவர்களுக்கு சிறப்பு விசா வழங்குகிறது அந்த நாடு.”
கொரியன்
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்துக் கொண்டே கொரிய மொழி கற்று வரும் கார்த்திக்: “இன்று மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களும் கொரியாவில் தயாரித்ததுதான். அதனால் எனக்கு கொரிய மொழி மீது ஈடுபாடு வந்தது. கொரிய மொழிக்கு என்று தனியாக எழுத்துகள் இல்லாமல் இருந்தது. சீன மொழியின் குறுக்கெழுத்துக்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஹாங்குல் என்னும் எழுத்து முறை உள்ளது. ஹூண்டாய், சாம்சங், எல்.ஜி. போன்ற பெயர் பெற்ற நிறுவனங்கள் அனைத்துமே கொரிய நாட்டு நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழிற்சாலைகள் உண்டு. கொரிய மொழி தெரிந்திருந்தால், செல்போனில் இன்ஸ்டால் செய்யும் சாஃப்ட்வேர்கள் தயாரிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். கொரிய மொழி தெரிந்திருந்தால், யார் வேண்டுமானாலும் இந்தியாவிலிருக்கிற கொரிய நிறுவனங்களில் பணிபுரியலாம். இன்ஜினியரிங் படிப்புடன் கொரிய மொழியையும் கற்றுக் கொண்டால் எனக்கு நல்ல வேலைவாய்ப்புக் கிடைக்கம் எனக் கருதுகிறேன். அதனால் கொரிய மொழியைப் படித்து வருகிறேன்.”
டச்சு
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டே டச்சு மொழி படித்து வரும் வினோத்: “டச்சு மொழி தெரிந்தவர்களுக்கு, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுலாத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். மலேசியாவில்கூட டச்சு மொழி பேசுவதால், அங்கும்கூட நாம் வேலைக்கு முயற்சி செய்யலாம். ஆராய்ச்சிகளுக்கான பல்கலைக்கழகங்கள் நிறைந்த நாடு நெதர்லாந்து. உயிரியல், வேதியியல், இயற்பியல், நுண்ணறிவியல், நானோ டெக்னாலஜி என ஆராய்ச்சி சார்ந்த பல துறைகளுக்கான படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் அந்த நாட்டில் அதிகம். எனவே, டச்சு மொழியை ஆர்வத்துடன் கற்று வருகிறேன்.” என்கிறார் வினோத்.

News

Read Previous

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

Read Next

தற்கொலை இஸ்லாத்தில் தடை

Leave a Reply

Your email address will not be published.